2026 மே 04, திங்கட்கிழமை

யசூசி அகாசியின் கருத்து தமிழ் மக்களை வேதனையடை செய்கிறது: யோகேஸவரன் எம்.பி

Kogilavani   / 2013 மார்ச் 18 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

'ஜப்பானிய இலங்கைக்கான விசேட தூதுவர் யசூசி அகாசி இலங்கை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை கடந்த கால யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு தமிழ் மக்களை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது' என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவர் யசூசி அகாசி அண்மையில் ஜப்பானுக்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதியை சந்தித்த பின் டோக்கியோவில் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து தொடர்பிலே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

'கடந்த கால யுத்தத்துக்கு முன்னும் பின்னும் ஜப்பானின் விசேட தூதுவர் இலங்கைக்கு விஜயம் செய்து சமாதானத்தை ஏற்படுத்த பல முயற்சிகளை மேற்கொள்வதாக காட்டியது தமிழ் மக்களிடம் நன்மதிப்பை ஜப்பானுக்கு ஏற்படுத்தியது.

ஜப்பான் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தின் ஊடாக சில வீதிகளை திருத்தியும், மதகுகள், பாலங்கள், கட்டடங்கள் போன்றவற்றை வழங்கியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில உதவிகளை வழங்கியும் உள்ளதை நாங்கள் மறக்கவில்லை.

ஆனால் எமது தமிழ் மக்கள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தங்கள் சொந்த மண்ணில் சாத்வீக ரீதியிலும் ஆயுத ரீதியிலும் போராடி இலட்சக்கணக்கில் தங்கள் உயிர்களை தியாகம் செய்தமையானது ஜப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவர் யசூசி அகாசி கூறும் இவ் அபிவிருத்தி சார் நடவடிக்கைகளை எதிர்பார்த்து அல்ல.

நாங்கள் இந்நாட்டின் தேசிய இனம் என்ற வகையில் இந்நாட்டில் எங்களை நாங்களே ஆட்சி செய்து கொண்டு எங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாத்து அவர்களின் சகல விதமான அபவிருத்தியையும் நாங்களே மேற்கொள்ளும் வகையில் ஒரு அரசியல் தீர்வை பெற்றுகொள்ளும் வகையிலேயே எமது மக்களின் உயிர்த் தியாகங்கள் நடைபெற்றுள்ளது.                     

இவ்வாறான சலுகைக்காக எங்கள் மக்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்யவில்லை என்பதை இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் ஜசூசி அகாசி புரிந்து கொள்ளவேண்டும்.

மனித உரிமைகளை மதிக்கும், மனிதாபிமான உணர்வு கொண்ட நாடுகள் எங்களுக்காக குரல் கொடுத்து நியாயத்தையும், தர்மத்தையும் சர்வதேசத்தின் முன் நிலைநிறுத்தி எங்களுக்கு உதவ முன்வருவதை கெடுக்கும் வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சார்பாக ஜப்பானின் விசேட தூதுவரை வேண்டிக் கொள்கின்றேன்.

இவ்வாறான அறிக்கையை வெளியிடுபவரா? முன்பு அரசாங்கத்தையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் இணைந்து சமாதான சூழலை உருவாக்க முனைத்தவர் என்பதில் சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது.

வன்னிப் பிராந்தியத்தின் உட்பகுதிகளை விசேட தூதுவர் சென்று பார்வையிடுவதுடன் இராணுவ பிரசன்னமின்றி அங்குள்ள மக்களோடு உரையாடினால் உண்மைகள் பல இவருக்கு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

இதேவேளை 'அமெரிக்கா' போன்ற மனிதநேய நாடுகள் இதில் தலையிட்டு இலங்கை தமிழ் மக்களிற்கு சமாதானத்தை பெற்றுகொடுக்க முற்படுவதை சகிக்காதவர்களே இவ்வாறு அரசாங்கத்தை காப்பாற்ற, நீதிக்கும், தர்மத்துக்கும் எதிராகவும், மனித உரிமை மீறலுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் முடிந்து மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பின் நூற்றுக் கணக்கானோர் கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்களை கடத்தியவரகள் யார்;? யார் கப்பம் கேட்டார்கள்? என்பவற்றை பாதிக்கப்பட்ட மக்களின் உறவுகள் சிலர் கூறத் தயாராக உள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒரு தடவை வருகை தந்து இம்மக்களை பார்வையிட்டு இவர்களின் அவலங்களின் சூத்திரதாரிகள் பற்றி அறிந்து கொள்ளுமாறு ஜப்பானின் இலங்கைக்காக விசேட தூதுவர் அவர்களை அன்பாக அழைக்கின்றேன்.

இரு வருடத்துக்கு முன் இந்தியா கொடுத்த வீடுகளைகூட முற்று முழுதாக இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒழுங்காக வழங்க முடியாத அரசாங்கம் எந்த அபிவிருத்தியில் தமிழ் இனத்தை திருப்திப்படுத்தி உள்ளது என்பதை ஜப்பானிய விசேட தூதவர் தெரிவிப்பாரா?

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனங்களை வேதனைப்படுத்தும் விதத்திலோ அல்லது உண்மைகளை மறைக்கும் விதத்தில் கருத்துக்களை வெளியிட்டு சர்வதேசத்தின் மனிதாபிமான, பாதைக்கு குந்தகத்தை எற்படுத்த வேண்டாம் என வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்கள் சார்பாக ஜப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவரை அன்பாக வேண்டிக் கொள்கின்றேன்' என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .