2025 மே 02, வெள்ளிக்கிழமை

சந்திவெளி விவகாரம்: மூவருக்கும் பிணை

Kanagaraj   / 2014 பெப்ரவரி 13 , பி.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, சந்திவெளி பிரதேசத்தில் அனுமதி பெறப்படாமல் தனியார் காணியொன்றில் புதிதாக அமைக்கப்பட்டதாக கூறப்படும் கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான கட்டிடத்தை உடைத்து சேதமாக்கினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களையும் களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளில் நேற்று(12) விடுதலை செய்தார்.

சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் ஏறாவூர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த வினோதன், சந்திரகாசன், சங்கர் ஆகிய இளைஞர்களே  பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான கட்டிடத்திற்கு சேதம் விளைவித்தார்கள் என்ற சந்தேகத்தில் இந்த இளைஞர்கள் மூவரும் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் நேற்று (12) மாலை டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அவ்விடத்திற்குச் சென்ற ஏறாவூர் பொலிசாருக்கும் மக்களுக்குமிடையில் முறுகல்நிலை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து குறித்த பிரதேசத்தில் பதட்டம் நிலவியதால் மேற்படி நிலமைகளை சமாளிப்பதற்காக குறித்த இடத்திற்கு வருகைதந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணிதலைவர் சேயோன், கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் அலோசகருமான சி.சந்திரகாந்தன் ஆகியோர் பொதுமக்களுடன் பேசி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X