2025 மே 02, வெள்ளிக்கிழமை

'முன்னாள் போராளிக் குடும்பங்கள் ஓரங்கட்டப்படும் நிலை'

Kogilavani   / 2014 பெப்ரவரி 13 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

'மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 வீதமாக உள்ள மீள்குடியேறுகின்ற புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிக் குடும்பங்கள் கிராம மட்டத்தில் அதிகாரிகள், உள்ளுர் நிறுவனங்களால் ஓரங்கட்டப்படும் நிலை காணப்டுகிறது' என மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ள யூ.எஸ்.எயிட் இன் அதிகாரிகளது இரகசியச் சந்திப்புக்களின்போது தெரிவிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளூளுர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் மற்றும் சிவில் பிரஜைகள் மன்றம் ஆகியவற்றின் தலைவரான வ.கமலதாஸ் கூறினார்.

'இவர்களுக்கு அடிப்படை வசதிகளான் வீடு, கிணறு, மலசலகூடம் போன்ற வசதிகள் ஏற்படுத்தித் தரப்படவேண்டும்' என்றும் தெரிவிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

எதிர்வரும் 3 வருடங்களில் அமெரிக்க உதவித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் மற்றும் தற்போது நடைமுறையிலுள்ள திட்டங்கள் தொடர்பில் ஆராயும் முகமாக செவ்வாய்க்கிழமை (11) மட்டக்களப்புக்கு விஜயம் செய்த யூ.எஸ்.எயிட் இன் அதிகாரிகள் இரகசிய சந்திப்புகளை மேற்கொண்டனர்.

இச்சந்திப்புகள் தொடர்பில் வினவிய வ.கமலதாஸ் மேற்கண்டவாறு கூறினார்.

இச்சந்திப்புகள் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'யூ.எஸ்.எயிட் இன் திட்டங்கள் சிறப்பானவை, இருந்தாலும், அத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பங்குதாரர் நிறுவனங்கள் மக்களுக்குப் பொறுப்புச் சொல்லக்கூடிய தகுதியை உடையவர்களாக இருக்கிறார்களா என்பது முக்கியமானது. அமெரிக்க மக்களது உதவிகள் வீணடிக்கப்படக்கூடாது.

பக்கச்சார்பற்ற பிரதேச அச்சு ஊடகம் இங்கு இல்லை. இதனால் நடுநிலையான அச்சு ஊடகத்தினை வலுப்படுத்த வேண்டும்.
மக்கள் சகல இடங்களுக்கும் சுதந்திரமாகச் சென்று வருவதற்குரிய சூழ்நிலை இருக்கிறது. இருப்பினும், மக்கள் தமது பிரச்சினைகளை, உரிமைகளை உரிய அதிகாரிகளிடம் பேசுவதற்கு, தட்டிக் கேட்பதற்கு தாம் மீண்டும் பழிவாங்கப்படுவோமோ என்ற அச்சம் காரணமாக பேசவோ தெரியப்படுத்தவோ அச்சப்படுகின்றனர்.

இவர்களின் குரலை, உரிமைகளை மதிப்பதன்மூலமே நல்லிணக்கமான நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும். அதற்கான உதவித்திட்டங்கள் தேவையாக உள்ளன.

நல்லிணக்க ஆணைக்குழுவின் நடைமுறைத்திட்டத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்கள் நம்பிக்கையைக் கட்டி எழுப்பும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவ்வாறான நிறுவனங்களுடன் இராணுவம் சுமுகமான உறவுகளை வளர்த்து வருகின்றது. அனேகமாக தமிழ் பேசக்கூடிய அதிகாரிகள் இதற்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.

கிழக்கில் தமிழ் அரசியல் தலைமைத்துவங்களில் பலவீனங்கள் காணப்படுகின்றன. இதனால் முஸ்லிம் தமிழ் சமூகங்கள் மத்தியில் பொருளாதார உறவுகள் வலுவடைந்து வருகின்ற போதிலும், அரசியல், காணி, மாகாண சபையின் வளப்பங்கீடுகள், தொடர்பில் கசப்படைந்து வருகின்றனர்.

இதனால் கிழக்கில் தமிழ் இனம் வேறொரு பேரினவாதத்திற்குள் அகப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் வளர்ந்து வருகிறது. எனவே அரசியல் ரீதியான விழிப்புணர்வுகள் உள்ளவர்களாகவும் மக்களை ஸ்திரப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.

வெளிநாடுகள் இலங்கை அரசின் மீது விதிக்கின்ற, கொடுக்கின்ற கெடுபிடிகளினால் இலங்கைக்கு வரவேண்டிய சுற்றுலாத்துறை வரவின்மையால் முடங்கிப் போயுள்ளது. இதன் காரணமாக வேலைவாய்ப்பின்மையால் கிழக்கு வாழ் இளைஞர்கள், யுவதிகள், தடுமாறுகின்றனர்.

அமெரிக்க உதவித்திட்டத்தின் கீழ் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் ஸ்பைஸ் திட்டம் சிறப்பாக இருப்பினும், அத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பங்குதாரர் நிறுவனங்கள் மக்களுக்குப் பொறுப்புச் சொல்லக்கூடிய தகுதியை உடையவர்களாக இருக்கிறார்களா என்பது முக்கியமானது என்பதுடன், அமெரிக்க மக்களது உதவிகள் வீணடிக்கப்படக்கூடாது' என தெரிவித்தேன் என்று  அவர் கூறினார்.

அதேநேரம், இலங்கை அரசின் மீது எடுக்கப்படுகின்ற மனித உரிமை மீறல் பிரச்சினைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மக்களுக்கு பொருளாதார வீழ்ச்சியைக் கொண்டு வரக்கூடாது. மாறாக நல்லிணக்கம், சமாதானம், நல்லாட்சி போன்றவற்றை வளர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தான் முன்வைத்ததாகவும் கமலதாஸ் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X