2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

தமிழர் முதலமைச்சராகுவதற்காக தேர்தலிலிருந்து விலகியிருக்குமாறு த.தே.கூட்டமைப்பைக் கோரினேன்: வி.முரளித

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 27 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


தமிழன் ஒருவன் முதலமைச்சராக வரவேண்டும் என்பதற்காக கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இருந்து நாங்கள் ஒதுங்கிக்கொள்கிறோம். ஆனால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறியிருந்தால் நான் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தான் வாக்களித்திருப்பேன் என மீள்குடியேற்றப் பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வந்தாறுமூலை மகாவிஷ்ணு ஆலய முன்றலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் ருத்திரமலர் ஞானபாஸ்கரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

'கடந்த காலத்தில் இரண்டு தமிழர்கள் முதலமைச்சர்களாக இருந்துள்ளனர். அந்த வகையில் அடுத்த முதலமைச்சரும் தமிழராக இருக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களது எதிர்பார்ப்பாகும்.

கிழக்கு மாகாணத்தின் சனத்தொகை விகிதாசாரத்தின் அடிப்படையில் தனித்து எந்தத் தரப்பும் ஆட்சியை அமைத்துவிட முடியாது. முழுமையாக அனைத்து தமிழர்களும் ஒருவருக்கு வாக்களித்தாலும் தமிழரை முதலமைச்சராக்க முடியாது.

இவ்வாறான பல காரணங்களால் தான்  நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் ஐயா நீங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடாதீர்கள் என்று கேட்டிருந்தேன். ஏனென்றால் உங்களால் முதலமைச்சரை அமைக்கமுடியாது. அத்துடன், அரசுக்கு இருக்கும் வாய்ப்பையும் குழப்பிவிடாதீர்கள். எனவே இந்தத் தேர்தலில் ஒதுங்கிக்கொள்ளுங்கள் என்று கேட்டிருந்தேன். பார்ப்போம் என்று கூறியிருந்தார்கள். ஆனால் பார்க்கவில்லை. வேட்பாளர்களைப் போட்டுவிட்டார்கள்.

அவர்கள் ஒரு ஒழுங்கானவர்களாக இருந்திருந்தால், தேசப்பற்றுள்ளவர்களாக இருந்திருந்தால் அத்துடன் கிழக்கு மாகாண தமிழர்களில் பற்றுடையவர்களாக இருந்திருந்தால் அவர்கள் கூறியிருக்க வேண்டும் நாங்கள் தமிழன் ஒருவன் முதலமைச்சராக வர வேண்டும் என்பதற்காக கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இருந்து ஒதுங்கிக்கொள்கிறோம். ஆனால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம் என்று கூறியிருந்தால் நான் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தான் வாக்களித்திருப்பேன்.

ஏனென்றால் அவ்வளவு ஒற்றுமை புரிந்துணர்வு, தமிழ் தேசியத்தைப் பாதுகாக்கின்ற பற்று ஆனால் அவர்கள் அதனைத் தவறுவிட்டதுடன், கிழக்கு மாகாணத் தமிழனுக்கு உரிய தேசத்துரோகத்தையும் செய்து விட்டார்கள். ஆனால் வடக்கு மாகாணத்தில் உள்ளவர்கள் இதனைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள்.  ஏனென்றால் வடக்கில் வென்றாலும் தோற்றாலும் தமிழன்தான் முதலமைச்சர். ஆனால் மாவை, சம்பந்தன், சுரேஷ், செல்வம் என அனைவரும் வந்து பிரசாரம் செய்கிறார்கள். அதனைப் பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள்.

30 வருட போராட்டத்தில் பல துன்பங்களை சந்தித்திருக்கின்றோம். உயிர்ப்பலி, பொருளாதார சிரமங்கள் என பலவற்றை இழந்தவர்கள். அப்போது உயிரை மட்டும் பாதுகாத்தால் போதும் என்று வாழ்ந்தோம்.

இந்த இடத்தில் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டவர்களாக இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்' என்றார்.

வந்தாறுமூலை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் நந்தகுமாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பிரசாரக் கூட்டத்தில் வேட்பாளர்களான ருத்ரமலர் ஞானபாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .