Menaka Mookandi / 2011 மே 13 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
வடக்கு கிழக்கு மாகாணத்தில் பூரண சமாதானம், சுதந்திரம் நிலவுகிறது என அமைச்சர்களும் அரசும் கூறிக்கொண்டிருக்கின்ற நிலையில் மட்டக்களப்பில் கொலை நடைபெற்றிருப்பதானது கண்டிக்கத்தக்க விடயம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனைப்பந்திப் பிள்ளையார் ஆலய அறங்காவல் சபைச் செயலாளர் இராசமாணிக்கம் மதியழகன் கடந்த புதன்கிழமை பிற்பகல் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'மதியழகனின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யாமல் விட்டால், கடந்த காலங்களில் நடைபெற்றது போன்று இந்தச் சம்பவத்துக்கும் காரணம் காணப்படாததொரு சூழல் உருவாகும்.
கடந்த இரண்டு வருடங்களில் இதுபோன்ற கொலைகள் நடைபெறவில்லை. இப்போது நடைபெற்றிருக்கின்ற கொலையானது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.
நகர்ப்பகுதி என்பது பூரணமான பாதுகாப்பு நிறைந்த இடமாகும். இங்கு பட்டப்பகலில் இக்கொலை நடைபெற்றுள்ளது. நகர்ப்பகுதியில் ஒரு கொலையைச் செய்துவிட்டு செல்வதென்பது சுலபமான காரியமல்ல.
அவர் எந்த அரசியல் பின்னணியைக் கொண்டவராக இருந்தாலும் ஒரு கொலை மூலம் தண்டிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். ஒருவரைக் கொலை செய்வதற்கு யாருக்கும் அதிகாரமில்லை.
விடுதலைப்புலிகள் இல்லாத சந்தர்ப்பத்தில் இவ்வாறான கொலை நடந்திருப்பதால் அதற்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்க வேண்டியது அரசாங்கத்தின் முழுப் பொறுப்பாகும். ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்' என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .