2025 மே 15, வியாழக்கிழமை

தவறுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு உருவாக வேண்டும் : பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்,க.ருத்திரன்

தவறு ஒன்று எம்மால் ஏற்படுகின்ற போது மற்றவர்களை சாடாமல் நமது தவறுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு அனைவரிடத்திலும் உருவாக வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலக ஏற்பாட்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற ஒருங்கிணைப்பில் வாகரை மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற முதலாவது இளைஞர் மாநாட்டில் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு உரையாற்றுகையில் சனிக்கிழமை (26) தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர்,

இளைஞர்களை ஒன்றிணைத்து அவர்களது வெளிப்பாட்டைக் கொண்டு வருகின்ற இப்படியான ஒரு செயற்பாடானது எமது நாட்டின் ஜனாதிபதி யின்; மஹிந்த சிந்தனை அடிப்படையில் எமது நாட்டினை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றுகின்ற அந்த செயற்பாட்டிற்கு இளைஞர் யுவதிகளின் பங்களிப்பினை மேலும் வலுப்படுத்தும்.

இந்த நாட்டை நலமிக்க வளமிக்க பிரதேசமாக மாற்றக் கூடிய இந்த செயற்பாட்டின் ஒரு கட்டமாக பிரதேச செயலாளரின் தனிப்பட்ட முயற்சியாக இந்நிகழ்வு இடம்பெற்றிருக்கின்றது. இதற்கு அவருக்கும் எனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த நோக்கமானது யுத்தத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்டு சுனாமியால் அதிகம் பாதிப்புற்று மீண்டெழுவதற்காக தடுமாறிக் கொண்டிருக்கின்ற இந்த பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இளைஞர் யுவதிகளை சக்தி மிக்கவர்களாக மாற்றப்படவேண்டும் என்ற சிந்தனையில் உருவான முயற்சியாகத்தான் பார்க்கின்றோம்.

அந்தவகையில் இதனை நோக்கும் போது, எப்படை தோற்கின் இப்படை வெல்லும் எனும் அளவிற்கு இளைஞர்கள் குவிந்திருக்கின்றார்கள். நான் இங்கே சில சிந்தனைகளை உங்களுக்காக முன் வைக்கலாம் என நினைக்கின்றேன்.

ஒரு காரியம் நிகழுமாயின் நாம் அந்தக்காரியம் நிகழ்ந்து விட்டதாகவே கூறுகின்றோமே தவிர அதனை நிகழ்த்தியது நாம் என்பதை எவரும் சிந்திப்பது இல்லை. எமது மனப்பாங்கு, நாங்கள் விடுகின்ற தவறுகளுக்கும் எங்களால் இளைக்கப்படுகின்ற தவறுகளுக்கும் நாம் மற்றவரை சாட்டுகின்றோம்.

இதற்கான காரணம் என்னவென்று ஆராயும் போது, ஒரு தாய் தனது குழந்தை நிலத்தில் விழுந்து அடிபட்டு அழும் போது ஓடி வந்து அக்குழந்தையை அணைத்து நிலம் குழந்தைக்கு அடித்துவிட்டதாக நிலத்தில் அடித்து அக்குழந்தையை சமாதானப்படுத்துகின்றாள் அன்றிலிருந்து மற்றவர் மீது பழி போடும் மனப்பாங்கு எம்மிடத்தில் வளர்க்கப்படுகின்றது.

அதே நேரத்தில் இஸ்ரேலிய நாட்டுத் தாய்மார்கள் தமது குழந்தை தவறி விழுந்தால் திரும்பிக் கூட பார்ப்பதில்லை காரணம் தன்னுடைய குழந்தை தவறி விழுந்தால் அந்த வேதனையை குழந்தை ஏற்றுக்கொண்டு மீண்டும் எழ வேண்டும் என பயிற்றுவிக்கின்றாhள்.
எனவே எதாவது தவறு எம்மால் ஏற்படுகின்றபோது மற்றவர்களை சாடாமல் நமது தவறுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு அனைவரிடத்திலும் உருவாக வேண்டும் அப்போது தான் ஒளிமயமான சமுதாயம் எம் பிரதேசங்களில் மிளிரும்.

ஐரோப்பிய நாடுகளில் கைதிகளைத் துன்புறுத்துவதற்கு ஒரு வழியைக் கையாண்டார்கள் அதாவது கைதிகளில் உடலில் ஒரு டியூப்பை உள்ளிறக்கி அவர்களது இரத்தத்தை வெளியேற்றுவதன் மூலம் அவரைச் சித்திரவதை செய்வார்கள் இவ்வாறு சித்திரவதை செய்யும் போது அச்சத்தம் அனைவருக்கும் கேட்கும் வண்ணம் வைப்பர். 

இது மற்றவர்களுக்கு ஒரு பீதியை ஏற்படுத்தும்   எனவே ஜதார்தத்தமாக இடம்பெறும் நிகழ்வுகளை விட எமது எண்ணம் மிகவும் சக்தி வாய்ந்தது எமது மனதில் நாம் எதுவாக உருவாக எண்ணுகின்றோமே அந்த எண்ணம் எங்களை வழிநடத்துகின்றது.

எனவே எமது எண்ணம் என்பது சரியானதாக இருக்க வேண்டும் நல்ல எண்ணங்களை நாம் எம்முள் ஏற்படுத்திக் கொண்டால் தீய எண்ணங்கள் ஏற்படுவதோ அதன்வழி நடப்பதோ இடம்பெறாது என்பது ஆராய்ச்சியாளர்களின் ஆய்வாகும். எனவே இளைஞர்களாகிய நீங்கள் உங்கள் எண்ணங்களை சரியாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

எமக்கு முன்னால் நல்ல விடயங்களும் தீய விடயங்களும் இருக்கின்றன நல்ல விடயங்களைத் தெரிவு செய்யும் போது தான் எம் வாழ்வு சிறப்புறும். இன்று எமது மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர்களின் அறிக்கையில் இருந்து பெறக் கூடிய ஒரு விடயம் இலங்கையில் கூடுதலாக மதுபானம் விற்பனை செய்யப்படுகின்ற இடம் எமது மட்டக்களப்பு மாவட்டமாக இருக்கின்றது.

அதேபோல் போதைவஸ்த்து சிறுவர் துஸ்பிரயோகம் இள வயதுத் திருமணம், பெண்கள் வன்முறை, பாடசாலை இடைவிலகல், பாடசாலைக்குச் செல்லாமை என்று பல்வேறு பிரச்சனைகளுக்கு இம் மாவட்டம் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

இதற்கெல்லாம் காரணம் எமது எண்ணங்கள் சரியாக்கப்படவில்லை தீயவற்றைதான் நாம் முன்னுரிமைப்படுத்துகின்றோம். உனக்குள் இருக்கும் ஆளுமையை நீ எப்போது உணர்ந்து கொள்கின்றாயோ அப்போது தான் நீ உன் வாழ்வில் வெற்றி பெறுவாய் உன்னை நீ அறிந்து கொள் என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.

எனவே நம் இளைஞர்கள் சக்தி மிக்கவர்கள் ஆளுமையுடையவர்கள் எமது இளைஞர்கள் இவ்வாறாக மாற்றப்படவேண்டும் எனவே தான் அவர்கள் வாழ்வு வளம்பெறும். எமது இளைஞர்கள் பல துறைகளி;லும் ஊக்கம் காட்ட வேண்டும். எமது இளைஞர்களின் ஆற்றல் ஆளுமை என்பன வளர்வதற்கு நாம் எப்போதும் உறுதுணையாக இருப்போம்.

வாகரைப் பிரதேசத்திற்கு ஏனைய பிரதேச செயலகப்பிரிவுகளிலிருந்தே அரச உததியோகத்தர்களை நியமிக்கிறோம். இப்பிரதேசத்திற்கு வருபவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இடமாற்றம் பெற்றுச் சென்றுவிடுகிறார்கள். இவ்வாறான நிலையில் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

ஆனால் இந்த நிலையில் மாற்றம் ஏற்படுவதற்காக உங்களது பிரதேசங்களிலிருந்தே கல்வியாளர்களும், உத்தியோகத்தர்களும் உருவாகவேண்டும். அப்போதுதான் இப்பிரதேசத்தினை சிறப்பான, முன்னேற்றமடைந்த பிரதேசமாக மாற்றமுடியும். அதற்காக அனைத்து இளைஞர்களும் கல்வியில் சிறந்தவர்களாக மாறவேண்டும் என்ற திடசங்கற்;பத்துடன் தீவிரமாக செயற்பட வேண்டும்.

ஒரு காலத்தில் பல்கலைக்கழக உயர் கல்விகளுக்காக கொழும்பு, பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ். பல்கலைக்கழகத்திற்குச் செல்லவேண்டிய நிலை இருந்தது. ஆனால் உங்களுக்கு கிழக்குப் பல்கலைக்கழகம் உங்கது பிரதேசத்திலேயே இருக்கிறது. இந்தப் பல்கலைக்கழகத்திற்கு செல்ல ஏன் உங்களால் முடியாது.  நன்கு கல்வி கற்றவர்களாக உங்களது பிரதேசங்களில் சேவை செய்யக்கூடியவர்களாக மாறுங்கள். உங்களது ஆற்றல்கள், சக்திகள் திறமைகள் உங்கள் பிரதேசத்திற்குப் பயன்படட்டும்.

மாவட்டத்தின் இவ்வாறான பிரதேசங்கள் குறித்து மிகவும் அக்கறையாக இருக்கின்றோம். அண்மையில் நடைபெற்ற பொது நிருவாக அதிகாரிகளது கூட்டத்தில் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரிடம் கூறிய விடயம், அரச நியமனங்களின் போது பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விசேடமான முறைகளைக் கையாண்டு. அங்கிருந்து வருபவர்களுக்கு விசேட புள்ளி முறைகளைக் கையாண்டு நியமனங்களுக்குள் உள்வாங்க வேண்டும். இல்லாவிட்டால் இவ்வாறான பிரதேசங்களில் நிருவாகத்தினைச் செயற்படுத்த முடியாது என கேட்டுக் கொண்டேன். அதற்காக அறிக்கை ஒன்றை விரைவில் தயாரித்துக் கொடுக்கும்படி அவர் கூறியிருந்தார்.

எனவே இளைஞர்களாகிய நீங்கள் உங்கள் ஆற்றல்களை வளர்த்து, தூர நோக்குடன் செயற்பட்டு சக்தி மிக்க வளம் மிக்க சமூதாயமாக மாறவேண்டும்  என மேலும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .