2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

த.ம.வி.பு. கட்சியின் தேசிய அமைப்பாளர் பிரதீப் மாஸ்ரரின் வீட்டில் கொள்ளை

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 27 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                    (ரி.லோஹித்)

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளருமான எட்வின் கிருஷ்னாணந்தராஜாவின் (பிரதீப் மாஸ்ரர்) வீட்டில்  ஆயுதமுனையில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, வைத்தியசாலை வீதி 3ஆம் குறுக்கில் உள்ள இவரது வீட்டிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.

இவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் குழந்தை மற்றும் பிரதீப் மாஸ்ரரின் சகோதரியின் மீது கைத்துப்பாக்கிகளை வைத்து அச்சுறுத்தி தங்கநகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும் சகோதரியின் தாலிக்கொடி, குழந்தையின் சங்கிலி உள்ளிட்ட 25 பவுண் தங்கநகைகளை கொள்ளையிட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பிரதீப் மாஸ்ரர் தெரிவிக்கையில்,

'நாங்கள் தேர்தல் பிரசார வேலைகளுக்காக வந்தாறுமூலை பிரதேசத்திற்குச் சென்றிருந்தவேளையில்  மோட்டார் சைக்கிளில் எனது வீட்டுக்கு வந்த சிலர்  எங்களை விசாரித்துவிட்டு தண்ணீர் கேட்டுள்ளனர்.
அப்போது வீட்டுக் கதவைத் திறந்து தண்ணீர் கொடுக்க முற்பட்ட வேளையில் வீட்டுக்குள் நுழைந்த இவர்கள்,  எனது மகளின் தலையில்; துப்பாக்கியை வைத்து நகைகளைக் களற்றித்தருமாறு அச்சுறுத்தி நகைகளைப் பெற்றுள்ளனர். பின்னர் எனது சகோதரியின் தலையிலும்  துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தி அவரின் தாலிக்கொடியையும் பறித்துச் சென்றுள்ளனர்.

தேர்தல் காலத்தில் பிரசார வேலைகளைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. எவ்வாறாயினும் எமது தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும்' எனக் கூறினார்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .