2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

கல்வியமைச்சின் அனுமதி வேண்டும் என்பது மக்களிடமிருந்து அந்நியப்படுத்தும் நடவடிக்கை: ஜனா

Kogilavani   / 2012 டிசெம்பர் 03 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

'பாடசாலைகளில் பொது நிகழ்வுக்கு அரசியல்வாதிகளை அழைக்கும்போது கல்வியமைச்சின் அனுமதிபெறவேண்டும் என்ற சுற்று நிருபமானது, தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழ் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்த எடுத்த நடவடிக்கையாகும்' என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணசபைக்குட்பட்ட பாடசாலைகளில் பொதுநிகழ்வுக்கு அரசியல்வாதிகளை அழைக்கும்போது கல்வியமைச்சின் அனுமதிபெறவேண்டும் என்ற சுற்று நிரூபம் தொடர்பில் இன்று திங்கட்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கிழக்கு மாகாணசபையின் கல்வியமைச்சின் ஊடாக சகல கோட்டக்கல்வி பணிமனைகளுக்கும் பாடசாலைகளுக்கும் ஒரு சுற்றுநிருபம் அனுப்பப்பட்டுள்ளது.

வலய மட்டத்திலும் கோட்டமட்டத்திலும் பாடசாலை மட்டத்திலும் நடைபெறும் விழாக்கள், வைபவங்கள், விளையாட்டுப்போட்டிகள் உட்பட நடைபெறும் பொது நிகழ்வுகளில் மாகாணசபை உறுப்பினர்களை அழைப்பதாக இருந்தால் முற்கூட்டியே மாகாண கல்வியமைச்சிடம் அனுமதிபெறவேண்டும்.

இச்சுற்றுநிருபம் ஆளும் கட்சி உறுப்பினர்களைத்தவிர தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களை அழைக்ககூடாது என்பதற்காகவே அனுப்பப்பட்டுள்ளது.

தினமும் பாடசாலைகளிலும் வலய, கோட்ட மட்டங்களிலும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றன. இவற்றில் ஆளும் கட்சி மாகாணசபை உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் அவ்வாறு அனுமதிபெற்றுத்தான் கலந்துகொண்டு வருகின்றார்களா என்பது தொடர்பில் நாங்கள் அறியவிரும்புகின்றோம்.

மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் சமமான கௌரவத்துக்கும் மதிப்புக்கும் உரியவர்கள். அனைத்து மாகாணசபை உறுப்பினர்களும் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள். இந்நிலையில் எம்மை தெரிவுசெய்த மக்களை எங்களிடம் இருந்து அன்னியப்படுத்தும் நடவடிக்கையாகவே இந்த சுற்றுநிருபத்தை நோக்கவேண்டியுள்ளது.

இந்த சுற்றுநிருபத்தில் கபடதனத்தை எமது மக்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே அதற்கு எதிரான எமது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளோம்.

ஆளும் கட்சியினது இந்த கபடத்தனமான நடவடிக்கையினை வன்மையாக கண்டிப்பதுடன் முதலமைச்சரும் தவிசாளரும் மாகாணசபை உறுப்பினர்களது கௌரவத்தையும் உரிமையையும் உறுதிப்படுத்த நடவடிக்கையெடுப்பார்கள் என்று நம்புகின்றேன்.

இந்நிலையில் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்பவர்கள் தமது அதிகாரப்பலத்தாலும் ஆணவத்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினையும் தமிழ் மக்களையும் பிரித்தாள மேற்கொள்ளும் முயற்சிகள் உங்களுக்கு எதிர்வினையான விளைவையே ஏற்படுத்தும். அது எமக்கு ஆதரவினையே ஏற்படுத்திதரும்'. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .