2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரால் பயன்படுத்தப்பட்ட அரச கட்டிடம் தேர்தல் ஆணையாளரின் உத்தரவுக்கமைய தபா

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 03 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)

முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரால் அரசியல் நடவடிக்கைகளுக்குப் பாவிக்கப்பட்டுவந்த அரச கட்டிடம் தேர்தல் ஆணையாளரின் உத்தரவுக்கமைய பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டு தபால் திணைக்களத்திடம் இன்று வெள்ளிக்கிழமை பகல் ஒப்படைக்கப்பட்டதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தல்களை மீறி முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் அரச கட்டிடத்தை தொடர்ந்து தன் வசம் வைத்திருப்பதாகவும் அதை அதிகாரிகளிடம் ஒப்படைக்க மறுத்து வருவதாக தேர்தல் ஆணையாளரிடமும்  தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே இடமும் முறையிடப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடு குறித்து துரிதமாகச் செயற்பட்ட தேர்தல் ஆணையாளர், தபால் திணைக்களத்திற்குச் சொந்தமான குறித்த அரச கட்டிடத்தை ஆகஸ்ட் 1ஆம் திகதிக்கு முன் காலிசெய்துகொண்டு சாவிகளை அஞ்சல் திணைக்களத்தில் அல்லது ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் தவறின் ஆகஸ்ட் முதலாம் திகதி காலை பத்து மணிக்கு கட்டிடம் சீல் வைக்கப்பட்டு பொலிஸாரினால் கையகப்படுத்தவேண்டிவரும் என்றும் இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தார

இந்த எச்சரிக்கையின்படி ஜுலை 31ஆம் திகதி இரவு குறித்த கட்டிடத்தின் சாவிக்கொத்து முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சுபைரின் பணியாளர்கள் மூலமாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

போலிஸார் வசம் இருந்த அஞ்சலகக்கட்டிடத்தின் சாவிக்கொத்து இன்று வெள்ளிக்கிழமை பகல் பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் பி.புவனசுந்தரம் மற்றும் ஏறாவூர் அஞ்சல் நிலைய அதிபர்களான எஸ்.எச்.கஸ்ஸாலி, பாத்திமா ஹஸ்னா மற்றும் எம்.எஸ்.எம்.கலீல் ஆகியோரிடம் ஏறாவூர் பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டது.

ஏறாவூர் பிரதான தபாலகத்தின் மேல்மாடிக்
குடிமனைக் கட்டிடத்தை 2006ஆம் ஆண்டிலிருந்து அனர்த்த நிவாரண அமைச்சராக இருந்த எம்.எஸ்.எஸ்.அமீர் அலியும் அவரின் ஆதரவாளரான எம்.எஸ்.சுபைர் என்பவரும் பயன்படுத்தி வநதுள்ளனர்;. அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகப் பொறுப்பேற்ற எம்.எஸ்.சுபைர் தனது பாவணைக்காக இந்தக் கட்டிடத்தைப் பயன்படுத்திவந்திருந்தார்.
 
தற்சமயம் மாகாணசபை கலைக்கப்பட்டும் குறித்த அரச கட்டிடத்தை அவர் தபால் திணைக்கள அதிகாரிகளிடம் மீள ஒப்படைக்கவில்லை. தொடர்ந்து அதனை தற்போதைய தேர்தல் நடவடிக்கைகளுக்காகப் பாவித்து வருகின்றார் என்ற முறைப்பாடு கபே அமைப்பிற்கு கிடைத்ததைத் தொடர்ந்து அந்த அமைப்பு துரிதமாகச் செயற்பட்டு கட்டிடத்தை மீட்டுக் கொடுத்ததாக கபே அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையாரின்  30.06.2012 ஆம்  திகதியிடப்பட்ட பி.சி.ஈ/2012/04 இலக்கம் கொண்ட அரச மற்றும் அரச கூட்டுத்தாபன சொத்துக்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக வேட்பாளர்கள் பயன்படுத்துவது சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

குறித்த கட்டிடத்தைப் பயன்படுத்துவதற்கான எந்த வித அனுமதியையும் தபால் திணைக்களம் வழங்கியிருக்கவில்லை என்றும் அதற்கு வாடகைப்பணம் செலுத்தப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .