2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

இந்தத் தேர்தல் சலுகைகளுக்கான தேர்தல் அல்ல: அரியநேத்திரன் எம்.பி.

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 05 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


இந்தத் தேர்தல் சலுகைகளுக்கான தேர்தல் அல்ல. உரிமைகளை பெறுவதற்கான களமாக அமையப்போகின்ற தேர்தலாகும். இந்த தேர்தலானது நடந்த அவலங்கள், தியாகங்கள் என்பவற்றுக்கான முதற்படியாக அமைந்திருக்கின்றது. கிழக்கு மாகாணசபையை நாங்கள் கைப்பற்றுவோம். முதலமைச்சரை பெறுவோம் என்பது இரண்டாவது விடயமாகும். தமிழ் மக்கள் யாரின் பக்கம் இருக்கின்றார்கள் என்று காட்டவேண்டிய தேவை எங்களுக்கு இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, ஆரையம்பதியில் கிழக்கு மாகாணசபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'விடுதலைப் புலிகளை வைத்தே விடுதலைப் புலிகளை அழித்த இந்த மஹிந்த அரசாங்கம், ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சியை அடித்துத் துரத்திய இந்த மஹிந்த அரசாங்கம் இப்பொழுது கிழக்கு மாகாண மக்களை வைத்து எங்களுக்கான தீர்ப்பை வழங்குவதற்கான சந்தர்ப்பமாகத்தான் இந்தத் தேர்தலை முன்னெடுத்திருக்கின்றது.

ஐ.நா. சபைக்கு பதில் கொடுப்பதற்கு இந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நாங்கள் முழுமையாக பயன்படுத்துவோம் என்று அமைச்சர்கள் கூறிக்கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த காலங்களில் பட்ட துயரங்கள், அனுபவித்த அவலங்கள் எல்லாவற்றையும்விட இந்த கிழக்கு மாகாண மக்கள் சலுகைகளையும் அபிவிருத்திகளையும் தான் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் எப்போதுமே அரசியல் தீர்வை விரும்பவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மட்டும் தான் அரசியல் தீர்வை கேட்கின்றார்கள் என்று காட்டுவதற்காகத்தான் இந்த தேர்தலை முற்கூட்டியே நடத்துகின்றார்கள். இதனால் தான் இந்த தேர்தல் முக்கியத்துவம் பெறுகின்றது.

தமிழர்கள் சலுகைக்காக சோரம் போயிருக்கின்றார்களா அல்லது கடந்த 60 வருட போராட்டத்தில் மாவீரர்களாகிய 40 ஆயிரம் பேரை இந்த மண்ணில் புதைத்துவிட்டு இலட்சக்கணக்கான மக்களையும் அழித்துவிட்டு அங்கவீனர்களாக எம் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற 25ஆயிரம் பேர் விதவைகளாக தவிக்கின்ற 85ஆயிரம் தாய்மார்கள் தாய் தந்தையை இழந்த சிறார்கள் அவர்களையெல்லாம் விட்டுவிட்டு எங்களுக்குத் தேவை இந்த கொங்கிறீட் றோட்டும் கார்ப்பட்  வீதியும் சட்டியும் சைக்கிளும் தான் எங்களுக்குத் தேவையா என்று பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். 

விடுதலைப் போராட்டத்தில் மாவீரர்களாகிய பலரை இந்த மண் எங்களுக்குத் தந்திருக்கின்றது. அந்த வகையில் நீங்கள் சோரம் போவீர்களானால் அந்த மாவீரர்களுக்கு துரோகம் செய்தவர்களாகிவிடுவீர்கள். பலர் சலுகைகளைப் பற்றி கதைப்பதற்கே வருகின்றார்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை குறைகூறுவதை தவிர அவர்களுக்கு வேறெதுவும் கதைப்பதற்கில்லை. அவர்களிடம் கொள்கைகள் எதுவுமில்லை.

வெற்றிலை என்பது ஒரு மங்கலப் பொருளாகும். இது எப்போது மஹிந்தவின் கைகளில் பட்டதோ அப்போதே இது தமிழர்களுக்கு அமங்கலப் பொருளாகிவிட்டது. இந்த வெற்றிலை தனித்துப் போட்டியிடவில்லை.இதில் சுண்ணாம்பாக ஒட்டிக்கொண்டிருப்பவர் பிரதியமைச்சர் கருணா அம்மானின் அக்கா. கொட்டைப்பாக்காக இருப்பது பிள்ளையான் குழுவினர். புகையிலையாக இருப்பது ஓட்டமாவடியிலும் காத்தான்குடியிலும் ஏறாவூரிலும் போட்டியிடும் இஸ்லாமிய சகோதரர்கள். அனைத்தையும் சேர்த்து வாயில் போட்டால் தான் வெற்றிலை.

நாங்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் தனித்துவமான சின்னமாக தமிழனின் அடையாளமாக இருக்கின்ற வீட்டுச்சின்னத்தில் போட்டியிடுகின்றோம். நாங்கள் யாருடனும் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை. தனித்துவமான தமிழினத்திற்காக தமிழ்த்தேசியத்திற்காக தமிழ் மக்களின் அவலங்களை நீக்குவதற்காக எதிர்கால தமிழர்களின் அபிலாஷைகளுக்காக இம்முறையும் குரல்கொடுத்துக்கொண்டிருக்கின்ற ஒரே கட்சியாகத்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இருந்துகொண்டிருக்கின்றது.

பலர் அபிவிருத்தி பற்றி கூறுகின்றார்கள். அபிவிருத்தி என்றால் என்ன என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். வெளிநாடு தருகின்ற நிதியை வைத்து செப்பனிட்டு நாடாவெட்டி திறப்பது மட்டும் அபிவிருத்தியல்ல. அந்த நாட்டு மக்கள் சுதந்திரமாகவும் ஜனநாயக ரீதியில் இறைமையுள்ள சமுதாயமாகவும் வாழும்போது அங்கு செய்யப்படும் அபிவிருத்தி தான் முழுமையான அபிவிருத்தியாகும்.

வெளிநாடு தருகின்ற நிதியைக்கொண்டு தாங்கள் அபிவிருத்தி செய்தால் அது முழுமையான அபிவிருத்தியாகாது. அதை முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானும் செய்யலாம். நாளை வருகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சரும் செய்யலாம். அபிவிருத்தி செய்வதற்காக எந்த ஒரு முதலமைச்சரும் தேவையில்லை.

சுமார் 16620 மில்லியன் ரூபாவை கிழக்கு மாகாணத்திற்காக வெளிநாட்டு நிறுவனங்கள் கடந்த நான்கு வருடத்தில் வழங்கியிருக்கின்றன. அதேபோல் வடமாகாணத்திற்கும் நிதியை தந்திருக்கின்றார்கள். வடமாகாணத்தில் முதலமைச்சர்  ஒரு நிர்வாகம் இல்லாமல் அங்கு அபிவிருத்தி செய்ய முடியுமாக இருந்தால் கிழக்கு மாகாணத்திற்கு மட்டும் ஏன் முதலமைச்சர் தேவை? இங்கு 2008ஆம் ஆண்டு முதல் ஒரு நிர்வாகம் இயங்கிக்கொண்டு வந்திருக்கின்றது.

ஆனால் எமது நிலங்கள் அபகரிக்கப்படும்போது அவர்கள் வாய்மூடி மௌனிகளாக இருந்திருக்கின்றார்கள். அல்லது அதற்கு துணைபோனவர்களாக இருந்திருக்கின்றார்கள். எமது மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 25ஆயிரம் ஏக்கர் நிலம் வெளிமாவட்டங்களில் இருக்கின்ற சிங்கள ஊர்காவற்படைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. வழங்கப்பட்ட நிலங்களுக்கு வேலியமைத்துக் கொடுத்திருப்பது முன்னாள் முதலமைச்சரின் நிர்வாகம். இதை எவரும் தட்டிக்கேட்கவில்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதை தடுக்கவேண்டும் என்று இப்போது நீதிமன்றம் சென்றிருக்கின்றது.

இந்த தேர்தல் சலுகைகளுக்கான தேர்தல் அல்ல. உரிமைகளை பெறுவதற்கான களமாக அமையப்போகின்ற தேர்தலாகும். 2009இல் முள்ளிவாய்க்காலில் மரண படுகொலைகள் இடம்பெற்றதன் பின்பு மட்டக்களப்பில் பல இடங்களில் வெற்றி விழாக்கள் கொண்டாடப்பட்டன. முன்னாள் முதலமைச்சர், பிரதியமைச்சர் உட்பட பலரும் மாமாங்கஆலயத்தில் பூசைவழிபாடுகளை நடத்தி கொண்டாடினார்கள். ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆகிய நாங்கள் ஒவ்வொரு வருடமும் மரணித்தவர்களுக்கு கிரியைகளை செய்துவருகின்றோம்.

ஒரு விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக மாறி அதனை அடக்குகின்றபோது அதை அழித்த தலைவருக்கு நன்றி செலுத்துங்கள் என்று ஹிஸ்புல்லாஹ் கூறுகின்றார். அப்படியானால் விடுதலைப்போராட்டத்தை நடத்திய நாங்கள்  யாருக்கு நன்றி சொல்ல வேண்டும்?
இந்த தேர்தல் நடந்த அவலங்கள் தியாகங்கள் என்;பவற்றுக்கான முதற்படியாக அமைந்திருக்கின்றது. கிழக்கு மாகாணசபையை நாங்கள் கைப்பற்றுவோம் முதலமைச்சரை பெறுவோம் என்பது இரண்டாவது விடயமாகும். தமிழ் மக்கள் யாரின் பக்கம் இருக்கின்றார்கள் என்று காட்டவேண்டிய தேவை எங்களுக்கு இருக்கின்றது. தமிழனாக இருக்கின்றானா அல்லது வேறு இனத்துக்கு மாறிவிட்டானா அல்லது சோரம்போய்விட்டானா? என்பதை காட்டவேண்டிய தேவையிருக்கின்றது. அந்த தேவைகளின் காரணமாகவே இந்த தேர்தல் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தவையாகவுள்ளது.

கடந்த தேர்தல் வரலாறுகளை நாங்கள் எடுத்து பார்ப்போமாகவிருந்தால் ஆரையம்பதியாக இருக்கலாம் அல்லது மட்டக்களப்பு மாவட்டமாகவிருக்கலாம் வாக்களிப்பு வீதம் மிகவும் குறைவாக இருக்கின்றது. 40 வீதத்தை தாண்டியதாக வரலாறு இல்லை. எனவே நீங்களும் அதே பிழையைவிட வேண்டாம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .