2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

'விதவைகள் பட்டயம்' தொடர்பான விழிப்புணர்வு

Kogilavani   / 2013 டிசெம்பர் 25 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


போரினால் பாதிக்கப்பட்ட நிலையில் குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் விதவைகளுக்கு விதவைப் பட்டயம் தொடர்பான விழிப்புணர்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

'விழுது' ஆற்றல் மேம்பாட்டு மையத்தின்; அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன்,  மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரி எஸ்.மனோகரன், 'விழுது' ஆற்றல் மேம்பாட்டு மையத்தின்; அமைப்பின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் போரினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பெண்களும், விதவைகள் செயலணியின் உறுப்பினர்களும் என  சுமார் 80 பேர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்குபற்றினர்.

போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் பெண்களின் இயலாற்றலை மேம்படுத்தும் வகையில் அவர்களைக் கிராமங்கள் தோறும் ஒன்றிணைத்துச் செயலணிகளாக மாற்றும் திட்டத்தின் ஒரு கட்டமாக இந்த பெண்களின் பட்டயம் தொடர்பான விழிப்புணர்வு இடம்பெறுவதாக 'விழுது' ஆற்றல் மேம்பாட்டு மையத்தின்; மட்டக்களப்பு நிருவாக அலுவலர் பி. ஜீவிதா தெரிவித்தார்.

இப்பெண்கள் எதிர்காலத்தில் தமது நலன் கருதி ஏற்படுத்த விரும்பும் அரச கொள்கைத் திட்டங்களின் அடிப்படையை விபரிக்கும் விதவையர் பட்டயம் ஒன்றினை அங்கீகரித்து வரித்துக்கொள்வதற்கு இந்த விழிப்புணர்வுச் செயலமர்வு பெருந்துணை புரியும் என்று அவர் மேலும் கூறினார்.

நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ். கிரிதரன், அங்கு உரையாற்றுகையில்,
'பெண்கள் தலைமை தாங்குகின்ற குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தங்களது பிரச்சினைகளை ஏகோபித்த குரலில் முன்வைத்து உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் இவ்வாறு அமைப்பு ரீதியாக ஒன்றுபட்டுக் குரல் கொடுப்பது வெற்றியளிக்கும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தங்களுக்குக் கிடைக்கின்ற உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் இது உதவும்.
ஆண்களை தங்களது பிரதான உழைப்பாளிகளாகக் கொண்டுள்ள குடும்பங்களைப் போல அதற்கு நிகராக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களும் பலமாக நிலைத்து நின்று தாக்குப் பிடிக்கக் கூடியதாக உருவாக்கப்பட  வேண்டும்.

பொதுவாக பெண்கள் தலைமை தாங்குகின்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வருமானத்தை உரிய முறையில் பெற்றுக் கொள்ள முடியாதவர்களாகவும் பொருளாதார ரீதியில் மிகவும் நலிவுற்றவர்களாகவும் இருக்கின்றார்கள்.

பொதுவாக நமது கலாசாரப் பின்னணியில் வருமானத்தைத் தேடிக் கொள்கின்ற பொறுப்பு  ஆண்களுக்கும் குடும்பத்தைப் பராமரிக்கின்ற பொறுப்பு பெண்களுக்கும் சுமத்தப் பட்டிருப்பதன் மூலமாக திடீரென பெண்கள் பாதிக்கப்பட்டு குடும்பத்தைத் தலைமை தாங்கி உழைக்கும் பொறுப்பையும் நிருவகிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருப்பதால் திடீரென அவர்கள்; நிலைதடுமாறி விடுகின்றார்கள்.

பெண்கள் எந்த சூழ் நிலைகளையும் எதிர்கொள்வதற்கு அவர்கள் சிறந்த கல்வியைப் பெற்றிருப்பது அவசியம்.

உத்தியோகங்களைப் பார்ப்பதற்கும், கைத்தொழிலைச் செய்வதற்கும், வேறு வகையான தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கும் பெண்கள் கல்வியில் தேர்ச்சியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

தங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முறியடிப்பதற்குக் கூட கல்வியறிவு இருப்பது அவசியம்.

பெண்கள் எல்லாவற்றையும் விட தங்களது கல்விக்கு உயர்ந்த பட்ச முக்கியத்துவத்தை வழங்க வேண்டும். இதனூடாகவே பெண்கள் தங்களது உரிமைகளை அடைந்து கொள்ள வழிபிறக்கும்.

வெறும் நிவாரணங்களையோ அரச அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளையோ தொடர்ந்து எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களாக பெண்களை ஒரு போதும் வழிநடத்திவிடக் கூடாது என்பதில் இந்த பாதிக்கப்பட்ட பெண்கள் வலையமைப்பு கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

வெறுமனே உதவிக்கான எதிர்பார்ப்புக்களை மாத்திரம் வைத்துக் கொண்டு நாம் இந்த பாதிக்கப் பட்ட பெண்கள் சமுதாயத்தை வழி நடாத்தவிட முடியாது.

பாதிக்கப்பட்டவர்ள், புறக்கணக்கப்பட்டவர்கள் என்று தொடர்ந்து நாம் பேசிக்கொண்டு காலம் கடத்தவும் முடியாது. அதற்கான பரிகாரங்களைக் கண்டாக வேண்டும். பாதிக்கப்படாத சமுதாயத்தினரைப் போல இவர்களையும் கட்டியெழுப்ப வேண்டும்.' என்றார்

நிகழ்வில்  உரிமைச்சுடர் ஏற்றுதல், இலங்கையில் பெண்கள் உரிமைகள் பற்றிய கருத்துரை, விதவைகள் பட்டயம் தொடர்பான முன்வைப்பும் கருத்துப் பகிர்வும் போன்ற விடயங்களும் இடம்பெற்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X