2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கல்குடா கல்வி வளர்ச்சியில் தடை

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கல்குடா கல்வி வளர்ச்சியில் இலங்கை ஆசிரியர் சங்கம் ஒரு போதும் தடையாக இருந்ததில்லை. மாறாக கல்குடா கல்வி வலயத்தில் கடமையாற்றும் வினைத்திறனற்ற கல்விப் பணிப்பாளரும் தூரநோக்கற்ற அரசியல்வாதி ஒருவரின் சிபாரிசில் நியமிக்கப்பட்ட நிர்வாகத்திற்குப் பொறுப்பான வலய பிரதிக் கல்விப் பணிப்பாளருமே இதற்கு காரணமாணவர்களாவர் என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் பி.உதயரூபனினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அரசியலமைப்பு, தாபன விதிக் கோவைகளுக்கு முரணாகவும், கல்வியமைச்சின் சுற்று நிருபங்களுக்கு மாற்றமாகவும் செயற்பட்டுக்கொண்டிருக்கும் வினைத்திறனற்ற கல்விப் பணிப்பாளர், நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் அரசியல்வாதியுடன் சேர்ந்துகொண்டு அவர்களது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்படுகின்றனர்.

அதன் காரணமாக கல்குடா கல்வி வலயத்திலுள்ள அதிபர், ஆசிரியர்கள் வேட்டையாடப்படுகின்றனர். இதற்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நோக்கோடு எமது இலங்கை ஆசிரியர் சங்க மட்டக்களப்புக் கிளை செயற்பட்டு வருகின்றது.

கல்குடா கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் மற்றும் வலயத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் வினைத்திறனற்ற செயற்பாடுகள் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் பொறுப்புக் கூற வேண்டும்.

வலயப் பாடசாலைகளில் அரசியல் வாதியை அழைத்துக் கொண்டு செல்லும் நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளரின் செயற்பாடுகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இவ்வலயத்தில் இடம்பெறும் சனநாயக மறுப்பு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளை சீர்தூக்கிப் பார்த்து விசாரணைகளைத் துரிதமாக  மேற்கொள்ளுமாறு நாம் மனித உரிமைகள் ஆணைக்குழுவை வேண்டிக்கொள்கின்றோம்' என அவ்வறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X