2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

கிழக்கு மாகாணசபை தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவிப்பு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 12 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித், ஜவீந்திரா, எம்.சுக்ரி)

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்கள், தங்களவு வெற்றிக்கு காரணமாக இருந்தவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் பின்வருவமாறு,

த.தே.கூ உறுப்பினர் கே.கருணாகரம் (ஜனா) விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவானது, தமிழ்த் தேசியம் சர்வதேசத்திற்கு எதைச் சொல்ல விரும்புகின்றதோ, சர்வதேசம், புலம்பெயர் சமூகம் எதைச் சாதிக்க நினைத்ததோ அதே போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத்திட்டமிடலும் நடவடிக்கைகளும் எவ்வாறு அமைய வேண்டும் உள்ளிட பலவேறு விடயங்களுக்கான பதிலாக அமைந்துள்ளது.

நீண்டகால அஞ்ஞாதவாசத்தின் பின் இலங்கை தமிழ் தேசிய அரசியலில் குதித்த எனக்கு என்தமிழ் மக்கள் அளித்த பேராதரவிற்கு நன்றிகள். தனிமனித காழ்புணர்வுக்குட்பட்ட விமர்சனங்கள், என்மீது ஏவப்பட்ட எதிர்வலைகள் என்ற பல்முனைத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் எம் தமிழ் சொந்தங்கள் என் தமிழ் தேசிய பற்றுநிலையை மறக்கவில்லை என்பதற்கு என்னையும் ஒருவனாகத்தெரிவு செய்தமை சான்று மட்டுமல்ல எனக்குப் புல்லரிப்பும் கூட.

தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் நடந்த கபட நாடகங்கள், அமைச்சர் பட்டாளங்களின் தேர்தல் விதிமுறை மீறல்கள், இதைவிட அரசினதும், அமைச்சர்களினதும் அடிவருடிகளினதும் அடாவடித்தனங்கள், அரச அரச இயந்திரமே கட்சிப் பிரச்சாரத்திற்குட்படுத்தப்பட்ட அவலட்சணம்.

இவ் வரலாற்று வெற்றி தமிழ் தேசியத்துக்கும் தமிழின விடுதலைப் போராட்டத்தில் ஆரம்பம் முதல் முள்ளிவாய்க்கால் வரை உயிர் நீத்த அத்தனை வீரமறவா தமிழனத்துக்கும் நாம் செலுத்தும் ஒரு அஞ்சலியாகும். அவர்கள் அனைவரது ஒட்டு மொத்த தாயகத்துக்கும் கிடைத்த வெற்றியாகும். அத்தோடு இன்றுவரை அரசின் முகாமுக்குள்ளும், சிறைக்கூடங்களிலும் தம் வாழ்வைத் தொலைத்த எம் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் விடியலைத் தரும் வெற்றியாகும்.

ஐ.ம.சு.கூ உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'மக்கள் வழங்கிய ஆணை மூலம் கிடைத்துள்ள அரசியல் அதிகாரத்தை மக்களின் சுபீட்சத்துக்காக உபயோகிப்பதே எனது இலக்கு.

அரசியலில் இணைந்து ஏறக்குறை 50 நாட்களில் நடந்த இம்மாகாண சபைத் தேர்தல் முதற் தடவையாகப் போட்டியிட்ட எனக்கு  அம்பாறை மாவட்ட மக்கள் அரசியல் அதிகாரத்தினை வழங்கியுள்ளனர்.

இந்த வெற்றியைத் தந்த வல்ல அல்லாஹ்வை முதற்கண் புகழ்ந்தவனாக என் வெற்றிக்காக வாக்களித்தது மற்றுமின்றி இவ்வெற்றிக்காக உழைத்த அம்பாறை மவாட்டத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரதேச மக்களுக்கும் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மக்கள் வழங்கிய ஆணை மூலம் கிடைத்துள்ள அரசியல் அதிகாரம் மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும்.

இதுவே எனது குறிக்கோளாகவுள்ளது.

அந்தவகையில் எவ்வித பாகுபாடுகளுமின்றி எனக்குக் கிடைத்துள்ள இந்த அரசியல் அதிகாரத்தினை பிரதேச மக்களின் சுபீட்சமான வளம் நிறைந்த வாழ்வுக்காக உபயோகிகத் திட்டமிட்டுள்ளேன்.


த.தே.கூ உறுப்பினர் இரா.துரைரெத்தினம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான உறுப்பினர்களின் பாதுகாப்பினை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறான உறுப்பினர்கள் என்ன கோரிக்கையை மக்களிடம் முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டார்களோ அந்தக் கொள்கையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உறுதியாகவும் இருந்தாக வேண்டும்.

அக்கொள்கை விலை பேசப்பட்டு கொள்கை செத்து மடிவது மக்கள் எமக்குத் தந்த அங்கீகாரத்துக்கு செய்யும் துரோகமாகும். கிழக்கு மாகாணத்தின் பெரும்பான்மை மக்கள் கிழக்கு மாகாணத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆள வேண்டும் என விரும்புகிறார்கள்.

இதற்கு மக்கள் பிரதிநிதிகள் அழுத்தம் கொடுக்கிறார்கள். மக்கள் நலனில் அக்கறையுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆட்சி அமைப்பு தொடர்பில் தெளிவான முடிவை எடுப்பார்கள் என நம்புகிறேன்.

கிழக்கு மாகாண சபையை சிறுபான்மை சமூகம் ஆள்வதால் எமது சமூகங்களுக்கு பலதரப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.

இதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறுபான்மைக்கட்சிகளுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. இதனைத் தீர்மானிக்க வேண்டிய சக்திகள் உணர்ந்து செயற்பட வேண்டும்.

த.தே.கூ உறுப்பினர் மார்கண்டு நடராசா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

அரசியலில் முதன் முதல் காலடியெடுத்து வைத்து அரசியலில் கன்னிப்பயணத்தில் இறங்கிய எனக்கு வெற்றியை ஈட்டுத்தந்த எனதினிய மட்டக்களப்பு வாழ் தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உண்மையிலேயே மட்டக்களப்பு தழிழ் மக்கள் கடந்த காலங்களில்பட்ட கசப்பான விடயங்களை தங்களது அடிமனதில் போட்டு தற்போது மெல்ல மெல்ல அரசியல் நீரோட்டத்தில் விழிப்படைந்து வருகின்றார்கள்.

மட்டக்ளப்பு மக்கள் கடந்த 60 வருடகாலமாக பற்பல இடர்களைச் சந்தித்தவர்கள் பெறுமதி மிக்க சொத்துக்கள் விலை மதிக்க முடியாத உயிர்களையும் இழந்தும்கூட இன்றுவரை அரசியல் தீர் வொன்று கிடைக்காத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறான நிலையில் நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நாம் பற்பல சவால்களை எதிர்கொண்டோம். அதுபோல் எனதினிய தழிழ் உறவுகளும் பாரிய பிரச்சினைகளை இத்தேர்தலில் சந்தித்துள்ளர்கள்.

இவ்வாறான சவால்களின் மத்தியிலும் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்கழித்து முதன்முதலாக அரசியலில் இறங்கிய என்னை மாகாண மன்றிற்கு அனுப்பியிருக்கும் மட்டக்களப்பு வாழ் தழிழ் சமூகத்திற்கு, எனது கருத்துக்களை வெளிக்கொணர்ந்த ஊடகங்களுக்கும் எனது உளமறிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தட்டிக்கேட்பவனாகவும் சர்வதேசத்தில் எம்மினத்தின் பிரச்சினைகளை எடுத்தியம்பவும் என்றென்றும் கடமைப்பட்டவனாகத் திகழ்வேன்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .