2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் 'ஊடகமும் சமூகப்பொறுப்பும்' என்ற தலைப்பில் கலந்துரையாடல்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 01 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுக்ரி, கே.எஸ்.வதனகுமார்)
'ஊடகமும் சமூகப் பொறுப்புணர்வும்'  என்ற தலைப்பில் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் கலந்துரையாடல் எதிர்வரும்; 12, 13 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு 'பிரிஜ் வீவ் ஹோட்டலில்' நடைபெறவுள்ளது.

ஊடகம் தொடர்பாக மக்கள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்தி ஊடகங்களுக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படும்போது அவற்றை எவ்வாறு அணுகுவது என்பது தொடர்பாக சிவில் சமூகத்தவர் மத்தியில் அறிவூட்டும் வகையிலும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஊடகத்துறை தொடர்பாக அறிவூட்டும் வகையிலும் இந்த கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, செய்தி மற்றும் தகவல் சேரித்தல், அறிக்கையிடல் ஆகிய செயற்பாடுகளின் போது ஊடகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவால் கண்காணிக்கப்படுகின்ற இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள பத்திரிகைத்துறைசார் ஒழுக்கக்கோவை தொடர்பாக கலந்துரையாடுவதன் மூலம் ஊடகவியலாளர்களுக்கும் இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவுக்கும் இடையில் இணைப்பை பலப்படுத்துவதும் இந்த சந்திப்புக்களின் முக்கிய குறிக்கோள்களாகும்.

இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு நடத்தும் சிவில் சமூக பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்; எதிர்வரும் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 3.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் சிவில் சமூக பிரதிநிதிகள் பங்குபற்ற முடியும்.
ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல்; 13 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மதிய போசனம் வரையில் நடைபெறும். இதேவேளை, ஊடகத்துறையில் ஆர்வம் காட்டக் கூடிய இளைஞர்களுக்கான ஊடக அறிவூட்டல் கருத்தரங்கு அதே தினம் காலை 8.30 முதல் பி.ப. 3.30 மணி வரை நடைபெறும்.

அத்துடன் பாடசாலைகளில் ஊடகமும் தொடர்பாடலும் பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கான ஊடகம் பற்றிய அறிவூட்டல் கருத்தரங்கு 2012
அக்டோபர் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் பி.ப. 1.00 மணி வரை மட்டகக்ளப்பு மகாஜனக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

இந்த நிகழ்வுகளில் பங்குபற்ற விரும்பும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் ஊடகத்துறையில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள் ஆகியோர் எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு முன்னர்  இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு, இல: 96, கிருல வீதி, கொழும்பு – 05 என்ற முகவரியுடன் அல்லது 011 – 5353635 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்வதன் மூலம் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியும்.

மேற்படி கரந்துரையாடல் மற்றும் கருத்தரங்குகளில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி இம்ரான் புர்கான், இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் முறைப்பாட்டு உத்தியோத்தர் எம்.எஸ்.அமீர் ஹூசைன் உட்பட பலரும் கலந்து கொள்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .