2025 மே 07, புதன்கிழமை

இந்தியா நடந்துகொண்ட விதம் கவலையளிக்கிறது: யோகேஸ்வரன்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 31 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா தீர்மானத்தில் இந்தியா நடந்துகொண்ட விதம் பற்றி மிக முக்கியமாக ஆராய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா நடுநிலை வகித்தமை தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (30) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'இந்தியாவானது 02 மனித உரிமைகள் பேரவைகளிலும்   பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது.

அதுவும் 02 தடவைகளும்; அமெரிக்கா கொண்டுவந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு, மனிதாபிமான நடவடிக்கையை  ஏற்றுக்கொள்ளாமை, கற்றுக்கொண்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாட்டு அறிக்கையை செயற்படுத்தாமை போன்றவை சார்பாக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தில் திருத்தங்களை மேற்கொண்ட பின்பே இந்தியா ஆதரவு தெரிவிக்கச் சென்றது. கடைசி நேரத்திலேதான் தங்களது ஆதரவை தொடர்ச்சியாக வெளியிட்டிருந்தார்கள்.

இம்முறை இந்தியாவானது மனித உரிமை மீறல் கூட்டத்தொடரில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தபோதும், இறுதி நேரத்தில் அவர்கள் நடுநிலை வகித்திருப்பது இந்தியா தான் தங்களுக்கு தீர்க்கமாக முடிவைப் பெற்றுத்தரும் என நம்பிக்கையோடு இருக்கின்ற பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா இம்முறை நடுநிலை வகித்த விடயம் தொடர்பான கருத்துக்களை ஆராயும்படியான கூட்டம் எதனையும் எங்களது கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை நடத்தவில்லை.

இந்த விடயம் சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியிலும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவர் என்ற ரீதியிலும் பல இந்து அமைப்புக்களின் முக்கிய பதவிகளை வகிப்பவன் என்ற ரீதியிலும் விஷ்வ ஹிந்துப் பரிசத்தின் இலங்கைக்கான அரசியல் பிரதிநிதி என்ற ரீதியிலும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் கடமைப்பாங்கு எனக்கு இருக்கின்றது.

இந்த வகையிலே கடந்த யுத்த சூழலிலே இலங்கையிலே கொல்லப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். உலகிலே நேபாளத்திற்கு அடுத்தாக 82 சதவீதமான இந்துக்களை கொண்டிருக்கும் பெரிய நாடும் இலங்கைக்கு அருகாமையில் இருக்கின்ற நாடும் இந்தியாதான்.

இந்தியா இலங்கையில் நடைபெறுகின்ற ஒவ்வொரு விடயத்தையும் அவதானித்துக் கொண்டிருக்கும் நாடு. இலங்கை மக்கள் சார்பாகவும் பாதிக்கப்படும் தமிழ் மக்கள் சார்பாகவும் ஒரு முக்கிய பங்கை கொண்டிருக்கும் நாடு இந்தியாதான்.

இலங்கையைப் போன்று மூன்று மடங்குகளுக்கு மேலே மக்களைக் கொண்டிருக்கின்ற மாநிலம் அது. அந்த மாநிலத்தில் முதலமைச்சர் உட்பட்ட எதிர்க்கட்சிகள் கூடி இலங்கையிலே கடந்த காலங்களில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்பதையும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கின்றது என்பதையும் அது தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்பதையும் மனிதாபிமான உரிமை பேணப்படாமை சார்பாகவும் இங்கு காணாமல் போனோர் சார்பாகவும் இந்த மக்கள் படும் துன்பங்கள் சார்பாகவும் தமிழ் நாட்டின் பலவிதமான உணர்வலைகள் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அடிக்கடி அந்த நாட்டின் முதல்வர் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் அது சார்பாக தங்களது அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில், தமிழ்நாட்டை உள்ளடக்கிய இந்தியா - இலங்கைத் தமிழ் மக்களின் துன்பியலை அறிந்திருந்தும் இந்த வேளையில் நடுநிலைக்கு சென்றிருப்பது மிகமிக வேதனைக்குரியது.

இந்தியாதான் இந்த பிரச்சினையை தீர்த்து வைக்கும் என்பதை இலங்கை தமிழ் மக்கள் நீண்டகாலமாக நம்பிக் கொண்டிருந்தது முக்கிய விடயமாகும்.

இந்தியாவின் நிலைப்பாடு குறித்து மக்கள் தங்களது அதிர்ச்சியை தெரிவிக்கின்றனர். குறிப்பாக இந்த முறை இந்தியா நடுநிலைக்கு வந்தது ஏனென்ற கேள்வி தமிழ் மக்களிடம் எழுந்து நிற்கி;றது.

இந்தியா கடந்த கால யுத்த சூழலிலே இலங்கைக்கு உதவி செய்தது. ஆயுதங்கள் உட்பட யுத்தத்திற்கான பல உதவிகளை இந்தியா இலங்கைக்கு வழங்கி இருக்கின்றது என்பதை யுத்தம் முடிந்த பின் இலங்கையின் அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்களும் இலங்கையின் தலைவர் உட்பட அனைவரும் தெரிவித்த நன்றி கூறலும் அதற்கு சான்றாக உள்ளன.

எதிர்காலத்தில் சர்வதேச விசாரணை என்ற ஒன்று வரும்போது தங்களைப் பாதிக்கும் தங்கள் சார்பாகவும் விசாரணை வரலாம் என்ற எண்ணப்பாங்கு இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

இரண்டாவது விடயம் 1987ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் ஒப்பந்தங்கள் வந்தபோது,  இந்தியா ஒப்பந்தத்தின் பின் தமது அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி இருந்தது.

அந்த அமைதிப்படையினால் இலங்கையிலே பல மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதனை இப்போது இலங்கையில் காணாமல் போனோர் பற்றி விசாரிக்கும் குழு ஆராய முற்படுகின்ற சூழல் உருவாகியிருக்கின்றது.

காணாமல் போனோரை கண்டறியும் இக்குழுவில் 1983ஆம் ஆண்டுக்கு பின்னராக இடம்பெற்ற கொலைகளும் ஆராயப்பட இருக்கின்றது.
இந்திய அமைதி காக்கும் படையணி இலங்கையில் இருந்த காலத்தில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்பது உண்மை.
இந்த விசாரணை வரும்போது தங்கள் நாட்டுக்கு அது பங்கமாக அமையலாம் என்பதனால் அவர்கள் நடுநிலை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றார்கள்.

அடுத்த படியாக இந்திய நாட்டில் தற்போது இருப்பது காங்கிரஸ் ஆட்சி. ஆகவே, இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி  தமிழீழ விடுதலைப் புலிகள் தான் கொன்றார்கள் என்ற சந்தேகம் இன்றுவரை இந்தியாவில் இருக்கின்றது.

ராஜீவ் காந்தியின் துணைவியார்தான் தற்போது காங்கிரஸின் தலைவராக இருக்கின்றார். அதன் நிமித்தம் இலங்கையிலே சர்வதேச விசாரணை வரும்போது அதிலே தாங்களும் பங்காளிகளாகி தங்கள் நாட்டுக்கும் அபகீர்த்தி ஏற்பட்டு விடக்கூடாது என்ற வகையில் அவர்கள் இலங்கை மீது காட்டுகின்ற கரிசனையில் ஓரளவு குறைத்துக் கொண்டு செல்லலாம்.

இவ்வாறு பலதரப்பட்ட விடயமாக இந்தியாவின் செயற்;பாட்டை நாம் நோக்க வேண்டிய சூழலில் இருக்கின்றோம்.
இன்றுவரை நாங்கள் இந்தியாதான் இலங்கை தமிழ் மக்களுக்கு நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய நாடு என்று கருதிக் கொண்டிருக்கின்றோம்.

இந்திய அரசாங்கம் நினைத்திருந்தால் இந்தியாவின் முன்னாள் மறைந்த  பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கையின் முன்னாள் மறைந்த  ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி இருக்கலாம்.

ஆனால், அவர்கள் சொல்லுகின்றார்கள் 13ஆவது அரசியல் சீர்திருத்தம் இங்கு அமுல்படுத்தப்பட வேண்டும் என்று மட்டும்தான். இந்தியப் பிரதிநிதிகளிடம் இலங்கை அரச தலைவர் அரசின் பிரதிநிதிகள் உட்பட அனைவரும் 13ஆவது சீர்த்திருத்தத்திற்கு அப்பால் இலங்கை தமிழ் மக்களுக்கு நாங்கள் அரசியல் உரிமையை வழங்குவோம் என்றெல்லாம் கூறினார்கள்.

ஆனால், இந்தியா கொண்டு வந்த அந்த ஒப்பந்தமே மாகாண சபை ஆட்சி முறையில் இன்னும் அமுல்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில், இன்னும் இந்தியா - இலங்கை விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கின்ற தன்மையாக இதை நாங்கள் காணமுடிகின்றது.

ஆகவே, இன்று இந்தியா நடுநிலைமைக்கு வந்திருப்பதை இட்டு இந்து மக்கள் சார்பாக கடந்த யுத்தத்திலே இங்கு கொல்லப்பட்டவர்கள், மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்டவர்கள், பெரும்பாலானவர்கள் வடக்கு கிழக்கில் இந்துக்கள் என்ற வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா தீர்மானத்தின் 25ஆவது கூட்டத்தொடரில் இந்தியா நடுநிலைமைக்கு வந்ததை இட்டு எனது கவலையைத் தெரிவிக்கின்றேன்.

இதையிட்டு எனது இந்து மக்கள் சார்பாகவும் நான் கவலையை தெரிவிக்கின்றேன். இதுசார்பாக இந்திய நாட்டின் இந்து மக்களுக்கும் எங்களது கவலை சுட்டிக்காட்டுகின்றோம்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X