2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கிழக்கு மாகாணத்துக்கு தெரிவான த.தே.கூ. உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்காமல் அரசாங்கம் இழுத்தடிக்கி

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 24 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தெரிவான மாகாணசபை உறுப்பினர்களுக்கான அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கான பாதுகாப்பை வழங்காது அரசாங்கம் இழுத்தடித்து வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நிறைவடைந்து இன்றுடன் 15 நாட்களாகியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாகாணசபை உறுப்பினர்களுக்கான பாதுகாப்பை வழங்காமல் அரசாங்கம் இழுத்தடித்து வருகின்றது.

வேட்புமனுத் தாக்கல் செய்த காலம்தொட்டு இன்றுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றதுன.

இந்நிலையில், இது குறித்து நாங்கள் தேர்தல் ஆணையாளரிடம் தெரிவித்திருந்தோம். அவர் எங்களை பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கும்படி கூறினார். நாங்கள் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்தோம். ஆனால் பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து அனுமதி கிடைத்தால்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான பாதுகாப்பை வழங்க முடியும் எனக் கூறியுள்ளார்.

அரசாங்கத்தை பொறுத்தவரை அவர்களுடன் இணைபவர்களுக்கு மாத்திரம்தான் பாதுகாப்பு வழங்க முடியும் ஏனையவர்களுக்கான பாதுகாப்பை வழங்க முடியாது என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களுக்கான பாதுகாப்பை வழங்காது அவர்களை தொடர்ச்சியாக அச்சுறுத்துவதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்திவிடலாம் என்று அரசாங்கம் கனவு காண்கின்றது.

கூட்டமைப்பை பொறுத்தமட்டில் நாங்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுத்துள்ளோம். பல நாடாளுமன்ற உறுப்பினர்களை பலி கொடுத்துள்ளோம். எனவே அரசாங்கத்தின் இந்த குள்ளநரித்தனத்திற்கு நாங்கள் விலை போகமாட்டோம்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையிலே எங்களுக்கான பாதுகாப்பை வழங்க வேண்டிய கடமை பொலிஸ்மா அதிபருக்குள்ளது. அதை வழங்குமாறே நாங்கள் கேட்கின்றோமே தவிர சலுகைகளை கேட்கவில்லை' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .