2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

வாக்குகளை சிதறடிக்காமல் தமிழ் மக்கள் த.தே.கூ.விற்கு வாக்களிக்க வேண்டும்: பொன் செல்வராசா எம்பி

Kogilavani   / 2012 செப்டெம்பர் 05 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

'வாக்குகளை சிதறடிக்காமல் அனைத்து தமிழ் மக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் சக்தியாகும்' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஆரைம்யபதி பிரதேசத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'தமிழ் இளைஞர்கள், யுவதிகள், வயோதிபர்கள் மற்றும் குழந்தைகள் வெலிக்கடை, பூசா முகாம், வெலிக்கந்த முகாம் ஆகிய முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் கடந்த 17 ஆண்டுகாலமாக வாடிக் கொண்டிருக்கின்றனர்.
காலத்துக்கு காலம் சட்டங்களை மாற்றி தமிழ் இளைஞர்களை கைது செய்து அவர்களை சிறைச்சாலைகளில் வைத்திருக்கின்ற அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க முடியுமா எனக் கேட்கின்றேன்.

தமிழ் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கடந்த வருடம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும் துர்ப்பாக்கியம் நடந்தது. கிறீஸ் பூதம் தமிழ் பெண்களின் மேல் செய்த அராஜகங்கள், இதனால் பல தமிழ் பெண்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

'இவையெல்லாம் வெறும் பொய். இது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செய்யும் வேலை' என அரசாங்கத்தினர் கூறினர்.
மட்டக்களப்பில் அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டிருக்கின்ற அரசியல்வாதிகள் மட்டக்களப்பிலுள்ள தமிழ் பெண்கள் கண்ணீர் வடிக்கின்ற போதும் தமிழ் பெண்களின் மார்பகங்கள் கீறி கிழிக்கப்பட்ட போதும் இவற்றையெல்லாம் பாராமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போலிகள் என்று கூறி தமிழ் பெண்களை மான பங்கப்படுத்திய அரசாங்கத்திற்கு அந்த அரசாங்கத்தின் சார்பிலே வேட்பாளர்களாக வந்து கொண்டிருக்கின்ற அரசாங்க வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க முடியுமா எனக்கேட்கின்றேன்.

நன்கு சிந்திப்போமாக இருந்தால் அரசாங்க கட்சிக்கு வாக்களிக்க மாட்டோம்.

அபிவிருத்தியைப் பற்றி கூறுகின்றனர். இந்த அபிவிருத்தி வெளிநாடுகளினால் இலங்கையில் தமிழ் மக்கள் பட்ட கஷ்டங்களுக்காக வழங்கப்படும் அபிவிருத்தியாகும்.

தமிழ் மக்கள் எட்டாம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைக்கு வாக்களித்து தமிழ் தேசியத்தின் ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் சர்வதேசத்திற்கு சொல்ல வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .