2026 மே 04, திங்கட்கிழமை

இந்திய குழு கிழக்கு மக்களை சந்திக்காதது கவலைக்குரியது: பொன்.செல்வராசா எம்.பி

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 21 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(வதனகுமார்)

இந்தியாவில் இருந்து வருகைதந்த சர்வகட்சி குழுவைச்சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு கிழக்கிற்கு குறிப்பாக மட்டக்களப்பிற்கு வந்து எந்தப் பாதிக்கப்பட்ட பொதுமக்களையும் பார்வையிடாமல் சிவிலியன் குழுக்களை சந்திக்காமல் இரண்டு வைபவங்களில் மட்டும் பங்கேற்றுவிட்டு திரும்பிச் சென்றது எம்மைப் பொறுத்தவரை ஒரு கவலைக்குரிய விடயாமாகும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'இந்திய குழுவினர் இந்தியாவில் இருந்து வெளியேறும் போது வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை குறிப்பாக இடம்பெயர்ந்தவர்களையும் மீளக்குடியேற்றப்படாதவர்களையும் பார்வையிட்டு அவர்களின் நலன்களை விசாரிக்க வருகின்றோம் என்று கூறிவிட்டு வந்தவர்கள்.

கிழக்கிற்கு அதுவும் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்து எந்தப் பாதிக்கப்பட்ட மக்களையும் பார்வையிடாமல் சிவிலியன் குழுக்களையும் சந்திக்காமல் இரண்டு வைபவங்களில் மட்டும் பங்கேற்றுவிட்டு அவர்கள் திரும்பிச் சென்று விட்டனர். இது எம்மைப் பொறுத்தவரை கவலையளிக்கின்ற விடயமாகும்.

குறிப்பாக கிழக்கிற்கு வரும்போது திருகோணமலையில் முதூர் பிரதேசத்தின் சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் நலன்புரி முகாம்களில், இடைத்தங்கல் முகாம்களிலும் சீவித்துக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 1268 குடும்பங்களைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட மக்கள் மூதூர் பிரதேசத்திலுள்ள கிளிவெட்டி, பட்டிதிடல், மணற்சேனை கட்டைப்பறிச்சான் ஆகிய கிராமங்களிலுள்ள இடைத்தங்கல் முகாம்களிலேயே கடந்த 3 வருடங்களாக துன்பங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

கடந்த 4 மாதமாக உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்பட்டு வந்த உணவு கூட இவர்களுக்கு நிறுத்தப்பட்டிருக்கின்றது. இதே மக்கள் 2006 முதல் 2009 வரை மட்டக்களப்பிலும் 2009ஆம் ஆண்டில் இருந்து இற்றை வரை மேற்கூறிய இடைதங்கல் முகாம்களிலும் பல இன்னல்களுக்கு முத்தியில் சீவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதம் 26ஆம் திகதியுடன் அதாவது தந்தை செல்வாவின் நினைவு தினத்துடன் 6 வருடங்கள் கடந்து 7ஆவது வருடத்தில் கால் வைக்கிறார்கள்.

ஆகவே இவர்களையாவது இந்திய நாடாளுமன்றக்குழு பார்வையிட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு தவறி விட்டார்கள். இந்திய நாடாளுமன்றக் குழுவின் கிழக்கு விஜயமானது எம்மைப் பொறுத்தவரையில் அர்த்தமற்ற ஒன்றாகவே போய்விட்டது. அதை தமிழக மக்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .