2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

ஸ்ரீ.மு.கா. தலைவர் நிலையான கொள்கையுடையவர் அல்ல: அமைச்சர் பௌசி

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 02 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


 (ஸரீபா)


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நிலையான கொள்கையுடையவர் அல்ல. காலையில் ஒரு பேச்சும் மாலையில் ஒரு பேச்சும் பேசக்கூடிய நிலையற்ற கொள்கையுடையவர் என சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை ஆதரித்து வாழைச்சேனை – மாவடிச்சேனை பிரதேசத்தில் வாழைச்சேனை பிரதேசசபை உறுப்பினர் ஜே.அல்பத்தாஹ் தலைமையில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இன்று அமைச்சரவையில் ஒரு பேச்சும் நாடாளுமன்றத்தில் ஒரு பேச்சும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பேச்சாகவும் இடத்திற்கு இடம் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார். இது சிறந்த தலைமைத்துவத்திற்கு ஏற்ற பண்பல்ல. எப்போதும் நாம் கொண்டுள்ள கொள்கையில் நிலையான உறுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும். அதுதான் ஒரு நல்ல மனிதருக்கான பண்பாகும். 

ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தால் பள்ளிவாசல்கள் உடைக்கப்படும் என்று கூறும் ரவூப் ஹக்கீம், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவை ஆதரித்து பேசும்போது மஹிந்தவுக்கு வாக்களித்தால் பள்ளிவாசலில் வாங்கு சொல்ல முடியாது என்று கூறினார். ஆனால், இலங்கை வரலாற்றில் மஹிந்த ஜனாதிபதியானதன் பின்னர்தான் வானொலியில் ஐந்து நேரமும் வாங்கு சொல்லப்படுகின்றது.

பள்ளிவாசல் உடைப்புக்கும் அரசாங்கத்திற்கும் சம்மந்தமில்லை என்று ஹக்கீமுக்குத் தெரியும். அதுதான் அரசாங்கத்தோடு இணைந்துகொண்டு இருக்கின்றார். முஸ்லிம்களுக்கு இந்த அரசாங்கம் விரோதம் என்றால் ஏன் அரசாங்கத்தோடு இணைந்து இருக்கின்றார்?' என்றார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாணசபை வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி இங்கு உரையாற்றுகையில்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இன்று வேட்பாளர்கள் பற்றாக்குறையால் இறக்குமதி வேட்பாளர்களைக் கொண்டு தேர்தல் கேட்கும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மறைந்த தலைவர் இருந்த காலத்தில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டி போடுவதற்கு ஒவ்வொரு பிரதேசத்திலும் போட்டி போட்டுக்கொண்டு வேட்பாளர்கள் வந்த வரலாறுதான் உண்டு. இன்று நிலைமை எப்படி மாறியுள்ளது என்று பார்த்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளர்கள் இல்லாத காரணத்தினால் கொழும்பில் இருந்து இறக்குமதி செய்யும் அளவுக்கு கட்சியின் நிலையுள்ளது.

மறைந்த தலைவர் என்ன நோக்கத்திற்காக கட்சியை ஆரம்பித்தாரோ அந்தக் கொள்கைகளை விட்டு, முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய தலைவர் கட்சியை வழி நடத்துகின்றார். மறைந்த தலைவரின் கனவுகள் அத்தனையையும் அவர் புதைகுழி தோண்டிப் புதைத்துவிட்டார். அவருக்கு சமூகத்தைப் பற்றி துளியளவேனும் அக்கறை இல்லை. கட்சியின் பெயரால் தன்னை வளரத்துக்கொள்வதே நோக்கம் என்று செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். இவருக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் எதிர்வரும் 08ஆம் திகதி தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்திற்கும் இடம் இல்லை' என்றார்.



  Comments - 0

  • soopy Tuesday, 04 September 2012 08:54 AM

    மு.கா இல்லாட்டி இவர்ககளுக்கு அரசியல் இல்ல.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .