2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

‘தமிழர்களின் சொத்து கூட்டமைப்பு’

Kogilavani   / 2017 பெப்ரவரி 19 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -வா.கிருஸ்ணா

“சிலர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தங்கள் வீட்டுச் சொத்துகள் போல் நினைக்கின்றனர். கூட்டமைப்பு என்பது, இந்த நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களின் சொத்து” என, மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – கல்லடி - முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலய வருடாந்த மெய்வல்லுநர் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு, சனிக்கிழமை (18) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில், பிரித்தாளும் தந்திரத்தை மேற்கொள்ளாமல், அனைவரையும் உள்வாங்கிக்கொண்டு, தமிழ் மக்களின் ஏக பிரதிநிதித்துவத்தை முதன்மைப்படுத்தும் கட்சியாக, கூட்டமைப்பினை வளர்க்க முன்வரவேண்டும்.

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று தங்களை அடையாளப்படுத்துபவர்கள், கூட்டமைப்பினைப் பலவீனப்படுத்தும் நோக்கில், சிதைக்கும் நோக்கில், தேர்தல் காலங்களில் இயங்கிவிட்டு, பின்னர் கூட்டமைப்பில் இருந்துகொண்டு தங்கள் கட்சிகளை வளர்ப்பதற்காக, ஏனைய கட்சிகளை பிரித்தாளும் நிலையை காணமுடிகின்றது.

"கடந்த தேர்தலில் இரண்டரை இலட்சம் தமிழ் வாக்காளர்கள் உள்ள நிலையில், ஒரு இலட்சம் வாக்குகள் மட்டுமே கூட்டமைப்புப் பெற்றுக்கொண்டது. இந்நிலையில்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, பலமான கட்சியாக உருவாக்க வேண்டும்.

"எமது மக்களுக்கான நிரந்தர தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்குப் பயணிக்கும் இந்தப் பாதையில், ஒன்றுபட்ட சிந்தனையுடன் பயணித்தோமானால், இந்த நாட்டில் ஏனைய சமூகங்களுக்கு இணையாக வாழும் நிலை ஏற்படும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X