2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மதியழகனின் கொலைக்கு இரா.துரைரத்தினம் கண்டனம்

Menaka Mookandi   / 2011 மே 12 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

ஆயுத வன்முறைக் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு சுமூக சூழ்நிலை உருவாகிக் கொண்டுவரும் நிலையில் நிகழ்ந்துள்ள மதியழகனின் கொலை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும் என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எம்.பத்மநாபா அணியின் தலைவருமான இரா.தரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

ஆனைப்பந்தி ஆலய அறங்காவலர் சபையின் செயலாளரான இராசமாணிக்கம் மதியழகன் நேற்றுச் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'மட்டக்களப்பு, வாவிக்கரை வீதி – 2இல் வைத்து இராசமாணிக்கம் மதியழகன் என்பவர் நேற்று பிற்பகல் 2.35 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். குற்றவாளிகளை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பாகும்.

கொலை செய்யப்பட்டவர் ஆனைப்பந்தி கோயில் அறங்காவலர் சபையின் செயலாளராகவும் பிரதியமைச்சர் வி.முரளிதரனின் இணைப்பாளராகவும் செயற்பட்டு வந்தவர்.

இக்கொலை முதலமைச்சர் செயலகம், இராணுவத்தின் உயர் அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், அமைச்சர்களின் அலுவலகங்கள், மாகாண அமைச்சர்களின் அலுவலகங்கள் உள்ள சுற்றாடலில் நிகழ்ந்துள்ளது.

இவரின் கொலையில் ஏதோ மர்மம் புதைந்திருப்பதாக மக்கள் கருதுகின்றனர். இந்த மர்மத்தினைத் துலக்கி மட்டக்களப்பு நகரின் இயல்பு நிலைக்குக் குந்தகம் ஏற்படாத வகையில் பாதுகாப்பது சம்மந்தப்பட்டவர்களின் கடமையாகும்' எனத் தெரவிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .