2026 மே 04, திங்கட்கிழமை

மீள்குடியேற்றப்படாதவர்களை மீள்குடியேற்ற உத்தரவு

Super User   / 2013 மார்ச் 24 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் உள்ளவர்களை மீள்குடியேற்றம் செய்ய மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

இந்த மக்களை ஏறாவூர் மற்றும் போரதீவுப்பற்றின் சில பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்த உத்தரவினை மீள்குடியேற்ற அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாக வும் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

மீள்குடியேற்ற அதிகார சபையின் ஆயுட் காலத்தை மேலும் மூன்று வருடத்துக்கு நீடிப்பது தொடர்பிலான  விசேட மீள்குடியேற்ற அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் அண்மையில் இடம்பெற்றது.

மீள்குடியேற்ற அமைச்சர் குணரெட்ன வீரக்கோன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அமைச்சின் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா,

"மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் இரண்டு இடங்களில் இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. ஏறாவூர் நான்காம், ஐந்தாம் குறிச்சிப் பகுதிகளில் இருந்து 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.

அங்கிருந்து 125 குடும்பம் இடம்பெயர்ந்த நிலையில் இன்னும் அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. இதனை இங்கிருக்கும் பிரதியமைச்சரும் அறிவார். அவர்கள் குடியேற்றப்படாததற்கு காரணம் அப்பகுதியில் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கிருந்து பொலிஸார் படிப்படியாக விலகினாலும் கூட அங்கிருந்த வீடுகள் முற்றாக உடைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.

இவர்கள் உடனடியாக குடியேறமுடியாத நிலையே காணப்படுகின்றது. இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக்குழு கூட்டத்திலும் நான் பல தடவைகள் கூறியுள்ளேன். அதன் காரணமாக அவர்களை தற்காலிகமாக குடியிருப்புகளை அமைத்து குடியேற்ற நடவடிக்கையெடுப்பதென்றால் அதற்கு பணம் தேவையென தெரிவித்து அது தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளருக்கும் கடிதம் அனுப்பியிருந்தார்.

ஆனால் எதுவித நடவடிக்கையும் இல்லை. அதுமட்டுமின்றி, போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட 16ஆம் கொலணி மற்றும் பூச்சிக்கூடு ஆகிய பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இதுவரையில் குடியேற்றப்படவில்லை.அந்த கிராமங்களுக்கு அருகில் விசேட அதிரடிப் படையினரின் முகாம்கள் இருந்தததன் காரணமாக அது துப்புரவு செய்யப்பட்ட பகுதியென அரசினால் அடையாளப்படுத்தப்பட்டு அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்த மக்களாக கொள்ளப்படவில்லை.


எனினும் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மண்டூர் பகுதிகளில் வசித்துவந்த நிலையில் அவர்களின் வீடுகள் அனைத்தும் உடைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்று காட்டில் தற்காலிகள் கொட்டகை அமைத்து வசித்துவந்தனர். இந்த மக்கள் கவனிக்கப்படாத சமூகமாகவே உள்ளனர். எனவே இந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என்றார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த இரு விடயங்கள் தொடர்பிலும் நன்கு அலசி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறும் மட்டக்களப்புக்கு சென்று மாவட்ட செயலகத்தில் அது தொடர்பில் கலந்துரையாடி மீள்குடியேற்றம் செய்யப்படாத மக்களுக்கு தேவையான வீட்டு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறும் அமைச்சின் செயலாளருக்கு மீள்குடியேற்ற அமைச்சர் குணரெட்ன வீரக்கோன் பணிப்புரை விடுத்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .