2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

இனவாத அரசியல் இனி வேண்டாம்: மட்டக்களப்பில் ஜனாதிபதி உரை

Super User   / 2012 செப்டெம்பர் 03 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                                  (ரி.லோஹித்)

"இனவாத குறுகிய அரசியல் இனிவேண்டாம். எமது உறவை இல்லாமல் செய்ய சிலர் மத வாதம், இனவாதம் பேசுகின்றனர். ஆனாலும் எமது உறவு, சகோதர பாசம் அன்றுபோல் என்றும் உறுதியாக இருக்கும்" என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வெபர் மைதானத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தமிழில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது. அவர் தொடர்ந்து உரையாற்றிய போது,

'நீங்களும் உங்கள் பிள்ளைகளும் பட்ட கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும். ஆனாலும் இன்று நீங்கள் எந்த பயமும் இன்றி வாழமுடியும் .நிம்மதியாக வாழமுடியும்.

அன்று யுத்தம், இன்று சமாதானம். யுத்தம் 30வருடங்கள் இடம்பெற்றது. அபிவிருத்தி மூன்று வருடங்களாக இடம்பெற்றுவருகின்றது. இந்த மூன்று வருடத்திலும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள். இன்னும் இன்னும் இந்த மாவட்டத்தில் பல அபிவிருத்திகள் இடம்பெறும்.

இங்கு வாழும் மக்கள் அனைவரும் அன்றும் இன்றும் எமது சகோதரர்கள்போல உள்ளனர்.இந்த நாட்டில் வாழம் நாங்கள் அனைவரும் ஒரேதாய் மக்கள்.

இனபேதம், மதபேதம், குலபேதம் எதுவும் இங்கில்லை. இன்று உள்ளதுபோல் நீங்கள் என்றும் வாழவேண்டும். இனவாத குறுகிய அரசியல் இனி வேண்டாம். எமது உறவை இல்லாமல்செய்ய சிலர் மதவாதம், இனவாதம் பேசுகின்றனர். ஆனாலும் எமது உறவு, சகோதர பாசம் அன்றுபோல் என்றும் உறுதியாக இருக்கும். நீங்கள் அனைவரும் எம்மோடு வந்துசேருங்கள்.

அன்று பட்டதாரிகள் துப்பாக்கி ஏந்திபோராடினார்கள். ஆனால் இன்று பட்டதாரிகளின் கைகளில் வேலைவாய்ப்புக்கள் வசதிகள். அன்று எதிர்கால நம்பிக்கை இருக்கவில்லை. இன்று அந்த நம்பிக்கையுடன் இருக்கின்றோம். இனவாத அரசியல் மிகவும் மோசமானது. எமக்குத் தேவை சகோதர பாசமாகும். உங்களுடைய மாகாணம் முன்னேறுவதற்காக நாம் பல மில்லியன் ரூபா செலவு செய்திருக்கின்றோம். இன்னும் வசதிகள் வழங்குவோம். இங்குள்ள கிராமங்களுக்குள்ளே பாரிய வசதிகளை மாகாணசபைகளின் மூலம் வழங்குவேன். இதை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது.

தற்போது உல்லாசப் பயணிகளின் வரவு அதிகரித்துள்ளது. பாசிக்குடா போன்ற அழகிய சூழல் எல்லாம் உங்கள் பகுதியில் உள்ளபோது உங்கள் பகுதி இளைஞர்கள் வேலை வாய்ப்புகளையும் பெற்றுக்கொள்ளலாம். கல்லடிப்பாலம் சர்வதேச விளையாட்டரங்கு, விமான நிலையம் போன்ற வேலைத்திட்டங்களை விரைவில் முடிப்போம். பள்ளிவாசல்கள், கோயில்கள், தேவாலயங்கள், விகாரைகள் போன்றவற்றை ஒரேமாதிரி பாதுகாப்போம். இது உறுதி.

கிழக்கின் உதயம் உங்கள் உதயமாகும். உங்கள் எதிர்கால உதயமாகும். எந்த தீர்மானம் எடுத்தாலும் புத்தியுடன் செயற்பட வேண்டும். எங்களோடு சேர்ந்து வேலை செய்யக்கூடிய நண்பர்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அப்போது உங்களுக்கும் வசதி. எங்களுக்கும் வசதி. எல்லோருக்கும் வசதி. நான் உங்கள் தோழன். நான் உங்கள் சொந்தக்காரன். நீங்கள் என்னை நம்பாவிட்டாலும் நான் உங்களை நம்புகின்றேன். வெற்றிலையின் வெற்றி உங்கள் வெற்றி. வெற்றியின் சின்னம் வெற்றிலைச் சின்னமாகும்"  என்றார்.








  Comments - 0

  • குமார் Tuesday, 04 September 2012 06:52 AM

    யாருக்கு கூறுகிறார்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .