2025 மே 02, வெள்ளிக்கிழமை

'படுகொலைகளுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்'

Super User   / 2014 பெப்ரவரி 09 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் காணாமல் போனோர் தொடர்பான தகவல்களைத் திரட்டி அறிக்கை இடுவதன் எந்தப் பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை எனவும் குறித்த கூட்டணி தெரிவித்துள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான  ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான கூட்டணிக்கும் இடையிலான இரண்டாம் கட்ட சந்திப்பொன்று கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள ஆணைக்குழுவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

காணாமல் போனோர் தொடர்பாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் ஏற்கனவே ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்ட கோரிக்கைகளை அமுல்படுத்துவது தொடர்பாகவே இந்த சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் ஆணைக்குழுவின் தலைவர் பராக்கிரம பரணகம, அதன் இணைப்பாளர் கெலி, கூட்டணி சார்பாக வட மாகாண சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப் (நளீமி), பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், அஷ்ஷெய்க் நஜா முஹம்மத் அஷ்ஷெய்க் பிர்தௌஸ் (நளீமி), சிறாஜ் மசூர், முஹம்மட் முஜீப் மற்றும் ஜெஸ்ரூன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இது தொடர்பாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"காணாமல் போனோர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இடங்களை சம்பந்தப்பட்டோரிடம் உரியவிசாரணைகள் செய்வதன் மூலம் கண்டறிந்து அவர்களின் றவினர்களுக்கு உரிய மார்க்கக் கிரியைகளை நிறைவேற்றுவதற்குரிய சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

அத்தோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குரிய நஷ்டஈடுகளைவழங்குவதோடு இப்படுகொலைகளுக்கு காரணமானவர்களைசட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இக்கோரிக்கைகளை முழுமையாக ஏற்றுக்கொண்ட ஆணைககுழுவின் தலைவர் இப்புதைகுழிகளை உடனடியாக தோண்டவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களை அடையாளம் காணும் முகமாக புதைகுழிகளிகளில் கண்டெடுக்கப்படும் எச்சங்களை மரபணு பரிசோதனை செய்வதற்கான சகல செலவினங்களையும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட நிறுவனம் ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பிலான சில சட்ட ரீதியான நடவடிக்கைகளை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் ஆலோசனை வழங்கினார். அத்தோடு இக்கடத்தல் சம்பவம் நடைபெற்ற காலங்களில் குறித்த பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்தவர்களை ஆணைக்குழு முன்பாக அழைத்து விசாரணைகளை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் உறுதியளித்தார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் இவ்வாறான நியாயமான கோரிக்கைகளை முதன்முதலாக முஸ்லிம் சமூகம் சார்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்ததையிட்டு தாம் திருப்தி கொள்கின் என அதன் தலைவர் தெரிவித்தார்.

அத்தோடு ஆணைக்குழுவின் தொடர்ச்சியான நடவடிக்கைகளல் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஒத்துழைப்புக்களையும் ஆலோசனைகளையும் தாம் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் காணாமற்போனோர் தொடர்பிலான தகவல் விபரங்களின் தொகுப்பு ஒன்றும் இச்சந்திப்பின்போது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் குழுவினரால் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது" என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .