2026 மே 04, திங்கட்கிழமை

சிலையுடைப்பு தொடர்பாக ஜனாதிபதிக்கு செல்வராசா எம்.பி. கடிதம்

A.P.Mathan   / 2012 ஏப்ரல் 08 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நான்கு முக்கிய உருவச்சிலைகளை உடைத்து சேதப்படுத்தியவர்களை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு ஜனாதிபதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை அனுப்பப்பட்டுள்ள அக் கடிதத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தை, சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று தான் பார்வையிட்டதன் பின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நிலைமைகளை விபரமாக விளக்கினேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சமாதானத்திற்காக சத்தியாக்கிரகத்தின் மூலம் பல கோரிக்கைகளை வென்றெடுத்த இந்திய மகான் மகாத்மா காந்தியின் உருவச்சிலை, சாரணியர் இயக்கத்தின் ஆசிய பசுபிக் சாரணிய ஜம்போரி இலங்கை தம்புள்ள நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் சாரணியர் இயக்கத்தின் ஸ்த்தாபகர் பேடன் பவுள் நினைவாக நிறுவப்பட்ட சிலை உட்பட பெரியார்களான சுவாமி விபுலானந்தர் மற்றும் புலவர் மணி பெரியதம்பி பிள்ளை இவ்வாறு சர்வதேச புகழ்மிக்க தலைவர்களின் சிலைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது மட்டக்களப்பு மக்களின் இதயங்களை புண்படுத்திய மறக்கமுடியாத ஒரு நிகழ்வாகும்.

இச்சிலைகள் மட்டக்களப்பில் கேந்திர ஸ்தானத்தில் அமைந்துள்ளன. அத்தோடு மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு அண்மையிலும் இச்சிலைகள் உள்ளன.

ஆகவே இவற்றிற்கு மத்தியில் இதை யார் செய்தார்கள் என்பதுதான் கேள்வியாக இருக்கின்றது. ஆகவே இதை செய்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் மக்களின் மனதிலிருந்து கவலையை போக்குமாறும் அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .