2025 மே 03, சனிக்கிழமை

தமிழர்கள் புறக்கணிப்பு தொடர்பில் நீர்ப்பாசன அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவர நடவடிக்கை

Kogilavani   / 2014 பெப்ரவரி 23 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்


மத்திய அரசாங்கத்திற்குரிய நீர்ப்பாசன திணைக்களத்தில் நாடு பூராகவும் கடமையாற்றும் தொழிலாளர்களை நிரந்தரமாக்கும் நடவடிக்கையில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்ட விடயம் தொடர்பாக நீர்ப்பாசன அமைச்சர் நிமல் ஸ்ரீபாலடி சில்வாவின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

நீர்பாசன திணைக்களங்களில் கடமையாற்றும் தொழிலாளர்கள் தமக்கு இதுவரையில் நிரந்தர நியமனம் வழங்கப்படாமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கமைவாக மேற்படி தொழிலாளர்களை நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா மட்டக்களப்பில் சனிக்கிழமை (22) சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

'அண்மையில் மத்திய அரசாங்கத்திற்குரிய நீர்ப்பாசன திணைக்களத்தில் நாடு பூராகவும் 650 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. இவர்களில் 640 பேர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாகவும் 8 பேர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்கின்ற வேளையில் 2 பேர் மாத்திரமே தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்களாக காணப்படுகின்றனர்.

இவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 14பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரைத் தவிர மற்றைய 13 பேரும் மட்டக்களப்பு அல்லாத வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அதில் பெரும்பாலானோர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள்.

இது இப்படி இருக்கும்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மத்திய நீர்ப்பாசனத் திணைக்களங்களில் 67 தொழிலாளர்கள் சமயாசார ஊழியர்களாக பல வருடகாலமாக நிரந்தர நியமனம் இன்றி வேலை செய்துகொண்டிருக்கின்றனர்.

இவர்கள் யுத்த காலத்தில் கூட பல சிரமங்களுக்கும் மத்தியில் பல இடங்களுக்கும் சென்று வேலை செய்துள்ளனர். அதுமட்டுமல்லாது வெள்ள அனர்த்த காலங்களிலும் குளங்கள் உடைகின்ற சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றபோதும் அங்கு சென்று 24 மணி நேரங்களும் தொடர்ந்து வேலை செய்துள்ளார்கள்.

இவர்கள் இந்த நிரந்தர நியமனங்களில் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் க.பொ.த சாதாரணம் மற்றும் உயர்தரத்தில் சித்தியடைந்தவர்களும் அடங்குகின்றனர்' என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக நீர்ப்பாசன அமைச்சருடன் ஏற்கனவே கதைத்திருப்பதாகவும் தொடர்ந்தும் நடவடிக்கை எடுப்பதற்கு தொழிலாளர்களின் தரவு போதாமல் இருந்தமையால் இந்த கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும் இதன்பின் மீண்டும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்களுடன் தொடர்பு கொண்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து சாதகமான பதிலைப் பெற்றுக்கொடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X