2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

எமது அரசியல் போராட்டத்தின் வீரியத்தைக்கண்டு பேரினவாத சக்திகள் அச்சம் கொண்டுள்ளன: கோ.கருணாகரம்

Menaka Mookandi   / 2012 ஜூலை 30 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரிலோஹித்)

'முள்ளிவாய்க்காலில் எமது ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்ததை எக்காளமிட்ட பேரினவாத சக்திகள், எமது அரசியல் ரீதியான போராட்டம் ஆயுதப்போராட்டத்தை விட வீரியம் கொண்டதாக எழும்போது அதனைக்கண்டு அச்ச நிலையில் உள்ளன' என்று மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை தேர்தலின் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளராகவும் போட்டியிடும கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட குருமண்வெளியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'முள்ளிவாய்க்கால் நிகழ்வை தமிழினத்தின் முடிவாக கருதி எக்காளமிடும் பேரினவாத சக்திகளுக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். முள்ளிவாய்க்கால் உரிமைகளின் புதைகுழியல்ல. தமிழர்களின் உணர்வுகளின் விதைநிலம். அதற்குள் இருந்து அரசியல் ரீதியான தமிழினத்தின் விடுதலை விருட்சம் தழைத்தெழுகின்றது. அதனைப் புரிந்துகொள்ள முடியாது எக்களாமிட்ட பேரினவாதிகளுக்கும் அவர்களுக்கு துணைபோகும் அடிவருடிகளுக்கும் தற்போது அச்ச நிலையேற்பட்டுள்ளது.

நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1989ஆம், 1994ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழ் மக்கள் அச்ச சூழ்நிலையில் துணிவுடன் செயற்பட்டு தமிழ் மக்களுக்கு என்னால் முடிந்த சேவைகளை செய்தேன். இக்காலகட்டத்தில் நான் தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் விட்டிருந்தால் தமிழ் மக்கள் அதனை பெருமனதோடு மன்னித்துக்கொள்ள வேண்டும்.

கடந்த காலத்தில் எனக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் மற்றும் உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக எனது கட்சியினர் கேட்டுக்கொண்டதன் காரணமாகவே வெளிநாடு செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்பட்டது. இன்று நான் இங்கு வந்து உங்கள் முன் நிற்பதே நீங்கள் என்மீது கொண்ட பற்றுக்காரணமாகவே.

1989ஆம் ஆண்டு தமிழ் கூட்டமைப்பில் போட்டியிட்டபோது அதிகப்படியான விருப்பு வாக்குகளை அளித்து என்னை முதலாவது நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்திருந்தீர்கள். 25 வயதிலேயே தேசிய அரசியலுக்குள் என்னை நாடாளுமன்ற உறுப்பினராக அனுப்பிய பெருமை தமிழ் மக்களையே சாரும்.
 
கிழக்கு மாகாணசபை தேர்தலானது தமிழ் மக்கள் மீது வலிந்து திணிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். அரசினால் திணிக்கப்பட்டுள்ள இத்தேர்தலில் காலத்தின் தேவை கருதி நாங்கள் இறங்கியுள்ளோம்.

கடந்த காலத்தில் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் மிகவும் குறைந்த நிலையில் இருந்துவந்துள்ளமை கவலைக்குரிய விடயம். இந்த தேர்தலானது தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது. இதில் நீங்கள் உங்களது வாக்குப்பலத்தை கட்டாயம் பயன்படுத்தவேண்டிய தேவையுள்ளது.

இதனை நாங்கள் சாதாரண நிகழ்வாக கருதி கவலையீனமாக இருப்போமானால் எமது தமிழினம் இந்த கிழக்கு மண்ணில் பாரிய பின்னடைவை எதிர்கொள்ளும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதற்காக தமிழ் மக்கள் தமது வாக்குகளை 100 வீதம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கவேண்டும்.

வடகிழக்கு இணைந்த தாயகம் என்ற கோட்பாட்டை நாங்கள் கொண்டிருந்தாலும் இன்று கிழக்கு மாகாணசபையை இலங்கை அரசாங்கமானது தனது பொய்ப்பிரசாரத்துக்கான களமாக பயன்படுத்த முனைகின்றது.

இந்த நிலையை அனைத்து தமிழ் பேசும் மக்களும் உணர்ந்து என்ன இடர் வரினும் எதிர்கொள்ளும் நம் தமிழனம் இத்தேர்தலை இன விடுதலையின் ஒரு புரட்சியாக மாற்றி எம்கட்சியின் வெற்றிக்கு உரமாக நிற்கவேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களின் முடிவாக இருக்க வேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .