2026 மே 04, திங்கட்கிழமை

காத்தான்குடி நகரசபைக்கு எதிராக தவறான பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம்: தலைவர்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 27 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

காத்தான்குடி சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் காத்தான்குடி நகர சபைக்கெதிராக தவறான பிரச்சாரங்களை செய்கின்றனர் என காத்தான்குடி நகர சபை தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கடந்த 26ஆம் திகதி காத்தான்குடி நகர சபையின் கௌரவ உறுப்பினர்களுக்கான 20ஆவது செயலமர்வு சபையில் இடம்பெற்றது. இக்கூட்டத்திற்கு சபையின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதற்கான 10 அம்சங்கள் அடங்கிய நிகழ்ச்சி நிரல் சபையின் கௌரவ உறுப்பினர்களுக்கு கடந்த 20ஆம் திகதியே கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இச்சபையில் சுயேற்சைக்குழு - 1ஐச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களில் ஒருவர் ஏற்கனவே இராஜினாமா செய்திருந்த போதிலும் அவரது வெற்றிடத்தை நிரப்புவதற்காக பெயர் குறிக்கப்பட்ட வர்த்தமான அறிவித்தல் இதுவரை வெளியாகாதாலும், அவர் சபையில் சத்தியப்பிரமாணம் செய்து கடமையேற்காததாலும் இக்கூட்டத்திற்கு அவரது இடம் வெற்றிடமாகவே காணப்பட்டது.

சபை அமர்வுகள் யாவும் முடிவடைந்து உறுப்பினர்கள் அனைவரும் வெளியேறும் சந்தர்ப்பத்தில் குறித்த சுயேட்சைக்குழு - 1ஐச் சேர்ந்த உறுப்பினரால் தம்புள்ளயில் அமைந்துள்ள ஹைறியா பள்ளிவாயல் தொடர்பான விடயத்தில் கண்டணத்தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுத்து கடிதம் ஒன்றை சமர்ப்பித்தனர். இக்கடிதத்தில் சபையின் உறுப்பினர் ஒருவருடன், சபை உறுப்பினராக இதுவரை சத்தியப் பிரமாணம் செய்யாத ஒருவரும் கையொப்பமிட்டிருந்தனர்.

சபையில் குறித்த ஓர் விடயம் சமர்ப்பிக்கப்படும் போது கூட்டத்தின் ஆரம்பத்தில் அது தொடர்பாக உறுப்பினரால் சபைக்கு அறியத் தரப்பட வேண்டும் என்பது இயல்பான விடயமாகும். அத்துடன் வர்த்தமானியில் பெயர் குறித்து விளம்பரம் செய்யப்பட்டு சபையில் உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்த பின்னரே உறுப்பினர் ஒருவர் சபைக்கு பிரேரணை சமர்ப்பிக்க முடியும் என்பதும் யாவரும் நன்கறிந்த விடயமாகும்.

எவ்வாறாயினும் தம்புள்ள பள்ளிவாயல் தொடர்பாக காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நாட்டில் அனைத்து முஸ்லிம்களாலும் ஏகோபித்த அங்கீகாரம் பெற்ற ஓர் நிறுவனமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை திகழ்கின்றது.

குறித்த விடயம் தொடர்பில் மேற்படி உலமா சபை எடுக்கும் எந்த தீர்மானத்தையும் காத்தான்குடி நகர சபை எதிர்காலத்தில் அங்கீகரிக்கும் என்பதையும் இங்கு உறுதியாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.

இது தொடர்பாக எமது சபைக்கும், அதன் கௌரவ முதல்வர், கௌரவ உறுப்பினர்களுக்கு பங்கமேற்படும் வகையில் குறித்த சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் தவறான பிரச்சாரங்களை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்' அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .