2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கிவிட்டது: ரவி கருணாநாயக்க

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 28 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

'அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கிவிட்டது. இன்று அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். அதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் மக்கள் அணி திரள்கின்றனர். இந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டும்' என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

காத்தான்குடியில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சார கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் வி.ரி.எம்.முபாறக் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'ஐக்கிய தேசியக் கட்சி அனைத்து இன மக்களையும் அரவணைக்கும் கட்சியாகும். இங்கு இன, மத, மொழி, சமய வேறுபாடு என்பதில்லை. அனைவருக்கும் இந்தக் கட்சியில் இடமுண்டு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களை ஆதரித்து ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றியடைய செய்யவேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றியடைய செய்வதன் மூலம் இந் நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ முடிவதுடன் இந்த நாட்டில் பொருட்களின் விலையேற்றத்திலிருந்தும் விடுபடமுடியும்.

இன்று இந்த நாட்டில் வறுமையான மக்களும் சாதரண மக்களும் வாழமுடியாத பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் பொருட்களின் விலையேற்றம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இவற்றுக்கெல்லாம் முடிவு கட்டுவதானால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் தேர்தலாக கிழக்கு மக்கள் இந்த தேர்தலை பயன்படுத்த வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேபோன்று நேற்று மட்டக்களப்பு நகரில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சாரம் இடம்பெற்றது.

இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, சுவாமி நாதன், முன்னாளர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் வேட்பாளர்களுமான அரச ரட்ணம் சசிதரன் மற்றும் எம்.மாசிலாமணி உட்பட வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .