2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

கிழக்கில் நீதியான நிர்வாகம் நடைபெறவில்லை: ரணில்

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 02 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}



(எம்.சுக்ரி, ரி.லோஹித்)


பிள்ளையானின் முதலமைச்சர் காலத்தில் கிழக்கு மாகாண சபையில் நீதியான நிர்வாகம் நடைபெறவில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்திலேயே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய ரணில் விக்ரமசிங்க...

நமக்கு இன்று தேவைப்படுவது நீதியான நிர்வாகமாகும். கடந்த கிழக்கு மாகாண சபை ஆட்சியின் போது பிள்ளையானால் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை. ஆனால் இன்று மக்களை பயறுத்தி வாக்குகளை பெற பார்க்கின்றார்கள்.

தமிழ் - முஸ்லிம் மக்களின் உரிமைகளை வழங்குவதற்கு இந்த அரசாங்கம் தயாராக இல்லை. நாங்கள் இந்த கிழக்கு மாகாண சபை தேர்தலை கேட்கவில்லை, நாங்கள் எல்லோரும் கேட்டது வடக்கில் தேர்தலை வையுங்கள் என்றே.

யுத்தத்திற்கு பின்னர் வடமாகாண மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமாக இருந்தால் வடமாகாண சபை தேர்தல் ஒன்று தேவையாகும். வடமாகாண தேர்தல் நடைபெற்றால் சிவில் நடவடிக்கையையும் ஜனநாயகத்தையும் அங்கு ஏற்படுத்த முடியும் எனக்கேட்டோம்.

இன்று நாட்டின் பிரச்சினைக்கு தேசிய மட்டத்திலான தீர்வு தேவையென கூறுகின்றோம். இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் சேர்ந்து இதற்காக தீர்வை காணமுடியும்.

இன்று இந்த பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக மாற்றியது மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம்தான். 2009ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை மாநாட்டில் ஒரு பிரேரணை முன் வைக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட்டதையடுத்து அது இன்று சர்வதேச பிரச்சினையாக மாறியுள்ளது. அந்த பிரச்சினையை தீர்க்க வேண்டியுள்ளது.

வடக்கே தேர்தலை நடத்தி கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. அதை செய்யாமல் கிழக்கு மாகாண சபை தேர்தலொன்று தேவையா எனக்கேட்கின்றனர்.

இன்று வாழ்க்கை சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை அரசாங்கம் கூட்டியுள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம், பெண்கள் துஷ்பிரயோகம் நடை பெற்றுவருகின்றன. இது அதிகரித்துள்ளது. பல்கலைக்கழக இஸட் புள்ளி விவகாரத்தில் மோசடி செய்தனர். இலவச கல்வியை இல்லாதொழித்துள்ளார்கள். சமுர்த்தியை இல்லாமல் செய்யப்போகின்றார்கள்.

எல்லா இடங்களிலும் மோசடியும் ஊழலும் தலைவிரித்து ஆடுகின்றது. தமிழ் பேசும் மக்களுக்கு எந்தவிதமான உரிமைகளும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

இந்த கிழக்கு மாகாண சபையில் என்ன செய்தார்கள்? இந்த மாகாண சபைகள் மூலமாக இந்த வீதிகள் எதுவும் அபிவிருத்தி செய்யப்படவில்லை.

நான் டோக்கியோவில் பேசியே நிதியைப் பெற்றுக் கொடுத்தேன். ஆனால் அதில் இவர்கள் கொமிஷன் பெற்றுக் கொண்டார்கள். இந்த கொமிஷன் மூலம் இங்குள்ள பல காணிகளை வாங்கியுள்ளார்கள்.

மட்டக்களப்பிலுள்ள பல காணிகளை இவர்கள் வாங்கியுள்ளார்கள். மட்டக்களப்புக்கு தரம் குறைந்த பெற்றோலே அனுப்பப்படுகின்றது. மட்டக்களப்புக்கு புகையிரத வண்டி மூலம் அனுப்பப்படும் பெற்றோல் புகையிரதத்தில் தரம் குறைந்த பெற்றோல் என எழுதப்பட்டுள்ளது. மட்டக்களப்பிலுள்ள மக்கள் ஏழை மக்கள். இவர்களை ஏமாற்றலாமென அரசாங்கம் கருதுகின்றது.

ஆலயங்களை உடைத்தார்கள். இப்போது முஸ்லிம் பள்ளிவாயல்களை உடைக்க ஆரம்பித்துள்ளனர். பள்ளிகள் உடைக்கப்படும்போது அது தொடர்பில் பேசுவதற்கு முஸ்லிம் காங்கிரசை சார்ந்த எவரும் முன்வரவில்லை.ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் ஒன்று செய்தது. அதன் செயலாளர் ஹசன் அலி அவர்கள் தாங்கள் ஜனாதிபதியை சந்தித்து இது தொடர்பில் தீர்வுகாண்போம் என அறிக்கையொன்றை வெளியிட்டார்.அவர்கள் அங்கு சென்று என்ன கதைத்தார்கள் என்று கேட்கின்றோம்.

இப்போது முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவேண்டும் என்றால் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இருக்கவேண்டும் என்று கூறுகின்றார்கள். அதனால்தான் முஸ்லிம் மக்களிடம் கூறுகின்றோம் அந்த கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டாம் என்று.

அதனால்தான் நாங்கள் முஸ்லிம் மக்களுக்கு கூறுகின்றோம் அங்கிருக்கின்றவர்கள் அதாவுல்லா, பௌசி ,ஹிஸ்புல்லா போன்றவர்கள் முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாக்க கூடியவர்கள் அல்ல.இதனை நாங்கள் கூறுவதல்ல.முஸ்லிம் காங்கிரஸ் கூறுகின்றது.அவர்கள் கூறுவதைப்பார்த்தால் இந்த கூட்டமைப்புக்கு வாக்களிக்கமுடியாது.

ஜனாதிபதி முஸ்லிம் காங்கிரசை பற்றி கொழும்பில் அல்லாமல் சம்மாந்துறையில் கூறியுள்ளார். முஸ்லிம் காங்கிரசை சேர்ந்தவர்கள் அமைச்சரவை கூட்டங்களுக்கு வரும்போது அங்கு எலிகளைப்போல் இருக்கின்றார்கள் என்று கூறுகின்றார் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்கவரவில்லை.எலிகளைப்போல் ஒதுங்கி ஓரத்திலே இருந்தார்கள் என்று ஜனாதிபதி கூறுகின்றார்.

இங்கே முஸ்லிம் காங்கிரஸ் பொய் கூறுகின்றது என்பது உறுதியாகின்றது. ஒரு புறத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கூறுகின்றது பள்ளிவாயல்கள் உடைப்பு தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து பேசியிருக்கின்றோம் என்று. அவர்கள் தன்னுடன் பேசவில்லை எலிகளைப்போன்று அமைதியாக இருந்தார்கள் என்று ஜனாதிபதி கூறுகின்றார்.

முஸ்லிம் காங்கிரஸ் தற்போது மக்கள் முன் வந்திருப்பது மக்களை பாதுகாப்பதற்கல்ல தங்களுடைய அமைச்சுப் பதவிகளை பாதுகாப்பதற்கு ஆகும். எனவே முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களிப்பதால் எந்தவித பிரயோசனமுமில்லை. உங்களுக்கு ஒரு பிரச்சனை ஏற்படும் போது அதைப்பற்றி கதைப்பதற்கு இருக்கின்ற ஒரேயொரு கட்சி ஐக்கியதேசியக்கட்சி தான். இங்கு காணிகள் கொள்ளையிடப்படுகின்றன. இன்று கரையோரப் பிரதேசங்களில் இருக்கின்ற அத்தனை காணிகளையும் அரசு கைப்பற்றி தங்களுக்கு சொந்தமான மோசடிக்காரர்களுக்கு வழங்கியிருக்கின்றது. அவர்களுக்கா நீங்கள் வாக்களிக்கப் போகின்றீர்கள்.

மக்களுக்குச் சொந்தமான காணிகளை அவர்களிடமிருந்து பறித்தெடுத்திருக்கின்றார்கள். இதற்கு ஒரு தேசிய திட்டம் தேவை.
கூட்டமைப்பினர் இனத்துவேஷத்தை தூண்டிவிடப் பார்க்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தை தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்று துண்டுதுண்டாக பிரிக்கப்பார்க்கின்றார்கள்.

நாங்கள் எல்லோரும் இலங்கையர்கள் என்று கூறுகின்றோம். இலங்கையர்கள் என்று கூறும்போது அனைவருடைய உரிமைகளும் உரித்துகளும் அங்கு உள்ளடக்கப்படுகின்றது.

ஐக்கியதேசியக்கட்சி மாகாணசபையை கைப்பற்றுகின்றபோது காணிக்கொள்ளை தொடர்பாக தனியானதொரு விசாரணை நடத்தி தனிச்சட்டத்தை உருவாக்கி மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுத்தர இருக்கின்றோம்.  தமிழ் முஸ்லிம் மக்களுடைய காணிகளை கொள்ளையடிப்பதற்கு நாங்கள் ஒருபோதும் இடங்கொடுக்கப்போவதில்லை. இந்த மாகாணத்தில் வாழ்கின்ற தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் அனைவரையும் சமனாக மதிப்பதற்குரிய செயற்றிட்டங்கள் எங்களிடம் உண்டு.

எங்கள் சட்டங்களிலுள்ள அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் சர்வதேசத்துடன் செய்துகொள்ளப்பட்ட சிவில் மற்றும் ஜனநாயக உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் செயற்படுத்துவதற்கும் நியதிச்சட்டங்களை கொண்டுவருவதன் மூலமாக கிழக்கு மாகாணத்திலே தனியான நிர்வாக அலகொன்றை நாங்கள் உருவாக்க இருக்கின்றோம். அவற்றுக்குத் தேவையான சகல அதிகாரங்களையும் நாங்கள் வழங்குவோம்.

மக்களை அச்சுறுத்தி பயமுறுத்தி மக்களின் வாக்குகளை பெற முயற்சிக்கின்றனர். நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. பயமில்லாமல் சென்று உங்களுடைய யானைச்சின்னத்திற்கு வாக்குகளை அளியுங்கள்" என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் அரச ரட்ணம் சசிதரன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், வேட்பாளர்கள் என பலர் உரையாற்றினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .