2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

சமூக செயற்பாட்டு வெளியீடுகளும் காட்சிப் பகிர்வுக் கொண்டாட்டமும்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 14 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்,ஜிப்ரான்)


மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் சமூகச் செயற்பாட்டு வெளியீடுகளும் காட்சிப் பகிர்வுக் கொண்டாட்டமும் இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு பயினியர் வீதி வாகைமர நிழலில் ஆரம்பமானது.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் முற்பகல் 10 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறவுள்ள இந்நிகழ்வில் மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிறுவனம், மட்டக்களப்பு மூன்றாவது கண்: உள்ளூர் அறிவு திறன் செயற்பாட்டுக்குழு, மறுகா: புதிய தலைமுறைக்கான உடைப்பு, காகம் ஆகிய அமைப்புக்கள் பங்குகொள்கின்றன.

மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன், பிரதி மேயர் ஜோர்ச்பிள்ளை, வவுணதீவு பிரதேச செயலாளர் தவராசா, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறைத் தலைவர் கலாநிதி சி.ஜெயசங்கர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தமிழ் பேசும் மக்களின் கலை, இலக்கிய, பண்பாடு சார்ந்த சமூகச் செயற்பாட்டு வெளியீடுகளின் காட்சியும் பகிர்வும் கொண்டாட்டமும் அடங்கிய நிகழ்வில் பயனியர் வீதியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் பதிப்புகளின் காட்சியும் கலை, கலாசார ஆற்றுகை நிகழ்வுகளும் பாரம்பரிய உணவு மற்றும் சிற்றூண்டி விற்பனையும் இடம்பெறுகின்றன.

சமூகச் செயற்பாட்டு வெளியீடுகளின் காட்சியும் பகிர்வும் கொண்டாட்டமும் எந்தவொரு சமூக மாற்றத்திலும் முன்நிபந்தனையான பணிகளாகக் கொள்ளப்படுகின்றன. போருக்குப் பிந்திய இலங்கை வாழ்வியல் பல்வேறு நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டு நிற்கின்றது.
போர் மட்டுமே பிரச்சினையாகப் பார்க்கப்பட்ட நிலை மாறி பல்வகையான சமூக பொருளாதார பண்பாட்டு நெருக்கடிகள் மேற்கிளம்பியிருக்கும் இச்சூழலில் அதற்கான தீர்வுகளை நோக்கிய செயல்வாதங்களை முன்வைப்பதில் பதிப்புகளும் வெளியீடுகளும் புதிய சிந்தனைகளும் மாற்றுத் தீர்வுகளும் அவசியத்தேவையாக இருக்கின்றன.  எனவே இப்பிராந்தியத்தில் ஓரிரு தசாப்தங்களாக சமூகமாற்ற பணிகளில் பங்களித்துவரும் மேற்குறித்த சிறுசமூகங்களின் பதிப்புகளையும் வெளியீடுகளையும் காட்சிப்படுத்துவது முக்கியமெனக் கருதி இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .