2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மக்கள் போராட்டத்தின் மூலமே அரசாங்கத்தை மாற்றமுடியும்: சுனில் ஹந்துன்நெத்தி எம்.பி.

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 05 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
                                                                                                   (எம்.சுக்ரி)


மக்கள் போராட்டத்தின்  மூலமே இந்த அரசாங்கத்தை மாற்றமுடியும் எனவும் இந்தப் போராட்டத்திற்காக மக்கள் விடுதலை முன்னணியின் கீழ் அனைத்து மக்களும் ஒன்றுதிரள வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் முருகன் மோகன் தலைமையில் மட்டக்களப்பில் உள்ள றிவேரா  ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை மாலை  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காக இன, மத வேறுபாடு இன்றி மக்கள் விடுதலை முன்னணி பாடுபடுகின்றது. ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகவே இந்த மாகாணசபைத் தேர்தல் நடைபெறுகின்றது. இந்த மாகாணசபைகளின் ஆட்சிக்காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே மாகாணசபைகள் கலைக்கப்பட்டு இந்தத் தேர்தல் நடத்தப்படுகின்றது. இதுவே ஜனநாயகத்திற்கு விரோதமான அரசாங்கத்தின் செயலாகும். இந்த நாட்டில் உள்ள மக்கள் எவரும் தேர்தல் ஒன்றை நடத்துமாறு அரசாங்கத்திடம் கேட்கவில்லை.

மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு எரிபொருள் விலையைக் குறைக்கவேண்டும் எனவும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்கவேண்டும் எனவும் பெண்கள் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ வழிசெய்யவேண்டும் எனவும் விவசாயிகளுக்கு ஊதியத்தை வழங்கவேண்டும் எனவும்  ஆகியவற்றையே மக்கள் இந்த அரசாங்கத்திடம் கேட்கின்றனர்.  மக்கள் இந்த நாட்டில் தங்களது உரிமை, சலுகை, சுதந்திரம் ஆகியவற்றை வேண்டிநிற்கின்றனர். இருப்பினும்  தேர்தலை மக்கள் வேண்டிநிற்கவில்லை.

ஒவ்வொரு மாகாணசபைக்கும் தனித்தனியாக தேர்தல்  நடத்தப்பட்டால் அரசாங்கம் தோல்வியடைந்துவிடும் என்ற அச்சம் காரணமாகவே 3 மாகாணசபைகளுக்குமான தேர்தலை அரசாங்கம் ஒன்றாக நடத்துகின்றது. 

மாகாணசபைகள் மூலம் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கமுடியாது என்று மக்கள் விடுதலை முன்னணி ஏற்கெனவே கூறியிருந்தது. இதைத்தான் தற்போது அரசியல் கட்சிகளும் கூறுகின்றன.

இந்த அரசாங்கத்தில் தந்தை நாடாளுமன்ற  உறுப்பினராகவும் புதல்வன் மாகாணசபை உறுப்பினராகவும் உள்ளனர்.  இதன் மூலம் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கமுடியுமா? மாறாக அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையைத்தான் தீர்க்கமுடியும்.

இந்த மாகாணசபைத் தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் இனத்தையும் மதத்தையும் முன் நிறுத்தி தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆனால்,  மக்கள் விடுதலை முன்னணி அவ்வாறு இல்லை. ஒற்றுமையையும்  ஜனநாயகத்தையும்  வலியுறுத்தி இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றது.

மக்கள் விடுதலை முன்னணி சிங்கள, தமிழ், முஸ்லிம்களை இந்தத் தேர்தலில் வேட்பாளர்களாக களம் இறக்கியுள்ளதுடன், தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பி இனவாதத்திற்கு எதிராக அனைவரையும் ஒற்றுமைப்படுத்த மக்கள் விடுதலை முன்னணி பாடுபடுகின்றது' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .