2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

கட்சி பேதமின்றி வீடுகளை வழங்கவும்: முதலமைச்சருக்கு துரைரட்ணம் கடிதம்

Kogilavani   / 2012 நவம்பர் 26 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                             (ரி.லோஹித்)
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுகென இந்திய, இலங்கை அரசுகள் மற்றும் நிறுவனங்கள், ஊடாக கட்டிக்கொடுக்கவுள்ள வீடுகளை அரசியல் கட்சிசார்பாக வழங்காமல்  பொதுவான விதிமுறைக்கு கீழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யுத்தத்தின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில்  பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுத்தல் எனும் தலைப்பிட்டு கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

செங்கலடி  பிரதேச செயலாளர்  பிரிவில் ஏறாவூர்  4ஆம் குறிச்சியில் 1990 ஆம் ஆண்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு  இடம்பெயர்ந்து மீண்டும் சொந்த இடங்களுக்கு  திரும்பிய மக்கள் உடைக்கப்பட்ட வீடுகளிலும், குடிசைகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு இன்னும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை. வாக்காளர் இடாப்பில் காணிகளுக்கான உறுதிகள் உள்ளன.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வலையிறவு கிராமத்தில் 1987 ஆம் ஆண்டு இராணுவமுகாம் அமைக்கப்பட்டதால் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள்    2009 ஆம் ஆண்டு முகாம் அகற்றப்பட்டபின்னரும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படாத நிலையில், சுமார் 20 குடும்பங்கள்  சொந்த இடத்தில் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் கடந்த மூன்று வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு வாக்காளர் இடாப்பு மற்றும் காணிகளுக்கான உறுதிகள் உள்ளன.

வவுணதீவு பிரதேசசெயலாளர் பிரிவில்  யுத்தத்தின் போது உன்னிச்சை 8ம் கட்டையில் 1990  ஆம் ஆண்டு 50 குடும்பங்கள் இடம்பெயர்ந்தனர்.

இவ்விடத்தில் வீடுகள்  உடைக்கப்பட்டு, இராணுவமுகாம் அமைக்கப்பட்டது. இற்றைக்கு 5 வருடங்களுக்கு முன்  மீண்டும் முகாம் அகற்றப்பட்டு குறிப்பிட்ட சிலகுடும்பங்களுக்கு மட்டும் வீடுகள் வழங்கப்பட்டன. மிகுதிக் குடும்பங்கள் வீடுகள் அற்றநிலையில் வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றனர்.  சிலர் உறவினர்களின வீடுகளிலும் தங்கியுள்ளனர். இவர்களுக்கும் காணி உறுதி, வாக்காளர் இடாப்பு போன்றவைகள் உள்ளன.

1985ஆம் ஆண்டிற்கு முன்  நடந்த இனக்கலவரத்தின் போது சிப்பிமடு கிராமத்தில்  வாழ்ந்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்தோர்   இடம்பெயர்தனர். அத்தோடு 1985 ஆம் ஆண்டு பாவற்கொடிச்சேனையில் வாழ்ந்து வந்த முஸ்லிம்களும்   இனக்கலவரத்தின்போது இடம்பெயர்ந்தனர்.

இக்கிராமங்களில்  ஒருசிலரை தவிர பலர் காடுவெட்டி சேனை செய்தவர்கள்.  இத்தோடு பலருக்கு வாக்காளர் இடாப்பும் காணிக்கான ஒப்பங்கள் இருக்கவில்லை.  ஒப்பம் இருந்த சிலர் காணிகளை தமிழர்களுக்கு விற்றுவிட்டது குறிப்பிடதக்கதாகும்.

 தற்சமயம் வாக்காளர் இடாப்பில் பெயர் அற்றவர்களும், காணியை விற்றவர்களும்,  உறவினர்கள் என  மீளக்குடியமரவிருகின்றனர்.  இப்பகுதியில் இடம்பெயர்ந்தவர்களுக்கு வேறு இடங்களில் அரச காணிகளும் வீடுகளும் கடந்தகாலத்தில் வழங்கப்பட்டுவிட்டன.   

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில்- கச்சைக்கொடி  சுவாமிமலை கிராமசேவையாளர் பிரிவில் கெவிளியாமடுகிராமத்தில் 1986ஆம் ஆண்டு 104 குடும்பங்கள் இனக்கலவரத்தின்போது இடம்பெயர்ந்து கடந்த இரண்டு வருடகாலமாக 18 குடும்பங்கள் மீளக்குடியமர்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு ரூபா ஒரு இலட்சம்  பெறுமதியான  வீடுகளை  வழங்கியும் ஏனைய 85 குடும்பங்களுக்கு  வீடுகள் வழங்கப்படவில்லை
மிகுதியானோர்  களுதாவளை, தேத்தாத்தீவு போன்ற கிராமங்களில் வாழ்கின்றனர்.  1986 ஆண்டு வாக்காளர் இடாப்பு ,காணி உறுதிகள் இவர்களுக்கு இருந்தும் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவில்லை.

மாவட்டத்தில் பல தமிழ் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ளவர்கள் 1986ஆம், 1990 ஆம்,  2002 ஆம் ஆண்டுகளில்  இடம்பெயர்ந்து  தற்சமயம்  இந்தியாவில்  இருந்து வந்த குடும்பங்களும்,  வன்னியில்  இருந்து வந்த பல நூற்றுக்கணக்கான   குடும்பங்களும், சொந்தமாவட்டத்திற்குள்ளேயே இடம்பெயர்ந்தவர்களும் மீளக்குடியமர்ந்துள்ளனர்.  இவர்களுக்கான  வீடுவசதிகள்  கூட இன்னும் செய்து கொடுக்கப் படவில்லை.

மாவட்டத்தில் அண்ணளவாக  17500 விதவைகள்  உள்ளனர்.  குறைந்தது 850 பேர் சகல பிரதேச செயலாளர் பிரிவிலும் வீடுகள் இல்லாத நிலையில் உள்ளனர்.

கடந்த காலங்களில்  வறுமை காரணமாகவும் இயற்கை அனர்த்தம் காரணமாகவும் பாதிக்கப்பட்டவர்களும் உள்ளனர்.

1990 ஆம் ஆண்டு கிரான் பிரதேசசெயலாளர் பிரிவில்  வடமுனை, ஊத்துச்சேனை  பகுதியில் இடம் பெயர்ந்து மீண்டும் குடியமர்ந்துள்ளனர். இவர்களுக்கான வீடுகள் வீட்டு வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும்.

1987 ஆம் 1990 ஆம் ஆண்டும் வாகரைபிரதேச செயலாளர் பிரிவில் தோணிதாட்டமடு,  ஓமடியாமடு, வாகரையூனியன்கொணனி, (சிலகுடும்பம்) கேணிநகர் போன்ற கிராமங்களில்  இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்துள்ளனர்.  இவர்களுக்கான வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவில்லை.

இத்தோடு 1983 தொடக்கம் 2002 வரை பலதடவைகள் இடம்பெயர்ந்த புணாணைமேற்கு பகுதியில் உள்ள நான்கு கிராம பகுதிமக்களுக்கு இன்னும் நிரந்தர வீடுகள்கட்டிக்கொடுக்கப்படவில்லை.

வெல்லாவெளி பிரதேசசெயலாளர் பிரிவில் உள்ள இறணைமடு கிராமம் இடம்பெயர்ந்து இன்னும் நிரந்தரவீடு கட்டிக்கொடுக்கப்படுவதில்லை. இத்தோடு மண்டுர் பாலமுனை கிராமத்தில் 1990 ஆம் ஆண்டு  இராணுவமுகாம் அமைக்கப்பட்டு மீண்டும் பொலிஸ்பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டு முகாம் இடம்மாறும் நிலையில் அங்கு இல்லாமல் போன 28 வீடுகள் கட்டிமுடிக்கப்படவில்லை.

இப்படி மக்கள் வீடற்ற நிலையில் இருக்கும்போது முறைகேடான வகையில் ஒருசில அரசியல் வாதிகள் வீடுகளைகட்டி தருவதாக வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுவது  தடுத்துநிறுத்தப்படவேண்டும்.

ஒருசில கிராமங்களில்  இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு   கடந்த காலங்களில்  அரசியற் பலம் மிக்கவர்களால் வேறு இடங்களில்  காணிகளையும் வீடுகளையும்  வழங்கிவிட்டு மீண்டும்  வாக்காளர் இடாப்பும் காணிக்கான உறுதியும் இல்லாதவர்களுக்கு மீளக்குடியமர்வுக்கான கொடுப்பனவை வழங்கமுற்படுவது நியாயம் இல்லை.

எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகட்டுவதற்கு பொதுவான விதிமுறையை கடைபிடித்து இந்திய அரசு, நிறுவனங்கள்,  இலங்கை அரசு போன்றவர்கள் வழங்கும் வீட்டுத்திட்டங்களை அரசியல் கட்சிசார்பாக வழங்காமல்  பொதுவான விதிமுறைக்கு உட்படுத்துமாறு மிகவும் கேட்டுக்கொள்கின்றேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரதிகள், அசாங்க அதிபர் மட்டக்களப்பு மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .