2026 மே 04, திங்கட்கிழமை

'பெண்கள் மத்திய கிழக்கு செல்வது அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது'

Kogilavani   / 2013 மார்ச் 09 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


'மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று வீட்டுப் பணிப்பெண்களாக அடிமை வேலை செய்வதை எமது பெண்கள் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.
கை நிறையப் பணம் சம்பாதித்தாலும் மத்திய கிழக்கு வீட்டுப் பணிப்பெண் வேலை என்பது அந்நிய தேசத்தில் செய்யும் அடிமை வேலை என்பதை நமது பெண்கள் நன்கு உணர்ந்து கொள்ளவேண்டும்' என வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி கூறினார்.

சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னிட்டு இன்று வாகரைப் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண்கள் தின நிகழ்விலே அவர் இதனை தெரிவித்தார்.

குடும்பத்திற்கும் சமூகத்திற்குமாகப் பாடுபட்டுழைத்த பெண்களை கௌரவித்தல், ஆயுத வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்குதல், மத்திய கிழக்கு வீட்டுப் பணிப்பெண் அடிமை வேலை சாதகமா பாதகமா என்ற பட்டிமன்றம், பெண்கள் விழிப்புணர்வு உரைகள் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலாளர் ராகுலநாயகி,

'கடந்தகால ஆயுத வன்முறைகளினால் கிழக்கிலே மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதியாக வாகரை இருந்தாலும் இங்கே இயற்கை வளங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

கடல் வளம், வன வளம் என்று எதற்குமே குறைவில்லாமல் வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்ள வழிவகைகள் இருக்கின்றன. இந்த வளங்களை உள்ளூர் மக்கள் குறிப்பாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

வெளியாட்கள் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்த ஆவல் கொண்டுள்ளார்கள். அதேவேளை நமது பெண்கள் தமது வீடுவாசல்களை, பிள்ளைகளை, குடும்பத்தை கைவிட்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்கின்றார்கள்.

இதனால் அவர்களது குடும்பங்கள் இங்கே சீரழிகின்றன. பிள்ளைகளின் கல்வி பாழ்பட்டுப்போகின்றது. காலப்போக்கில் ஒரு நிலைகுலைந்த வாழ்க்கைக்குப் பெண்கள் உள்ளாகின்றார்கள்.

கிழக்கு மாகாணத்திலே கடந்த கால ஆயுத வன்முறைகளினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட வாகரையில் ஆயுத வன்முறை, சுனாமி போன்ற செயற்கை, இயற்கை இடர்களினால் 1181 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 842 பெண்கள் 40 வயதிற்குக் குறைந்தவர்களாக காணப்படுகின்றனர். இங்குள்ள வளங்களைக் கொண்டுதான் இவர்களை வலுவூட்ட வேண்டும்.

16 கிராம சேவகர் பிரிவுகளிலும் இருந்து பாதிக்கப்பட்ட 32 பெண்களுக்கு சுயதொழில் கடன் திட்டத்தை அமுல்படுத்துகின்றோம்.

இதனால் 3-4 மாத காலப்பகுதிக்குள் தொடர் நடவடிக்கையினூடாக வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும். இதனூடகவும் வறுமையையும் சமூகச் சீர்கேட்டையும் ஒழிக்க முடியும்.' என்றார்

வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.கே. பாலித்த, இராணுவ கட்டளை அதிகாரி மேஜர் சாந்தகுமார புத்த சாசன அமைச்சின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்தியப் பொறுப்பாளர் ஏ.எல் . ஜுனைதீன், அரச மற்றும் அரச சார்பற்ற பெண்கள் நிறுவனப் பிரதிநிதிகள் பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .