2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

மண்முனைப்பாலத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 05 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான் கரையையும், எழுவான்கரையையும் இணைக்கும் முக்கிய போக்குவரத்துப் பாதையான மண்முனை ஆற்றுக்கு மேலாக அமைக்கப்படவுள்ள பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை பட்டிப்பளை பிரதேச பதில் பிரதே செயலாளர் வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ், வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாணப் பணிப்பாளர் பொறியியலாளர் தர்மராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தொடர்முயற்சி காரணமாக ஜப்பான் அரசாங்கத்தின் ஜெய்க்கா திட்டத்தின் கீழ் 1000 மில்லியனுக்கும் அதிகமான பணச் செலவில் இப் பாலம் அமைக்கப்படவுள்ளது.

இப்பாலம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் கடந்த ஜுலை மாதம் வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கும் ஜெய்க்கா நிறுவனத்திற்குமிடையில் ஜப்பானில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இப்பாலத்தின் நிர்மாண பணிகள் 33 மாதங்களில் நிறைவடையும். மண்முனைப்பாலம் 210 மீற்றர் ஆகவும், இரு பக்கங்களிலும் 500 மீற்றர் அளவான மதகாகவும் (கோஸ்வே) அமைந்திருக்கும். மொத்தமாக 1210 மீற்றரில் இப்பாலம் அமையவுள்ளது.

இரண்டு வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் அமைக்கப்படவுள்ள இப்பாலத்திற்கான அமைப்பு வேலைகள் கடந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படுவதாக இருந்த போதும் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக தாமதப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய போக்குவரத்துப் பாதையாக இருக்கும் மண்முனை ஆற்றுக்கு மேலாக அமைக்கப்படவுள்ள இப்பாலத்தின் மூலம் மட்டக்களப்பின் படுவான்கரைப் பிரதேசத்துக்கான மிகப் பெரியளவான போக்குவரத்துப்பிரச்சினை தீர்க்கப்படும்.

இதுவரை இவ் ஆற்றின் ஊடாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் இயந்திரப்பாதை மூலம் போக்குவரத்துகள் நடைபெற்று வருகின்றன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .