2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2012 நவம்பர் 24 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியிலுள்ள தமிழ் கிராமங்களிலிருந்து 1990 காலப் பகுதியில் இடம்பெயர்ந்து தற்போது காரமுனை, புணானை அணைக்கட்டு, வாகனேரி, அல்மஜ்மா மேற்கு மற்றும் அல்மஜ்மா தெற்கு கிராமங்களில் மீள் குடியேறியுள்ள முஸ்லிம் மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதிடம் கல்குடா விவசாயச் சங்கத் தலைவர் தலைமையிலான குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நஸீரை, அவருடைய ஏறாவூர் அலுவலகத்தில் கல்குடா விவசாயச் சங்கத் தலைவர் ஐ.எல்.எம்.முஸ்தபா தலைமையிலான குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்த போதே மேற்படி வேண்டுகோளினை முன்வைத்தனர்.

அமைச்சர் ஹாபிஸ் நஸீரிடம் மேற்படி குழுவினர் மேலும் கூறுகையில்,

'இன முரண்பாடுகள் தீவிரமடைந்திருந்த 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில், கல்குடாத் தொகுதியிலுள்ள 33 தமிழ் கிராமங்களிலில் வசித்து வந்த முஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களிலிருந்து வெளியேறினர். இதன்போது, அறுவடைக்குத் தயாராக இருந்த தமது 30 ஆயிரம் ஏக்கர் நெற்காணிகளையும், உழவு இயந்திரங்கள் உள்ளிட்ட விவசாய உபகரணங்ளையும், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளையும் இவர்கள் கைவிட நேர்ந்தது.

பின்னர், 2008 ஆம் ஆண்டளவில் மேற்படி மக்கள் - காரமுனை, புணானை அணைக்கட்டு, வாகனேரி, அல்மஜ்மா மேற்கு மற்றும் அல்மஜ்மா கிழக்கு ஆகிய 05 கிராமங்களில் சுயமாகக் மீள் குடியேறி வசித்து வருகின்றனர். ஆயினும், இந்த மக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து எவ்விதமான உதவிகளோ மானியங்களோ இதுவரைக் கிடைக்கவில்லை. இங்கு வசிக்கும் மக்களுக்கு இதுவரை குடிமின்சாரம், நீர் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை. வீதி வசதிகளும் இங்கு இல்லை.

இதேவேளை, இந்த மக்களுக்குச் சொந்தமான சுமார் 2000 ஏக்கள் விவசாயக் காணிகளின் அனுமதிப் பத்திரங்கள் தற்போது வேறு நபர்களின் பெயர்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. வாகனேரி பிரதேச செயலகத்துக்குச் சென்று இந்த மக்களுடைய காணி அனுமதிப் பத்திரங்களின் இலங்களைக் குறிப்பிட்டுத் தேடியபோது, அவை வேறு நபர்களின் பெயர்களில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மேற்படி கிராமங்களில் மீள் குடியேறிய மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான நீர்பாசன வசதிகளும் இல்லாமல் உள்ளன.

எனவே, காரமுனை, புணானை அணைக்கட்டு, வாகனேரி, அல்மஜ்மா மேற்கு மற்றும் அல்மஜ்மா தெற்கு கிராமங்களில் மீள் குடியேறியுள்ள முஸ்லிம் மக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தருவதோடு, இப் பகுதி மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நீர்ப்பாச வசதிகளையும் நிறைவேற்றுவதற்கு உதவுங்கள்' என்றனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹாபிஸ் நஸீர், குறித்த கிராமங்களுக்கு தான் விரைவில் விஜயம் செய்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து நேரில் கேட்டறிந்து கொள்ளவதாகக் கூறினார். இதேவேளை, இந்தக் கிராம மக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு - கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து உதவிகளைப் பெறுவதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஆரம்ப முயற்சியாக - இங்குள்ள மக்களின் விவசாயத் தேவைகளுக்கான நீர்ப்பாசன வசதிகளை முதலில் நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .