2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

கொள்ளைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மாநகரசபைக் காவலாளிகளுக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 02 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்,ஜிப்ரான்)


மட்டக்களப்பு நகரப் பகுதியில் வீடுகளை உடைத்து கொள்ளைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட  மட்டக்களப்பு மாநகரசபைக் காவலாளிகள் மூவருக்கு எதிர்வரும்  12ஆம் திகதிவரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மட்டக்களப்பு நகரப் பகுதியிலுள்ள வீடுகளை உடைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த குற்றச்சாட்டின் பேரில் இச்சந்தேக நபர்கள் மட்டக்களப்பு பொலிஸாரினால் கடந்த சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டதுடன், கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் 400,000 ரூபா பெறுமதியான பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். 

இதனையடுத்து, இச்சந்தேக நபர்கள் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே இவர்களை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கடந்த 13ஆம் திகதி இரவு திருப்பெருந்துறையிலுள்ள சமூக அபிவிருத்தி நிறுவனம் உடைக்கப்பட்டு அங்கிருந்து கணினி உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக 14ஆம் திகதி மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.  கடந்த 24ஆம் திகதி இரவு மட்டக்களப்பு மாநகரின் மத்தியிலுள்ள முனை வீதியில் ஆட்கள் எவரும் இல்லாத வீடொன்று உடைக்கப்பட்டு மடிக் கணினி, கமெரா, தங்கநகை ஆகியன  கொள்ளையிடப்பட்டதாக 25ஆம் திகதி மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக்கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏ.ரவிந்திர வைத்தியலங்கார, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம்.ஏ.அஜந்த சமரக்கோன், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்தின ஆகியோரின் வழிகாட்டலின் கீழ்,  மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பெருங்குற்றப் புலன் விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி ரி.சாந்தகுமார் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணையின்போது இச்சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இச்சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, இக்கொள்ளைகளில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டு  கொள்ளையிட்டதாகக் கூறப்படும் பொருட்களை விற்பனை செய்த இடங்களையும் பொலிஸாரிடம் தெரிவித்தனர். சின்ன ஊறணி, சுவிஸ் கிராமம், தளவாய் போன்ற இடங்களில் பணத்திற்கு கொள்வனவு செய்தவர்களெனக் கூறப்படுபவர்களிடமிருந்து இப்பொருட்களை பொலிஸார் மீட்டனர்.

இதேவேளை, கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மட்டக்களப்பு நகரில் பெண்ணொருவரின் தங்கச்சங்கிலி பறிபோனமை தொடர்பில் மட்டக்களப்புப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையையடுத்து 24ஆம் திகதி ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.  இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் 3 தங்கச்சங்கிலிகள் ஏறாவூர்; நகைக்கடையொன்றில்; விற்பனை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சந்தேக நபர் கடந்த 25ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இவரை எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.  சந்தேக நபர் நேற்று நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். படங்கள்:-கே.எஸ்.வதனகுமார்



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .