2026 மே 04, திங்கட்கிழமை

ஏறாவூரில் வீதி ஒழுங்குகளை மீறுபவர்களுக்கு எதிராக வழக்கு

Super User   / 2013 மார்ச் 10 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச். அப்துல் ஹுஸைன்


ஏறாவூர் பொலிஸ் பிரவிற்குட்பட்ட பகுதிகளில் வீதி ஒழுங்குகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்படும் என்று ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி காஞ்சன கொடகும்பர கூறினார்.

இந்த நடைமுறை எதிர்வரும் 23 ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

ஏறாவூர் அறபா வித்தியாலத்தில் நகர வர்த்தகர்கள், வாகன உரிமையாளர்கள், நகரசபையினர் ஆகியோருக்கிடையிலான கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்  போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஏறாவூர் நகரபிதா அலிஸாஹிர் மௌலானா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கடந்த வருடம் இடம்பெற்ற விபத்துக்களினால்  14 பேர் மரணித்துள்ளார்கள். பிரதான நகரம் பார்ப்பதற்கு கோழிக் கூடுகள் மாதிரி அசிங்கமாக இருக்கின்றது. விசேட போக்கு வரத்துப் பொலிஸாரைக் கொண்டு எதிர்வரும் 15 ஆம் திகதியிலிருந்து நான் போதனை வழங்கப் போகின்றேன். சட்டமும் ஒழுங்குகளும் பற்றிய அறிவுறுத்தல்கள்  22 ஆம் திகதி வரை இடம்பெறும்.

அதன் பின்னர் இதில் எந்த வித முன்னேற்றமும் இடம்பெறவில்லையாயின் 23 ஆம் திகதியிலிருந்து நான் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் மிகக் கண்டிப்பாக இருப்பேன். வீதி ஒழுங்குகளைக் கடைப்பிடிக்காத வர்த்தகர்கள், வாகன உரிமையாளர்கள் கடைக்கரார்கள், கட்டிட உரிமையாளர்கள் எல்லோர் மீதும் வழக்குத் தாக்கல் செய்வேன்" என்றும் அவர் சொன்னார்.

குற்றம் நடைபெறாத ஒரு நகரமாக ஏறாவூரை மாற்ற உங்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றேன். இங்கே வாழும் எல்லா மக்களினதும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவது எனது பொறுப்பாக இருக்கின்றது. எல்லோரினதும் அமைதியான வாழ்வுக்கு நாம் வழி காண வேண்டும்.' என்றும் அவர் கூறினார்.

 'நான் இந்தப் பொலிஸ் நிலையத்தைப் பொறுப்பெடுக்கும் போது பொதுமக்களின் அனுசரணையைப் பெறும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இங்கே கடமையாற்றினார்கள். அவர்களைத் தண்டித்து அவர்களை இங்கே இருக்கவிடாது நான் இடமாற்றம் வழங்கினேன்.

நான் ஒரு போதும் பொதுமக்களிடமிருந்து சலுகைகளைப் பெறுவதில்லை. நேர்மையான பொலிஸ் அதிகாரிகளும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஒரு போதும் பொதுமக்களிடமிருந்து சலுகைகளையும் அன்பளிப்புக்களையும் எதிர்பார்ப்பதில்லை.

ஏறாவூரில் வாகனங்கள் வீதி ஒழுங்கு முறைப்படி நிறுத்தப்படுவதில்லை. வீதிகளில் தான் வாகனங்களையும் சைக்கிள்களையும் நிறுத்துகின்றார்கள். வியாபாரத்தை வீதிக்குக் கொண்டுவந்து விட்டார்கள்.

இது எல்லோருக்கும் ஆபத்தான ஒன்றாகவும் பெருந்தொல்லையாகவும் மாறியிருக்கின்றது. இது ஒரு கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலை. இதனூடகத்தான் இலங்கையின் அத்தனை பாகங்களுக்கும் வாகனங்களும் பயணிகளும் செல்ல வேண்டியுள்ளது.

புடவைக்கடைகள் பிரதான வீதிக்கு வந்து விட்டன. பாதசாரிகள் நடப்பதற்கான இடத்தில் புடவைகளைத் தொங்கவிட்டுள்ளதால் பாதசாரிகள் வீதிக்கு வருகின்றார்கள். இதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. வியாபார யுக்தியாக வர்த்தகர்கள் செய்யும் தந்திரோபாயங்களால் பாதசாரிகளுக்கும் பயணிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெருத்த இடைஞ்சல் ஏற்படுகின்றது.

ஏறாவூர் நகரத்தின் பிரதான நுழைவாயிலான மணிக்கூட்டுக் கோபுரச் சந்தி ஒரு மோசமான, வீதி ஒழுங்குகளைக் கட்டுப்படுத்த முடியாத ஒரு இடமாக மாறியிருக்கின்றது. இதன் மூலம் ஏதாவது பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டால் அதற்குப் பதில் சொல்ல வேண்டியவன் நான் என்றும் அவர் சொன்னார்.

ஏறாவூர் நகரத்திற்கு இப்பொழுது கடமையில் இருப்பவர்களை விட மேலதிகமாக இருபது போக்குவரத்துப் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வாகன அனுமிப்பத்திரம் இல்லாமலும் சிறுவர்களிடத்தில் வாகனங்களை ஒப்படைப்பவர்களின் பெற்றோருக்கு எதிராகவே நான் வழக்குத் தொடர்வேன்.

வர்த்தகர்களுடன் இடம்பெறும் கூட்டங்களுக்கு தொடர்ந்து வருபவர்கள் வராதவர்கள் பற்றிய விவரத்தையும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஒத்துழைப்பு வழங்குபவர்களைப் பற்றியும் நான் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிப்பேன் அது எனது கடமையாகும் என்றும் அவர் சொன்னார்.

கிழக்கில் குறுகிய காலப்பகுதியில் பாரிய அபிவிருத்திக்காக நிதியை வாரி வழங்கியிருக்கும் ஜனாதிபதிக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏறாவூரில் எல்லா வீதிகளும் கொங்கிறீட் வீதிகளாக மாற்றப்பட்டுள்ளதால் இப்பொழுது சௌகரியமான பயணம் மேற்கொள்ளப்படுகின்றது' என்றும் அவர் சொன்னார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு பொறியியலாளர் ஏ.சி. நிசார்தீனும் நிகழ்வில் கலந்து கொண்டு வீதி ஒழுங்குகள் பற்றி விளக்கமளித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .