2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பெரியமடுக் கிராமத்தில் மதுப் பாவனை ஒழிக்கப்படும்: உதயஸ்ரீதர்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பெரியமடுக் கிராமத்தில் சட்டவிரோத மதுப் பாவனையை ஒரு வாரத்தில் ஒழிப்பதற்கு தான் முழு முயற்சி எடுத்துள்ளதாக ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர் தெரிவித்தார்.

வறுமை தாண்டவமாடும் கிராமங்களில் வறுமைக்கு காரணமாக  மதுப் பாவனையே  உள்ளதாகவும் அவர் கூறினார்.

பெரியமடுக் கிராமத்தில் அக்கிராம அலுவலகர் வை.அரியராசாவின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை  (27) நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'சட்டவிரோத மது ஒழிப்பு விடயத்தில் பொலிஸாரின் ஒத்துழைப்பு முழுமையாக பெற்றுக்கொள்ளப்படும். அவர்களும் இக்கிராமத்தில் நிலவும் சட்டவிரோத மது தயாரிப்பு, விற்பனை, பாவனை ஆகியவற்றை ஒழிப்பதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில், பொதுமக்களாகிய நீங்களும் சட்டவிரோத மது ஒழிப்பில் பங்கெடுத்துக்கொள்வதோடு முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.

கிராம மக்கள் வறுமையிலிருப்பதற்கு மதுப் பாவனையே முக்கிய காரணமாக உள்ளது. ஆரோக்கியமான உணவுக்கும் கல்விக்கும் செலவிடுகின்ற பணம் மதுப் பாவனைக்குச் சென்றுவிடுவதால் குடும்பம் நிலை குலைந்து ஆரோக்கியம் குன்றி சீரழிந்து விடுகின்றது. உழைத்துக் களைத்து சம்பாதிக்கின்ற பணம் மதுப் பாவனைக்கு வீண் விரயமாக்கப்படுகின்றது.

கடலை நம்பித்தான் உங்களது வருமானம் இருக்கின்றது. அது பருவகால வருமானம். அதற்கு மாற்று வருமானங்களையும் நீங்கள் தேடிக்கொள்ள வேண்டும். நிலவளம், நீர்வளம் எல்லாம் நிறைந்த பிரதேசத்தில் நீங்கள் வாழ்கின்றீர்கள்.  எனவே, மாற்றுத் தொழில்களை குறிப்பாக வீட்டுத் தோட்ட விவசாயத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மதுப் பாவனையை உடனடியாக ஒழிப்பது மிக அவசியமும் அவசரமுமாகும்.' என்றார்.

இதேவேளை, பெரியமடுக் கிராம அலுவலகர் வை.அரியராசா இங்கு தெரிவிக்கையில்,

இது ஒதுக்குப் புறக்கிராமம். இக்கிராம மக்களின் நிலைமை வெளியுலகிற்கு தெரிவதில்லை. சுனாமி, யுத்தம், பெருமழை, வெள்ளம் என்பவற்றால் இக்கிராம மக்கள் அடிக்கடி பாதிப்பைச் சந்தித்து வந்;தபோதிலும், அவற்றை  வெளியுலகத்திற்கு கொண்டுவர ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் எவரும் இங்;கு வருவதில்லை.

ஆயினும், இப்பொழுது இக்கிராமத்திற்கு முதன் முறையாக ஊடகவியலாளர்கள் இருவர் வருகை தந்துள்ளனர். வருகை தந்துள்ள ஊடகவியலாளர்களுக்கு எமது கிராம மக்கள் சார்பில் மனப்பூர்வ நன்றிகள்.  வெளியுலகத்தால் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் இக்கிராமத்தை நீங்கள் வெளிக்கொண்டு வந்து இம்மக்களின் அபிவிருத்திக்கு உதவவேண்டும்'; என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X