2026 மே 04, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் வங்கி முகாமையாளரின் வீட்டு கொள்ளையுடன் தொடர்புடையோர் கைது : பொருட்கள் மீட்பு

Kogilavani   / 2012 மார்ச் 21 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு அரசடியில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றப்புலன் விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட பொருட்களில் ஒருபகுதியையும்; மீட்டுள்ளனர்.

அரசடி பகுதியை சேர்ந்த வங்கி பிரதி முகாமையாளர் ஒருவரின் வீட்டில் கடந்த 14 ஆம் திகதி கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றது.

இதன்போது, 8500ரூபா பணம், 1,675,000 ரூபா பெறுமதியான 33 பவுண் நகை, 344,500 ரூபா பெறுமதியான உடமைகள் கொள்ளையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எல்.எ.செனவிரெத்தினவின் ஆலோசனையில் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.என்.வி.திசநாயக்கவின் வழிநடத்தலில் குற்றப்புலன் விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி த.சாந்தகுமார் தலைமையில் பொலிஸ் சர்ஜன் சி.சபேசன், கே.புவிச்சந்திரன், யூ.எ.டி. பண்டார, ரகீம், பொலிஸ் கொஸ்தா என்.தமிழ்செல்வன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மோப்ப நாயின் உதவியுடன் மேற்கொண்ட தீவிர விசாரணையினை அடுத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி நபர்கள் விற்பனை செய்த இடங்களில் இருந்தும் பொருட்கள் மீட்கப்பட்டதுடன் பொருட்களை கொள்வனவு செய்து பாதுகாத்து வைத்திருந்த குற்றத்தில் மேலும் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் அஜர்படுத்தப்பட்டனர்.

பொருட்களை கொள்வனவு செய்த குற்றத்திற்காக தலா ஒரு லட்சம் சரீரப் பிணையில் நால்வரையும் விடுதலை செய்ததுடன் கொள்ளையில் நேரடியாக ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்குள்ளான இருவரையும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொள்ளையிடப்பட்ட நகைகளில் ஒரு பகுதியினை விற்பனை செய்வதற்காக சென்ற ஒருவர் தலைமறைவாகி உள்ளதாகவும் அவரை கைது செய்வதில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றப்புலன் விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி சாந்தகுமார் தெரிவித்தார்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .