2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

யாழ். பல்கலைகழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய இராணுவத்தினர் கைது செய்யப்பட்ட வேண்டும்: அரியநேத்த

Super User   / 2012 டிசெம்பர் 02 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)
 
யாழ். பல்கலைகழக மாணவர்கள் ஜனநாயக ரீதியில் மேற்கொண்ட போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"மாவீரர் தினம் என்பது எமது உறவுகளின் நினைவு தினமாகும். அதனை நினைவு கூருவது என்பது நாம் எமது உறவின் ஆத்மாக்கள் சாந்தியடைய வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் எமக்காக உயிரை விட்டவர்கள் அவர்களுக்கு நாங்கள் செய்யும் நன்றி கடனாகவுமே இடம்பெறுகின்றன.

இவ்வாறானவேளையில் அந்த இடத்துக்கு சென்று இராணுவத்தினர் உடைத்து அதனை அனுஸ்டிப்பவர்களை தாக்குவது என்பது அது அவர்களின் காட்டுமிராண்டித்தன நடவடிக்கையினையே காட்டுகின்றது.யாழ். பல்கலைகழக மாணவர்கள் அமைதியான முறையில் அனுஸ்டித்த அந்த நிகழ்வுக்குள் புகுந்த படையினர், அங்கிருந்த தீபங்களை உடைத்துள்ளதுடன் மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அமைதியான முறையிலே மாணவர்கள் நடத்திய நிகழ்வை வன்முறை நிகழ்வாக மாற்றியுள்ளனர். அங்கு இடம்பெற்ற அனைத்து வன்முறைகளுக்கும் இராணுவத்தினரும் புலனாய்வுத்துறையினரும் படையினருடன் இணைந்து செயற்படும் ஒட்டுக்குழுவினருமே பொறுப்பேற்க வேண்டும்.

அதுமட்டுமன்றி மாணவர்களுக்கு பிரச்சினையேற்பட்டுள்ளது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற எமது சக நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அவரது வாகனமும் படைப் புலனாய்வு துறையினராலும் ஒட்டுக்குழுக்களாலும் பொலிஸ் மற்றும் படையினர் முன்பாக தாக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதியென்ற வகையில் மக்களுக்கு ஒரு பிரச்சினையென்றால் அவ்விடத்துக்கு செல்லவேண்டியது மக்கள் பிரதிநிதியாகிய எங்களின் கடமையாகும். இவ்வாறான நிலையில் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமானது இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்பு இல்லையென்பதையே காட்டுகின்றது.

இதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பானது சர்தேசத்தின் மூலமும் ஐ.நா. மூலமும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. தமிழ மக்களின் சிறிய உணர்வைக்கூட புரிந்துகொள்ளாத இந்த அரசாங்கம் இந்த நாட்டில் கடந்த 60 வருடமாக எதிர்கொண்டுள்ள பிரச்சினையை புரிந்துகொள்ளுமா என்பதே எமது கேள்வியாகவுள்ளது.

அதற்கேற்றாற் போலவே கடந்த காலந்தொட்டு சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன. இந்தவேளையில் நாங்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஒன்றுபட்ட சக்தியாக எமது பிரச்சினைகளை சர்வதேசத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் கொண்டுசெல்வதன் மூலமே எமக்கான தீர்வைபெற்றுக் கொள்ளமுடியும். இல்லாதுபோனால் எமது தாயக பிரசேத்தில் நாங்கள் தொடர்ந்தும் விலங்கிடப்படாத அடிமைகளாகவே வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்படும்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .