2026 மே 04, திங்கட்கிழமை

கிழக்கு மாகாணசபை கலைப்பு, தேர்தல் தொடர்பில் இதுவரை கலந்துரையாடவில்லை: சி.சந்திரகாந்தன்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 30 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

'அரசாங்கம் கிழக்கு மாகாணசபையினை கலைப்பது பற்றியோ, தேர்தல் நடத்துவது தொடர்பிலோ இதுவரை எம்மிடம் எந்தவித கலந்துரையாடலும் நடத்தவில்லை என்பதுடன், அவ்வாறு ஒரு தேர்தல் வந்தால் தமிழ் மக்கள் குழப்பம் இன்றி தமது அரசியலை நகர்த்த வேண்டும்' என கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கண்ணபுரம் கிழக்கு பிரதேச மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி.சிறிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அமைதியை தொடர்ந்து தக்கவைக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது. வீதியை நிர்மாணிக்கும் அதேவேளை எமக்கு கிடைத்துள்ள அமைதியையும் காக்கவேண்டிய பொறுப்பு எமக்கிருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தின் தனித்துவம் காக்கப்பட வேண்டும். அதனையே எமது தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியும் செய்து வருகின்றது. தேர்தல் என்று வரும்போது அனைவரும் அதில் வெல்ல வேண்டும் என்றே எண்ணுவர். எமது கொள்கை வெல்லவேண்டும். மாவட்டம் வெல்லவேண்டும், மாகாணம் வெல்லவேண்டும் அதுவே நோக்கமாக இருக்கும்.

ஆனால் இன்றுவரையில் தேர்தல் வருமா? வுராதா? என்பதுபற்றி எனக்கு தெரியாது. கிழக்கு மாகாண முதலமைச்சராக நான் இருக்கின்றேன். இதுவரையில் யாரும் உத்தியோகபூர்வமாக நாங்கள் கலைக்கப் போகின்றோம். அல்லது கலைக்க உதவி செய்யுங்கள். தேர்தலை நடத்துவோம் என்று யாரும் கோரவில்லை.

என்றாலும் தேர்தல் ஒன்று வரும்போது தமிழ் மக்கள் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் பல்வேறு குழப்பநிலையுள்ளது. இன்று முஸ்லிம்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு பல்வேறு கட்சிகள் உள்ளபோதும் அவர்கள் ஒன்றுபட்டுள்ளனர்.அது மட்டுமல்ல அவர்களின் வாக்களிப்பு வீதம் அதிகமாகவும் இருக்கும்.

ஆனால் தமிழ் மக்களின் வாக்களிப்பு என்பது கடந்த காலத்தில் மிகவும் குறைந்த நிலையிலேயே உள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இன்று எமக்கு கிடைத்துள்ள இந்த சமாதானமான அமைதிச்சூழலை சிறந்த முறையில் கொண்டுசெல்வதற்கு அரசியலும் ஒரு தளமாக இருக்கவேண்டும்.

முஸ்லிம் மக்கள் பலமாக இருந்து அவர்களுக்கு சிங்கள மக்களும் ஆதரவு வழங்கும் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் தனித்து நிற்கும் ஒரு சூழல் வந்தால் இன்னும் பல்வேறு தேவையோடு இருக்கும் மக்கள் என்ற அடிப்படையில் எமது இருப்பு, தேவைகள் சூழல் கேள்விக்குறியாகும்.

கிழக்கு மாகாணசபையினை நாங்கள் கையேற்ற நான்கு வருடங்களில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அதிகளவான அபிவிருத்தியை கொண்டுவந்துள்ளோம். அதற்கு எம்மிடம் இருந்த ஆட்சி அதிகாரமே காரணமாகும்.

1958 ஆம் ஆண்டு தந்தை செல்வாவினால் ஆரம்பித்துவைக்கப்பட்ட யுத்தம் 2008 ஆம் ஆண்டு வரையில் எமது பகுதியில் இடம்பெற்ற காலப்பகுதியில் அரசாங்கத்துடன் இணைந்து எமது பகுதியை கட்டியெழுப்பு யாரும் இருக்கவில்லை. அவ்வாறு இருந்தால் அவருக்கு துரோகி முத்திரை குத்தப்பட்டு சுடப்படும் நிலையிருந்தது.

ஆனால் நாங்கள் சிறுவயது முதல் தமிழ் மக்களுக்காக போராடினோம். அந்த போராட்டம் சாத்தியமில்லையென அறிந்து இன்று தமிழ் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றோம்.
எங்களது சமூகம் இனியும் சண்டை செய்ய முடியாது.மனிதர்களால் இனியொரு மரணம் வரக்கூடாது என்பதில் எமது சமூகம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். எமது சமூகத்தை ஒரு பலமான சமூகமாக மாற்ற வேண்டும்.

எமக்கு ஏற்பட்ட அழிவுகளிளும்; இழப்புக்களிளும் இருந்து இந்த சமூகத்தை கட்டியெழுப்புவதுடன் எதிர்கால சந்ததியையும் அரசியல் ரீதியாக கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எமக்குகிருக்கும் பாரிய பொறுப்பாகும்.

எனவே மக்கள் கிழக்கு மாகாணத்தின் வெற்றியை பெற என்ன செய்ய வேண்டும். அரசியல் ரீதியான அறிவை பெருக்க தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் நாங்கள் எவ்வாறு கூட்டுப்பொறுப்புடன் இயங்க வேண்டும். எமது விகிதாசாரத்தைக்கொண்டு எவ்வாறு பலமான ஆட்சியை அமைப்பது என பல விடயங்களை நாங்கள் சிந்திக்க வேண்டும்.

அதனை விடுத்து கடந்த கால நிகழ்வுகளை பேசிக்கொண்டு நாங்கள் இன்னும் இருப்போமானால் எமது அரசியல் இருப்பு கேள்விக் குறியாகும். எமது அரசியல் இருப்பு தொடர்பில் எமது மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்' எனவும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .