2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

எமது காய் நகர்த்தலை மழுங்கடிக்க முடியாது: த.தே.கூ

Kogilavani   / 2014 மே 01 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'தமிழ் தேசியக் கூட்டமைப்பு இராஜதந்திர ரீதியாக காய்நகர்த்தி வருகின்றது. இதை ஒரு போதும் அரசாங்கத்தினால் மழுங்கடிக்கச் செய்யமுடியாது' என இலங்கை தமிழரசுக்கட்சியின் உப தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பொன் செல்வராசா தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பில் வியாழக்கிழமை (1) நடாத்திய மே தினக் கூட்டத்திற்கு தலைமைவகித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'சர்வதேச ரீதியாக இராஜ தந்திரத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு காய் நகர்த்தி வருகின்றது. அதை மழுங்கடிக்கச் செய்வதற்கு அரசாங்கம் பல்வேறு கோணங்களில் முனைந்த போதிலும் சர்வதேசமும் தமிழ் மக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இருப்பதால் அரசாங்கத்தினால் தமிழ் தேசியக் கூட்மைப்பின் நடவடிக்கைகளை மழுங்கடிக்கச் செய்யமுடியாது.

2012 மற்றும் 2103, 2014ம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில் இவ்வாண்டு இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் இலங்கை மீது சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதையொட்டி அரசாங்கம் இன்று கலையடைந்துள்ளது.  குறைந்து வரும் அரசின் வாக்கு வங்கியை எவ்வாறு அதிகரிக்கலாமம் என்பதற்காக அரசாங்கம் பல்வேறு தந்திரோபாயங்களை கையாண்டு வருகின்றது.

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் அடிப்படையில் சர்வதேச விசாரணை நடைபெற்றே தீரும். இதில் சர்வதேசம் உறுதியாகவுள்ளது.

பொதுநலவாய நாடுகளின் தலைவராக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருக்கும் வரைக்கும் கனடா வழங்கும் நிதியை  நிறுத்தியுள்ளது.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை மாநாட்டில் மத்திய கிழக்கிலுள்ள நாடுகளையும் ஆபிரிக்காவிலுள்ள சில நாடுகளையும் தவிர ஏனைய நாடுகளின் முழுமையான ஆதரவு தமிழ் மக்களுக்கே உண்டு என்பதை நாம் காண்கின்றோம்.

இங்கு அரசாங்கத்தோடு நின்று கூவித்திரிகின்ற சில அரசியல் வாதிகள் அரசுக்கு முட்டுக் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
எத்தனை நாட்களில் தேர்தல் வந்தாலும் எமது தமிழ் தமிழ் மக்கள் எம்முடனேயே நிற்பார்கள்.

இன்று இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லை, நாட்டில் சுதந்திரம் இல்லை. தொழிற்சங்க நடவடிக்கைகள் குறைந்து செல்கின்றன. இந்த நாட்டில் பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் ஏற்றமடைந்து செல்லும் நிலையில் அதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் பாரியளவில் தொழிற் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்ட போது அதற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை நடாத்தினர். அதேபோன்று விலை வாசி அதிகரிக்கப்பட்ட போது அதற்கும் ஆதரவாக சில தொழிற் சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது இலங்கையில் மாத்திரம் தான்.

நாங்கள் நடத்தும் மேதினக் கூட்டத்தை வேறு ஒரு மண்டபத்திற்கு மாற்றியுள்ளதாக சிலர் துண்டுபிரசுரங்களை இரவோடு இரவாக விநியோகித்ததுடன் எமது கட்சியின் முக்கிஸ்த்தர்கள் சிலருக்கும் குறுந்தகவர்களையும் அனுப்பியுள்ளனர்.

இது இங்கு ஜனநாயகம் இல்லை என்பதை காட்டுகின்றது. அதேபோன்று எமது தமிழரசுக்கட்சியின் 14ஆவது மாநாடு மட்டக்களப்பில் நடைபெற்ற போது கறுத்த கொடிகளை கட்டி எமது மாநாட்டுக்கு குந்தகம் விளைவித்தனர்.

துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டனர். எமது மாநாட்டுக்கு வருகை தந்தவர்களின் வாகனங்களை கல்வீசி தாக்கினர். இவையனைத்தையும் செய்த போதிலும் கடந்த ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபை தேர்லின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறுதிப் பொரும்பான்மையைப் பெற்றுவெற்றி பெற்றது.

அம்பாறை மாவட்டத்திலும் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே ஆதரித்தனர்.

இதே போன்றுதான் வட மாகாணத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரும் வெற்றியை யீட்டியது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது ஜனநாயக ரீதியாக தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது' என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X