2025 மே 02, வெள்ளிக்கிழமை

புனானையில் சிங்கள குடியேற்றத்தை மேற்கொள்ள நடவடிக்கை: பொன். செல்வராசா

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 10 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு பிரதேச எல்லையான புனானையில் மீள் குடியேற்றத்திற்கு புறம்பாக வெளிமாவட்டத்தை சேர்ந்த சிங்கள குடும்பங்களையும் குடியேற்ற முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா குற்றம்சாட்டுகின்றார்.

1990ஆம் ஆண்டு போர்ச் சூழ்நிலை காரணமாக புணானையிலிருந்து வெளியேறிய குடும்பங்களை மீள்குடியேற்றம் செய்யும் பணிகள் மீள்குடியேற்ற அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த குடும்பங்களுக்கு இதுவரை தலா 8 கூரைத்தகடுகளும் 12 பைக்கட் சீமெந்து மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

அந்த பகுதிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் நேரில் சென்று பார்வையிட்டு தீரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா, 'வெளி மாவட்டத்தவர்களை குடியேற்றுவதிலும் மீள் குடியேற்றத்திலும் அங்குள்ள இராணுவம் மற்றும் பௌத்த பிக்கு ஆகியோரே பின்னனியிலிருந்து செயல்படுவதை தன்னால் காண முடிந்தது' என்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'மீள்குடியேற்றத்திற்கு திரும்பியுள்ள தமிழ் குடும்பங்களை பொறுத்தவரை தங்கள் சொந்த கிராமத்திற்கு மீள்குடியேற்றத்திற்கு திரும்பினாலும் சொந்த காணியில் குடியிருக்க வாய்ப்புகள்  கிடைக்கவில்லை என கவலை கொண்டுள்ளார்கள். 12 குடும்பங்களின் காணிகளில் இராணுவ முகாம் அமைந்திருப்பதால் தான்; இந்த நிலை அவர்களுக்கு  ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மீள் குடியேற்றத்திற்கு தெரிவான குடும்பங்களுக்கு தற்போது காணிகள் அடையாளமிடப்பட்டு வழங்கப்பட்டாலும் இராணுவம் மற்றும் பௌத்த பிக்குகளின் தலையீடு காரணமாக அதில் கூட பொருத்தமான காணிகள் வழங்குவதில் சிங்கள குடும்பங்களே முன்னுரிமை பெறுவதாகவும் தமிழ் குடும்பங்களினால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

68 தமிழ் குடும்பங்கள், 77 சிங்கள குடும்பங்கள், இரு முஸ்லிம் குடும்பங்கள் என்ற எண்ணிக்கையில் 97 குடும்பங்கள் அங்கு மீள்குடியேற்றத்திற்கான காணிகள் அடையாளமிடப்பட்டுள்ளதாக அங்கு காணிகளை அடையாளமிடும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தகவல்கள் மூலம் அறிய முடிந்தது.

இதனை விட 38 சிங்கள குடும்பங்கள் இராணுவம் மற்றும் பௌத்த பிக்குகளின் பின்னணியில் வனத்துறைக்கு சொந்தமான காணிகளில் தற்காலிக கொட்டில்கள்  அமைத்து சட்டவிரோதமாக குடியேறியுள்ளார்கள்.

இது தொடர்பில் அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரியின்  கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு அவர்களை வெளியேற்றுமாறு கோரிக்கை விடுக்கப்படும். அவர்களால் உரிய நடிவடிக்கை எடுக்கத் தவறின் சட்ட நடிவடிக்கை மூலம் வெளியேற்றவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .