2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

வட, கிழக்கை மீண்டும் இணைக்கும் முயற்சியில் த.தே.கூ - மு.கா ஈடுபட்டு வருகின்றது: அமீர் அலி

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 25 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஸரீபா)

வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் ஈடுபட்டு வருவதாக முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டமாவடி – காவத்தமுனை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு எம்.எப்.ஜவ்பர் தலைமையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'இணைக்கப்பட்ட வட, கிழக்கு மாகாண சபையினூடாக கிழக்கு மாகாண மக்களுக்கு கிடைக்காமல் இருந்த அனைத்து சலுகைகளும் கிழக்கு மாகாணம் தனியாக பிரிக்கப்பட்டதன் பின்னர்தான் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது.

கிழக்கு மாகாண மக்களுக்கு இணைந்திருந்த போது கிடைத்த சலுகைகளைவிட பிரிந்திருக்கின்ற போது அதிகமான சலுகைகள் கிடைக்கின்றது என்பதைப் பொறுத்துக் காள்ள முடியாமலும் தனது சொந்த இலாபங்களுக்காகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இணைப்பது தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசியுள்ளது. இதை சம்பந்தன் அவர்களே குறிப்பிட்டுமுள்ளார்.

தற்போதைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு முஸ்லிம்களின் எந்த விதமான பிரச்சினைகளும் தெரிவதில்லை. அதைப்பற்றி அவர் அலட்டிக்கொள்வதுமில்லை. அவருக்குத் தெரிந்ததெல்லாம் நோர்வே சொல்லும் விடயங்களுக்குத் தலையாட்டுவதும் அவர்கள் கொடுக்கும் தனிப்பட்ட உபகாரங்களும்தான்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதற்காக உருவாக்கப்பட்டது? அதை உருவாக்குவதற்காக எத்தனை பேர் எத்தனை தியாகங்களைச் செய்தார்கள்? குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் என்னவென்று இன்றையத் தலைவருக்கு என்ன தெரியும்? என்று கேள்வி எழுப்பினார்.

இக்கூட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பிரதித் தவிசாளர் ஏ.எம்.நௌபர், முன்னாள் தவிசாளர் எம்.கே.முஹைதீன், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர் ஆகியோரும் உரையாற்றினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .