2026 மே 04, திங்கட்கிழமை

வானொலிக்குயிலின் மறைவுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம்

Super User   / 2012 மார்ச் 25 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

இலங்கையில் புகழ்பெற்ற வானொலி அறிவிப்பாளரும் நாடக கலைஞருமான இராஜேஸ்வரி சண்முகத்தின் இழப்பு தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்தது.

புகழ்பெற்ற கலைஞர் இராஜேஸ்வரி சண்முகத்தின் இழப்பு தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அனுதாப செய்தியில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அனுதாப செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1940 மார்ச் 16ஆம் திகதி தொடக்கம் 2012 மார்ச் 23ஆம் திகதி வரை வாழ்நாள் காலத்தை கொண்ட இராஜேஸ்வரி சண்முகம், இலங்கையில் புகழ்பெற்ற வானொலி அறிவிப்பாளரும் நாடகக் கலைஞரும் ஆவார்.

1950களில் இலங்கை வானொலியில் சானா சண்முகநாதன் நாடக தயாரிப்பாளராக இருந்தபொழுது வானொலி நாடகங்களில் நடிப்பதற்காக இவர் வானொலித்துறைக்கு வந்து முதுல் நீண்ட காலமாக நாடகங்களில் நடித்தவர்.

ஆரம்பத்தில் தற்காலிக அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் தமிழ் வர்த்தக சேவையில் நிரந்தர அறிவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இவரது கணவரான சி. சண்முகமும் இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்ததோடு வர்த்தக சேவையில் ஒலிபரப்பான ஏராளமான தனி நாடகங்கள், தொடர் நாடகங்கள் மற்றும்  மேடை நாடகங்கள் ஆகியவற்றை எழுதியவர்.

இவர்களது பிள்ளைகளான சந்திரமோகன், சந்திரகாந்தன் இருவருமே வானொலி அறிவிப்பாளர்களாக சமகாலத்தில் இருந்தவர்கள். மகள் வசந்தி வானொலி மேடை நாடகங்களில் நடித்தவர்.

வானொலி நிகழ்ச்சிகள் - சானா சண்முகநாதன் காலத்திலிருந்து பி.விக்னேஸ்வரன் காலம் வரை இராஜேஸ்வரி சண்முகம் வானொலி நாடகங்களில் நடித்தவர். இவர் நடித்த முதல் வானொலி நாடகம் என். எஸ்.எம். இராமையாவின் 'விடிவெள்ளி' என்பதாகும்.

வானொலியில் ´பொதிகைத் தென்றல்´ என்ற இலக்கிய சுவையுள்ள நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியவர் இவர். இவ்வாறு ஊடக குடும்பத்தை பெற்றெடுத்த ஒரு பெருந்தகையினை இன்று எமது தமிழ் ஊடகத்துறை இழந்துள்ளது.

அதுமட்டுமன்றி இன்று ஊடகத்துறையில் உள்ள நுழையும் இளம் சந்ததியினருக்கு சிறந்த முறையில் வழிகாட்டல்களையும் அவர் மேற்கொண்டு வந்ததுடன் பிரகாசிக்கவும் பின்புலமாக இருந்து செயற்பட்டு வந்தார்.

இவ்வாறான நிலையில் இவரது இழப்பு தமிழ் ஊடகத்துறைக்கு பெரும் இழப்பாகவே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கருதுகின்றது. இந்த நிலையில் அவரது பிரிவால் துயறுரும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .