2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் 63 சதவீத வாக்களிப்பு பதிவு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 08 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித், கே.எஸ்.வதனகுமார்)

கிழக்கு மாகாண சபைக்கான மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் வாக்களிப்பு சுமூகமான முறையில் நடைபெற்றதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்தார்.

அதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 63 சதவீதமான வாக்களிப்பு பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு, கல்குடா, மட்டக்களப்பு ஆகிய மூன்று தொகுதிகளிலும், காலை முதல் வாக்களிப்பு குறைந்தளவாக இருந்த போதும் பகல் நேரத்துக்கு பின்னர் வாக்களிப்பு வீதம் அதிகரித்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 65 வீதம் வரையில் வாக்களிப்பு நடைபெற்றுள்ளதாக தேர்தல் அலுவலகத் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

காலை முதல் அசம்பாவிதங்கள் இல்லாதிருந்த போதும், மட்டக்களப்பு, காத்தான்குடி, மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களில் இறுதி நேரத்தில் ஒரு சில அசம்பாவிதங்கள் நடைபெற்றன. இருப்பினும், வாக்குப் பெட்டிகள் யாவும் குறித்து நேரத்துக்குள் வாக்கெண்ணும் நிலையங்களை வந்தடைந்தன என்று அவர் குறிப்பிட்டார்.

இரவு 7 மணி முதல் வாக்கெண்ணும் வேலைகள் யாவும் ஆரம்பமாகின. முடிவுகள் நாளையதினம் பகலுக்குள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய முக்கிய மூன்று கட்சிகளுக்கிடையிலேயே அதிகமான போட்டி நிலவுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்களும் 38 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 11 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில், 3,47,099 பேர் வாக்களித் தகுதி பெற்றுள்ளனர். கல்குடா தேர்தல் தொகுதியில் 100,616 வாக்காளர்களும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 162,451 வாக்காளர்களும், பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 84,032 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .