2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

'அமைதியான தேர்தலை நடாத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்;'

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 09 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

அமைதியான தேர்தலை நடத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இந்த புனித றமழான் மாதத்தில் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்ற இப்தார் நிகழ்வின் போது உரையாற்றுகையிலேயே மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடாந்துரையாற்றிய அவர்,

அமைதியான தேர்தல் ஒன்றின் போது தமது வாக்குரிமைகளை ஜனநாயக ரீதியாக பிரயோகிக்க வேண்டும்.
அமைதியான ஜனநாயக ரீதியான தேர்தலை நடத்த இந்த மாவட்டத்திலுள்ள அனைவரும் பூரணமான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இது புனிதமான றமழான் மாதமாகும். இந்த மாதத்தில் இந்த வேண்டுகோளை அனைவரிடமும் விடுக்க விரும்புகின்றேன். அமைதியான ஜனநாயக தேர்தலை நடாத்த மதத்தலைவர்கள் வழிகாட்ட வேண்டும்.

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னரும் எந்த வித வன்முறைகளும் பிரச்சினைகளும் வந்து விடாமல் நாம் பார்த்துக்கொள்வதுடன் அமைதி காக்க வேண்டும்.

தேர்தல் சட்ட திட்டங்களுக்கூடாக மக்கள் தங்கள் வாக்குரிமையை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் பிரயோகிக்கவும் தேர்தலின் ஊடாக மக்கள் தங்களுடைய ஜனநாயக உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் அனைவரும் உறுதி பூண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

எந்த மதமும் தீயவழியில் செல்லுமாறு யாரையும் கூறவில்லை. மதங்கள் மக்களை நல்வழிப்படுத்துவதுடன் ஆன்மீக ரீதியான வழியையும் காட்டுகின்றது.

அரசாங்க உத்தியோகத்தர்கள் என்பவர்கள் இன, மத, மொழி, சமய வேறுபாடுகளுக்கப்பால் சேவையாற்றுபவர்கள். இவர்களிடம் எந்த பாகுபாடுகளும் வேறுபாடுகளும் கிடையாது.

ஒரு இனத்தின் ஒரு சமுதாயத்தின் பிரச்சினை முக்கியமாக இருப்பின் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அரசாங்க உத்தியோகம் என்பது இறைவனினால் கொடுக்கப்பட்ட வரமாகும். அதிலும் குறிப்பாக மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் என்பவற்றில் கடமையாற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு மக்களுக்கு நன்மை செய்ய, சேவை செய்ய சிறந்த சந்தர்ப்பமாகும் என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் நலன்புரி சங்கத் தலைவருமான கே.விமலநாதன் உட்பட சமயப் பிரமுகர்களும் இதன்போது உரையாற்றினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .