2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

ஐ.தே.க.வின் தலைவராக ரணில் இருக்கும்வரை மஹிந்தவே ஜனாதிபதியாக இருப்பார்: மஹிந்தானந்த

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 31 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சிஹாரா லத்தீப்)

'ஐக்கிய தேசிய கட்சியானது சஜித் பிரேமதாச, சரத் பொன்சேகா, கரு ஜயசூரிய, ரணில் என துண்டு துண்டாகப் பிளவுபட்டுள்ளது. இக்கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க இருக்கும் வரை மஹிந்த ராஜபக்ஷவே இந்நாட்டின் ஜனாதிபதியாக இருப்பார்' என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

புதிய காத்தான்குடி பதுறியா நகரில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க இருப்பதையே ஜனாதிபதி விரும்புகின்றார். தினமும் ரணிலுடன் ஜனாதிபதி  தொலைபேசியில் கதைத்து சுகநலம் விசாரித்துக் கொள்வார். எனவே ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும் ஆட்சிக்கு வராது. குறைந்தது இன்னும் 20 வருடங்களுக்கு வேறு எந்த அரசும் இந்நாட்டில் ஆட்சிக்கு வரப்போவதில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனம் குறைவென்றே அரசிலிருந்து பிரிந்து தனியாகப் போட்டியிடுகின்றது. தேர்தல் வேளையில் அரசுடனிருப்பவர்களுக்கே நாம் கூடிய அபிவிருத்தியைக் கொடுப்போம்.

வெற்றிலைச் சின்னமே கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெறும். மட்டக்களப்பில் தமிழ் பகுதிகளில் அனேகமான மக்கள் இத்தேர்தலில் தமிழ் கூட்டமைப்புக்கு வாக்களிக்கப் போவதில்லை. தமிழ் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் பிள்ளைகள் யுத்தத்திற்கு போகவில்லை. இந்த பகுதி அப்பாவி இளைஞர்களே யுத்தத்திற்கு போய் மடிந்தனர். முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றாது. எனவே அரசாங்க கட்சிக்கு அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும்.

அரசாங்கக் கட்சி மாகாண முதலமைச்சர் வந்தால்தான் அபிவிருத்திக்கு நிதி வழங்குவோம். வேறு கட்சியில் வந்தால் பணம் கிடைக்காது. சும்மா படுத்திருக்க வேண்டியதுதான். அரசுடன் மாகாணசபை இருந்தால் கூடிய அபிவிருத்தி இப்பகுதியில் நடைபெறும்.

எமது ஜனாதிபதி கிராமப்புற அபிவிருத்திக்கே கூடிய அக்கறை காட்டுகிறார். முன்னைய ஜனாதிபதிகள் கொழும்பு போன்ற நகரத்திலேயே கூடிய அபிவிருத்திகளை செய்தனர். இன்று கமநெகும, மகநெகும திட்டத்தில் கிராமங்களில் பெரும் அபிவிருத்திகள் நடக்கின்றன. கிராம மக்களின் கஷ்டம் உணர்ந்தே இந்த அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி செய்து வருகின்றார்.

எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சக்தியை வழங்க அனைவரும் இத்தேர்தலில் அரசுக்கு வாக்களிக்கத் தவறக்கூடாது' எனக் குறிப்பிட்டார் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கம. 

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா உரையாற்றுகையில்,   
   
மட்டக்களப்பில் நல்லாட்சி இயக்கமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் மக்களை இத்தேர்தலில் ஏமாற்ற முனைகின்றனர். தமிழ் கூட்டமைப்புடன் ரகசிய உடன்படிக்கை செய்து கொண்டு இம்மண்ணில் முஸ்லிம் தலைமைத்துவத்தையும் மஹிந்த ராஜபக்ஷவையும் தோற்கடித்து தமது எஜமானர்களை திருப்திபடுத்த முனைகின்றனர்.

இத்தேர்தலில் அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும். உலகுக்கு வடக்கையும் கிழக்கையும் பிரிந்திருக்க வேண்டுமென்ற செய்தியைச் சொல்லும் சமுதாயமாக மாற வேண்டும். 

இந்த நாட்டிலேயே நிலவுகின்ற அமைதியை சீர்குலைக்க அமெரிக்கா தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ் கூட்டமைப்பும் செய்து கொண்டிருக்கின்ற சதி வலையில் முஸ்லிம் காங்கிரஸூம் சிக்கியிருக்கின்றது. நல்லாட்சிக்கான இயக்கமும் சிக்கியிருக்கின்றது. இவர்கள் எல்லோருக்கும் தேவை அரசாங்கம் தோற்கடிக்கப்பட வேண்டுமென்று.

இந்த பாரிய துரோகத்தை செய்து விடாதீர்கள் இந்த மண்ணில் மீண்டும் யுத்தம் வரவும் தற்போது நடைபெறும் பாரிய அபிவிருத்தி பணிகளை இல்லாமல் செய்யவும் தயவு செய்து முயற்சி எடுத்துவிடாதீர்கள்' என்று பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா கோரிக்கை விடுத்தார்.

  Comments - 0

  • அப்துல்லா Saturday, 01 September 2012 12:36 AM

    உண்மையை அமைச்சர் சொல்லிவிட்டார்

    Reply : 0       0

    abdulla Saturday, 01 September 2012 12:43 AM

    சரியாக சொல்லிவிட்டார் அமைச்சர், அவரின் வாயில் சர்க்கரை போட வேண்டும்.

    Reply : 0       0

    M.M.SHATHAKKATHULLAH Tuesday, 04 September 2012 06:39 AM

    அப்படியானல்.... ரனில்- ஜனாதிபதி ஒப்பந்தம் போல‌

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .