2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

அச்சுறுத்தல் இல்லாதிருந்திருந்தால் மட்டக்களப்பில் த.தே.கூ. 8 ஆசனங்களை பெற்றிருக்கும்: பொன்.செல்வராசா

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 13 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி,ரி.லோஹித்)

'மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லாமல் இருந்திருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு அல்லது எட்டு ஆசனங்களை பெற்றிருக்கும்' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

'தேர்தல் காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மட்;டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்தனர். பலதரப்பட்ட இன்னல்களுக்கு மத்தியிலேயே பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளுக்குள் எமது வேட்பாளர்கள் நுழைவதற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. குறிப்பாக வெல்லாவெளி பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளுக்குள் நுழைவதற்கு எமது வேட்பாளர்களுக்கு அச்சுறத்தல் விடுக்கப்பட்டது.

வெல்லாவெளி பிரதேசத்தில் வைத்து எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களின் இரண்டு வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன. இவ்வாறு பாரிய அச்சுறுத்தல்களுக்கு எமது வேட்பாளர்கள் முகம் கொடுத்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் எமது வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவர்கள் பிரச்சாரம் செய்யமுடியாதவாறு முடக்கப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த பிரச்சார பிரசுரங்கள் பறிக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர்.

இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெற்று ஆறு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் எமது வேட்பாளர்களையும் வெற்றியடையச் செய்துள்ளனர்.

இதற்காக எமக்கு வாக்களித்த அனைத்து தமிழ் மக்களுக்கும் தபால் மூலம் வாக்களித்த அரசாங்க தமிழ் அதிகாரிகளுக்கும் மட்டக்களப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன்.

தேர்தல் காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லாமல் இருந்திருந்தால் அவர்கள் இன்னும் சுதந்திரமாக தேர்தல் பிரச்சார கடமைகளில் ஈடுபட்டிருப்பார்கள்.

அதன் மூலம் ஏழு அல்லது எட்டு ஆசனங்களை பெற்றிருப்போம் எனினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாம் பெற்ற வெற்றிக்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றிகளை கூறிக் கொள்கின்றேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் வெற்றிக்காக உழைத்தார்களே தவிர, அவர்களுக்கு இத்தேர்தலில் நிர்வாக அதிகாரம் கொடுக்கப்படவில்லை. அப்படியிருந்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் அமோக வெற்றி பெற வேண்டுமென்பதில் நான் குறியாக இருந்தேனே தவிர, நான் எந்தச் சதியும் செய்யவில்லை.
 
கிழக்குத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனங்கள் திட்டமிட்டு குறைக்கப்பட்டுள்ளதாக கசிந்துள்ள தகவல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன.; செல்வராசா இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
'அண்மையில் நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அதிகாரம் பெற்ற முகவராக கட்சியின் முதன்மை வேட்பாளரான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் கட்சியின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
 
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் வெற்றிக்காக உழைத்தார்களே தவிர அவர்களுக்கு இத்தேர்தலில் நிர்வாக அதிகாரம் கொடுக்கப்படவில்லை. இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைவர்கள் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்யும்போது அவர்களுக்கான பிரயாண ஒழுங்குகளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே செய்திருந்தார்கள்.
 
இந்நிலையில், தேர்தல் தினமாகிய 08.09.2012ஆம் திகதியன்று பட்டிருப்புத் தொகுதிக்கு பொறுப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனும் கல்குடா தொகுதிக்கு பொறுப்பாக சீ.யோகேஸ்வரனும் செயற்பட மட்டக்களப்பில் பொன். செல்வராசா ஆகிய நான் ஒரு செயற்பாட்டு அறையில் இருந்துகொண்டு மாவட்டத்தின் பல பாகங்களிலுமிருந்து வருகின்ற முறைப்பாடுகளைத் தொகுத்து பொலிஸாருக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் அதிகாரிகளுக்கும் முறையிடுவதென தீர்மானித்திருந்தோம்.
 
எனவே, தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் 3 பேரும் வாக்களிப்பு தினமாகிய அன்று ஆற்றப்படவேண்டிய கடமைகளை எங்ஙளுக்குள் பகிர்ந்துகொண்டோம்.
 
அதன் பிரகாரம் தேர்தல் தினத்தன்று நான் (பொன் செல்வராசா எம்.பி.;) மட்டக்களப்பிலுள்ள எனது காரியாலயத்தில் இருந்துகொண்டு மாவட்டத்தின் பல பாகங்களிலுமிருந்து வருகின்ற தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்களை பொலிஸாருக்கும் சம்பந்தப்பட்ட தேர்தல் தொடர்பான அதிகாரிகளுக்கும் தொகுத்து வழங்கினேன்.
 
இந்த வகையில் அன்றையதினம் 100 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் எனக்கு கிடைத்தன.
 
இது இவ்வாறிருக்க குறித்த செய்தியில்; தெரிவிக்கப்பட்டுள்ளது நான் எனது வாக்கை அளித்துவிட்டு கட்சிக்காக எதுவும் செய்யாமல் வீட்டில் வந்திருந்ததாக. இது வெறும் அப்பட்டமான பொய்யாகும்.
 
இது தொடர்பான உண்மையை அறிய வேண்டுமானால் நான் தொடர்புகொண்ட பொலிஸாரிடமும் தேர்தல் அதிகாரிகளிடமுமிருந்து அறிந்துகொள்ளலாம்.
 
தேர்தல் சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அதிகாரமளிக்கப்பட்ட முகவராகவோ அல்லது கணக்கெடுப்பாளராகவோ நியமிக்கப்படலாகாது. இதன் காரணமாக வாக்கெடுப்பு நிலையத்திற்கு நாங்கள் சட்டப்படி நுழையமுடியாது.
 
வாக்கெடுப்பு தினமன்று எமது கட்சி சார்ந்த கணக்கெடுப்பாளர்களாக 142 பேரை நாங்கள் நியமித்திருந்தோம். அவர்கள் தங்களுடைய கடமைகளை சரிவரச் செய்தார்கள்.
 
அடுத்தநாள் அதிகாலை (09.09.2012) நான் கணக்கொடுப்பு நிலையத்திற்கு சென்றேன் அதிகாலை என்பதாலோ என்னவோ நான் நாடாளுமன்ற உறுப்பினரென தெரிவித்தபோது உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.
 
ஆனால் 15 நிமிடங்கள் கழித்து மீண்டும் நான் அங்கு உள்ளே சென்றபோது என்னை உள்ளே செல்ல அனுமதிக்காமல் திருப்பியனுப்பினார்கள்.
 
நான் உள்ளே நுழையும்போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வும் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனும் வாக்கெண்ணும் நிலையத்தினுள் இருந்தார்கள். அப்பொழுது அவர்கள் எனக்கு கைகுலுக்க முனைந்த வேளை பதிலுக்கு நானும் கைகுலுக்கினேன். இதில் என்ன தப்பு இருக்கின்றதென்பதை நான் அறியேன். குறித்த செய்தியில் கைகுலுக்கியது பிழையெனவும் எழுதப்பட்டிருந்தது.
 
மேலும் வாக்கெண்ணும் நிலையத்திற்குள் செல்லமுடியாமல் வெளியில் வந்த நான,; முன்னுள்ள மைதானத்தில் காலையிலிருந்து பிற்பகல் 2 மணிவரை அங்கு காத்திருந்தேன். அதேநேரம் வேறெந்த நாடாளுமன்ற உறப்பினர்களும் அங்கு சமூகமளித்திருக்கவில்லை.
 
இறுதியாக எல்லா வாக்குகளும் கணக்கெடுக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டதன் பின் மீண்டும் உள்ளே நான் சென்று வெற்றி பெற்ற எமது கட்சியின் உறுப்பினர்களை மகிழ்ச்சியுடன் வெளியில் அழைத்து வந்தேன். இது புகைப்படங்களுடன் பல செய்திகளில் வெளியாகியிருந்ததை யாவரும் அறிவீர்கள்.
 
இதேநேரம் நான் அன்று காலை 10 மணி தொடக்கம் பிற்பகல்வரை மைதானத்தில் நின்றபொழுது எனது கைத்தொலைபேசி சார்ஜ் இல்லாமல் செயலிழந்த நிலையிலிருந்தது. அதைக்கூட குறித்த செய்தியில் நான் திட்டமிட்டு தொலைபேசியை நிறுத்தி வைத்திருந்ததாக எழுதப்பட்டிருந்தது.
 
ஆகையால் என்னையும் நான் செய்யும் சேவைகளையும் பொறுக்க முடியாத சில அரசியல் விரோதிகள் என்மீதுள்ள காழ்புணர்ச்சியின் காரணமாகவேதான் குறித்த செய்தியை எழுதியுள்ளார்கள் என்பது தெளிவாகின்றது.
 
தேர்தல் காலங்களில் நான் எப்படிச் செயற்பட்டேனென்பதனை எமது கட்சி நன்றாக அறியும். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றிபெற வேண்டுமென்பதில் நாங்கள் அனைவருமே எங்களால் இயன்றளவு முயற்சிகளை மேற்கொண்டோமே தவிர, வெற்றியின் வீழ்ச்சிக்கு துணையாக நாங்கள் எள்ளளவும் செயற்படவில்லை.
 
இனிமேலும் செயற்படமாட்டோமென்பதனை நான் தெரிவித்துக்கொள்கின்றேன்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .